

இயல்பான வாழ்க்கைக்கும், பள்ளிக்கூட வாழ்க்கைக்கும் இடையே இருக்கும் இடைவெளி பல நேரம் குழந்தைகளிடம் பெரும் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இது கல்வியின் மீதும் ஏன் தன் மீதுமே நம்பிக்கையின்மையை ஏற்படுத்திவிடுகிறது. அத்தகைய சூழல்கள் எவையெவை? அச்சூழல்கள் மாணவர்களிடம் ஏற்படுத்தும் தாக்கங்கள் என்னென்ன? பார்ப்போம். பள்ளிக்கு வெளியே நன்றாகப் பேசக்கூடியவர். விளையாடக்கூடியவர். நன்றாகப் பழகுபவர். ஆனால், வகுப்பில் ஆசிரியர்கள் கேட்கும் கேள்விகளுக்கு எதற்கும் பதில் அளிக்க மாட்டார். ஆசிரியர்கள் பலர் விசாரித்தும் பலனில்லை.
தெரிந்து கொண்டே கேட்டால்? - பெற்றோர்களாலும் காரணத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. பிறகு உளவியல் வல்லுநரிடம் சென்றோம். அவர் சிரித்துக்கொண்டே பிரச்சினை யாருக்கு என்பதுதான் பிரச்சினையே என்றார். மேலும் எங்களிடம் நீங்கள் எப்போது கேள்வி கேட்பீர்கள்? என்று கேட்டார். தெரியாததைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என நினைத்தால் கேள்வி கேட்போம் என்றேன். மிகச் சரி. அப்படியானால் தெரிந்துவைத்துக் கொண்டே கேட்டால் யாராவது பதில் சொல்வார்களா? என்று உடல் குலுங்கச் சிரித்தார். ஆசிரியர்கள் பதில் தெரிந்து வைத்துக்கொண்டே கேட்கிறார். எதற்கு நான் பதில் சொல்ல வேண்டும் அந்த மாணவன் முடிவு செய்து விட்டார். அதனால் அவர் வகுப்பில் மௌனமாக இருக்கத் தொடங்கிவிட்டார்.
இச்செயலின் மறுபக்கத்தைப் பார்ப்போம். அடிக்கடி குழந்தைக்குத் தெரிந்ததா, புரிந்ததா என்று பரிசோதிக்க வேண்டிய தேவையென்ன? ஒன்று குழந்தைக்குப் புரியாது என்று நாமே முடிவு செய்துவிட்டோம். அல்லது நம் கற்பித்தல் முறையில் நமக்கே நம்பிக்கையில்லை. அல்லது குழந்தையின் செய்கை மற்றும் நடத்தை வழியாக மதிப்பிட நமக்குத் தெரியவில்லை என்பதுதானே.
எதற்காக வாசிக்க வேண்டும்? - பொதுவாக ஆசிரியர் மொழிப்பாடத்தை இரண்டு முறை விளக்கிச் சொல்வார், பிறகு இரண்டு முறைவாசித்துக்காட்டுவார், அருஞ்சொற்பொருள் விளக்கம் சொல்லுவார், கேள்வி பதில் எழுதிப் போடுவார். அலகுத் தேர்வது நடத்துவார். இதன் ஒவ்வொரு நிலையிலும் பாடக்கருத்தை விளக்கிச் சொல்லிக்கொண்டே இருப்பார். இறுதியில் நாளை வரும்போது இந்தப் பாடத்தைப் படித்து வாருங்கள் என்று சொல்லுவார். அதைக் கேட்கும்போது மாணவர்களின் இதழோரம் ஒரு கேலிப்புன்னகை விரியும். நான்கு முறை கேட்ட பாடத்தை மீண்டும் எதற்கு நான் வாசிக்க வேண்டும் என்ற எண்ணத்தின் வெளிப்பாடுதானே அந்தப் புன்னகை.
சுமையினும் சுமை: பாடப்புத்தகச் சுமையைப் பற்றி எத்தனையோ பேர் எத்தனையோ முறை குமுறியிருக்கிறார்கள். அதே நேரத்தில் சில செயல்பாடுகளுக்காக குழந்தைகள் பல பொருட்களைச் சுமக்க முடியாமல் சுமந்து வந்திருக்கிறார்கள். ஒருமுறை ஏழாம் வகுப்பில் ஆசிரியர் கரும்பலகையில் கேள்வி-பதில் எழுதினார். அப்போது ஒரு மாணவி ம்ஹும் என்று கேலியாக முனகினாள். ஏன் அப்படிச் செய்தாய்? என்று கேட்டபோது ஒன்று எங்களிடம் குறிப்பேடுகளை மட்டும் வாங்கச் சொல்லுங்கள். புத்தகம் உங்களிடம் மட்டும் இருக்கட்டும்.
அப்படியானால் நீங்கள் எழுதுவதை பார்த்து நாங்களும் எழுத தேவை இருக்கும். அல்லது நாங்களும் புத்தகம் மட்டும் கொண்டு வருகிறோம். நீங்கள் பதி்ல்களைக் குறித்துத் தந்தால் போதுமே. அதைவிடுத்து புத்தகத்தில் உள்ளதையே ஏன் குறிப்பேட்டில் எழுத வேண்டும்? என்று கேட்டாள். அசடு வழிந்த ஆசிரியர் கரும்பலகையை நோக்கி திரும்பிக்கொண்டே இதோ பாருங்கள். இந்த 3, 5, 7, 8 கேள்விகள் மிகவும் முக்கியமானவை என்றார். உடனே ஒரு மாணவன் இவை மட்டும் முக்கியமானவை என்றால் அந்த முக்கியமில்லாதவற்றை ஏன் எழுதினீர்கள்? என்று கேட்டார். ஒருமுறை எழுதினால் பத்துமுறை படிப்பதற்கு சமம் என்று பல காரணங்களை நாம் கூறினாலும் குழந்தைகளின் மனங்களில் அந்த இடைவெளி இருந்துகொண்டே இருக்கிறது.
- கட்டுரையாளர்: மூத்த கல்வியாளர், கல்வி இயக்குநர், ‘Qrius Learning Initiatives’, கோவை. தொடர்புக்கு: rajendran@qrius.in