கழுகுக் கோட்டை 22: இளவரசியின் விருந்தோம்பல்

கழுகுக் கோட்டை 22: இளவரசியின் விருந்தோம்பல்
Updated on
2 min read

மன்னர் சங்கடசேனனுடன் பேசிக்கொண்டிருந்த குணபாலனை அங்கு எதிர்பார்த்திராத இளவரசி மதிவதனிக்கு திடீரென குணபாலனைக் கண்டதும் முதலில் ஆச்சரியமாகத்தான் இருந்தது. அவனைத் துரத்திச் சென்ற வீரர்களின் பிடியில் அகப்படாமல், அந்த மலைச்சிகரத்திலிருந்தே குதித்தவன் ஆயிற்றே? அப்போதே அவன் உயிர் பிழைத்தானோ இல்லையோ என்று பதறிப் போனது இளவரசி மதிவதனியின் மனம். இப்போதும் இவனுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால், இந்த முறை அவன் கேட்காமலேயே தன்னாலான உதவிகளைச் செய்வது என்று முடிவெடுத்தாள்.

அவன் விடைபெற்றுச் செல்வதைக் கண்ட அவள் தன் தந்தையை நோக்கி, தூது கொண்டுவந்த தூதுவரை வெறும் கையோடு அனுப்பலாமா? அப்படியானால், நம்மைப் பற்றி தூது அனுப்பிய பக்கத்து நாட்டு அரசர் என்ன நினைப்பார்? என்று கேட்டாள். அப்படியே அவனை நோக்கி, தூதனே, எங்கள் நாட்டு விருந்தோம்பலைக் கேள்விப்பட்டு இருக்கிறாயா? பரவாயில்லை. இப்போது நேரிலேயே பார்க்கலாம் என்றாள். மேற்கொண்டு அவள், யாரங்கே? என்றதும் இரண்டு தாதிப் பெண்கள் ஓடோடி வந்தனர். அவர்களிடம், நமது அரண்மனைக்கு வந்த இந்த விருந்தினரை விருந்து மண்டபத்துக்கு அழைத்துச் சென்று பசியாற்றுங்கள். மேலும் அவர் கேட்பதைக் கொடுத்து அனுப்புங்கள் என்றாள்.

இளவரசி அப்படிச் சொன்னதும் மன்னரால் மறுத்து ஏதும் கூற இயலவில்லை. வேண்டா வெறுப்பாக திருத்தோன்றியிடம் திரும்பி, இவனை கவனித்து அனுப்பிவை என்பது போல் கண்களால் சைகை காட்டி அந்த இடத்தை விட்டுச் சென்றார். மன்னர் அந்த இடத்தை விட்டுச் சென்றதும் அங்கு நின்றிருந்த திருத்தோன்றி விருந்து மண்டபத்தை நோக்கி முன்னால் சென்றார். அவரின் பின்னாலேயே குணபாலனும் தாதிப் பெண்களும் சென்றனர். சற்று இடைவெளி விட்டு அவர்களுக்குத் தெரியாமல் இளவரசி மதிவதனியும் மஞ்சரியும் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றனர். தூதுவனாக வந்திருக்கும் குணபாலனிடம் வேறு ஏதோ ரகசியம் இருக்கிறது. அது என்ன என்பதைத் தெரிந்துகொள்ள இளவரசிக்கும் மஞ்சரிக்கும் ஆவலாய் இருந்தது.

ஆனால், குணபாலனை நெருங்கிச் சென்று அவன் அங்கு வந்ததன் நோக்கம் குறித்துக் கேட்கவும் திருத்தோன்றி தடையாய் இருந்தார். மேலும் அரண்மனைப் பெண்டிரான அவர்கள் ஒரு தூதுவனிடம் அதற்கு மேல் நெருங்கிச் சென்று பேசவும் அவர்களின் அந்தஸ்து தடுத்தது. சரி இன்னொரு நாள் இவனை சந்திக்க நேர்ந்தால், அதுபற்றி விசாரிக்கலாம் என்று கௌரவமாக அந்த இடத்தை விட்டு இருவரும் அகன்றுச் சென்றனர். ஆனால், அவர்கள் குணபாலனைப் பின்தொடர்ந்து வந்ததையும் பிறகு விலகிச் சென்றதையும் குணபாலன் நன்றாகவே கவனித்துக்கொண்டான். மேலும் தனக்கு வழங்கப்பட்ட விருந்தை விரைவாகவே சாப்பிட்டு முடித்துக் கிளம்ப ஆயத்தமானான்.

