

இந்திய தத்துவ அறிஞரான ரஜ்னீஷ் சந்திர மோகனின் (ஓஷோ) பிறந்தநாள் (டிசம்பர் 11) இன்று. அவரை பற்றிய அரிய முத்துக்கள் 10:
# மத்திய பிரதேசத்தில், குச்வாடா என்ற சிற்றூரில் பிறந்தவர். பட்டப் படிப்பில் அகில இந்திய அளவில் தங்கப் பதக்கம் வென்றவர். சாகர் பல்கலைக்கழகத்தில் தத்துவப் பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றார். சிறுவயது முதலே தியானத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார்.
# ராய்ப்பூரில் உள்ள சமஸ்கிருத கல்லூரியில் தத்துவத் துறை பேராசிரியராக பணியாற்றினார். ஒன்பது வருட பணிக்குப் பிறகு, அந்த வேலையை ராஜினாமா செய்தார். மனித குலத்தின் விழிப்புணர்வு நிலையை உயர்த்தும் லட்சியத்துடன் புனே நகரில் ஆஸ்ரமம் நிறுவினார்.
# யோகா, ஜென், தாவோயிசம், தந்த்ரா மற்றும் சூஃபியிசம் உள்ளிட்ட அனைத்து விதமான தத்துவங்களை எளிமையாகவும் சுவாரஸ்யமாகவும் விவரித்து, ஆன்மிகத்தில் உயர்நிலையை எட்டுவதில் ஆர்வம் கொண்ட சீடர்களுக்கு வழிகாட்டினார். ஏறக்குறைய 15 வருடங்கள் இவர் உரையாற்றியுள்ளார்.
# டைனமிக் தியான முறையை அறிமுகம் செய்தார். ஏராளமான தியான முகாம்களை நடத்தினார். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் இவரை நாடி சீடர்கள் குவிந்தனர், ரஜனீஷ் என்று போற்றப்பட்டார்.
# இவரது உரைகள் 600க்கும் மேற்பட்ட தொகுதிகளாக நூல் வடிவம் பெற்றுள்ளன. இவை 50க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. காதல், பொறாமை, தியானம், ஆன்மிகம், அரசியல், மனித மனோபாவங்கள், உடல், மனம், ஆன்மா, சொர்க்கம், நரகம் ஆகியவை குறித்து இவர் விளக்கமளித்த கேள்வி-பதில் அமர்வுகள் 40 புத்தகங்களாக வெளிவந்துள்ளன.
# புத்தர், ஏசு, நபிகள் நாயகம், ஆகியோரின் வாழ்க்கையில் நடந்த பல்வேறு அரிய சம்பவங்களையும் மனித குல மேம்பாட்டுக்கு வழிகாட்டும் முன்னுதாரண நிகழ்வுகளையும் தெள்ளத் தெளிவாகவும், எளிமையாகவும் விவரித்துள்ளார்.
# அமெரிக்காவின் ஒரேகான் என்ற இடத்தில் பாலைவனமாக இருந்த 64 ஏக்கர் நிலத்தை இவர் சீடர்கள் வாங்கினர். விவசாய கம்யூனாக அது மாற்றப்பட்டது. ரஜனீஷ்புரம் உருவானது. அங்கே 5000 பேர் வசித்தனர்.
# அரசியல், மதம் சம்பந்தமான புரட்சிகரமான கருத்துக்களை பரப்பியதால் மேற்கத்திய நாடுகளின் எதிர்ப்புக்கு ஆளானார். இதனால், வெகு விரைவில் இந்த கம்யூன் அமெரிக்காவின் புகழ்பெற்ற ஆனால், சர்ச்சைக்கு இடமான ஆன்மிகக் குடியிருப்பாக மாறியது.
# 1985ல் அமெரிக்க அரசு ஏதோ காரணம் காட்டி இவரை கைது செய்தது. சிறையில் அவருக்கு ‘தாலியம்’ என்ற மெல்லக் கொல்லும் கொடிய விஷம் செலுத்தப்பட்டதாக இவரது சீடர்கள் குற்றம்சாட்டினர். விடுதலைக்குப் பிறகு, இவர் இந்தியா வருவதற்கு 21 நாடுகள் தடைவிதிக்கப்பட்டது. இறுதியாக, 1987ல் தனது பூனா ஆஸ்ரமம் திரும்பினார்.
# 1989ல் சீடர்கள் ‘ஓஷோ’ என்று இவரை அழைக்கத் தொடங்கினர். மதம் என்ற பெயரில் தங்களது சொந்த ஆதாயத்துக்காக மூடத்தனங்களைப் பரப்புவோருக்கு எதிராக வாழ்நாள் முழுவதும் குரல் கொடுத்த ஓஷோ 59-ஆவது வயதில் காலமானார்.