திருத்தோன்றியும் வேறு வழியின்றி அவனை வழியனுப்பத் தயாரானார். சரி, சரி கிளம்பு என்றார். குணபாலனோ, என்ன தளபதியாரே, அரண்மனைக்கு வந்த ஒரு விருந்தினரை இப்படியா வெறும் கையோடு அனுப்புவீர்கள்? என்றான். திருத்தோன்றிக்கு உள்ளூர கோபம் இருந்தாலும் அதனை வெளியில் காட்டிக்கொள்ளாமல், என்ன விருந்தாளியா? உனக்கு வேறு என்ன வேண்டும்? என்றார். வழியில் பசியாறிச் செல்ல சில பழங்களும் பட்சணங்களும் வேண்டும். அதோ அங்கு உலாவும் அந்த புறாக்களில் சில கொடுத்தாலும், இளவரசியின் பரிசில்களாக ஏற்று மகிழ்வேன் என்றான் குணபாலன் சிரித்த முகத்துடனேயே. திருத்தோன்றியும் தாதிப் பெண்களின் முன்பாக எதையும் வெளிக்காட்ட இயலாமல் அப்பெண்களிடம், இவன் கேட்டதை விரைவாகக் கொடுத்து அனுப்புங்கள் என்றார்.

எல்லாவற்றையும் பெற்றுக்கொண்டு அரண்மனையை விட்டு வெளியே வந்த குணபாலன் தனது குதிரை அருகே வந்தான். திருத்தோன்றியும் அவன் பின்னாலேயே வந்து ஒரு சேவகனிடம் ஏதோ ரகசியமாய் பேசினார். அதைஓரக்கண்ணால் கவனித்த குணபாலன் சிறு புன்னகையுடன் குதிரையின் மீதுஏறிப் புயலென புறப்பட்டான். திருத்தோன்றியிடம் பேசிய சேவகனோ இன்னும் சில வீரர்களுடன் அரண்மனைக் குதிரையில் ஏறி குணபாலனைப் பின்தொடர்ந்தான். அந்த நகர வீதிகளிலும் குணபாலனின் குதிரையோ மிகுந்த வேகத்தில் பாய்ந்து சென்றது. அதனால் அவனைப் பின் தொடர சேவகனும் வீரர்களும் திணறிப்போனார்கள். அதைப் பார்த்த குணபாலன் தனது குதிரையின் வேகத்தை சற்றுக் குறைத்தான்.

உடனே அவனைப் பின்தொடர்ந்தவர்களும் தங்களது வேகத்தை சற்று குறைத்துச் சென்றார்கள். எல்லாம் அந்த நகர எல்லை வரைதான். அந்த நகரஎல்லை முடிந்ததும் வானம் பார்த்த பூமியும் சிறு குன்றுகளும் வந்தன. அங்கேயும் சீரான வேகத்தில் சென்றுகொண்டிருந்தான் குணபாலன். அடுத்ததாக ஒரு வனம் தென்பட்டது. அந்த வனத்தினுள் நுழைந்த உடனே குணபாலனின் குதிரை மின்னல் வேகத்தில் புறப்பட்டது. பின்னால் வந்தவர்களும் வனத்திற்குள் தங்களது குதிரைகளைச் செலுத்தி குணபாலனைத் தேடினார்கள். ஆனால், அவனும் அவனது குதிரையும் எங்குமே தென்படவில்லை. மாறாக, அவனது குதிரை செல்லும் ஓசை மட்டும் கேட்டது. அதுவும் சில நிமிடங்களில் பல குதிரைகள் வெவ்வேறு திசைகளில் ஓடும் சத்தம் கேட்டது. திருத்தோன்றியின் சேவகனோ குழம்பிப் போய் நின்றான்.

- தொடரும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in