

கருப்பைவாய் புற்றுநோயால் நிமிடத்துக்கு ஒரு பெண்ணை இழந்து வருகிறோம் என்று கடந்த வாரம் எழுதியதை படித்துவிட்டு, அப்படியானால் ஹெச்பிவியை வேரோடு ஒழிக்க முடியாதா என்று வேதனையோடு கேட்டிருக்கிறார் வாசகர் ஒருவர்.
மனிதர்களிடையே அவர்களது சருமத்தில் இயல்பாக வசிக்கும் ஒரு வைரஸ்தான் இந்த ஹெச்பிவி. ஆகையால் இதனை முற்றிலும் ஒழிக்க முடியாது. என்றாலும், இது ஏற்படுத்தும் நோய்த்தொற்றையும் அதன் பாதிப்புகளையும் நிச்சயம் நம்மால் தவிர்க்க முடியும். ஹெச்பிவி வேக்சின் எனும் உயிர் காக்கும் ஆயுதத்தை நாம் அதற்கு பயன்படுத்த வேண்டும்.
ஹெச்பிவி நோய்த்தொற்றைத் தவிர்த்தால் நிச்சயம் புற்றுநோயிலிருந்து தப்ப முடியுமா, தடுப்பூசிகள் நன்கு பலனளிக்குமா போன்ற சந்தேகங்கள் எழக்கூடும். பொதுவாக ஹெச்பிவி வைரஸ்களின் தாக்கம், reproductive age எனப்படும் இனப்பெருக்க காலத்தில் உள்ள பெண்களை, குறிப்பாக 20-40 வயதிற்குட்பட்டவர்களை அதிகம் பாதிக்கிறது. ஆகையால் இந்த நோய்த்தொற்று வருமுன் காப்பது, அதாவது திருமண பந்தத்திற்கு முன்பாகவே தடுப்பூசி செலுத்துவது அவசியமாகிறது.
அதிலும் ஹெச்பிவி தடுப்பூசி, மற்ற தடுப்பூசிகளைப் போல உடலுக்குள் நோயை உண்டாக்காமல், நோயெதிர்ப்புத் திறனை நேரடியாக வழங்குகிறது. ஆகையால் இது 99.7% வரை வைரஸ் நோய்த்தொற்றைத் தடுக்கிறது என்றும், 90% வரை கருப்பைவாய் புற்றுநோயைத் தடுக்கிறது என்றும் இதுவரை வெளிவந்த மேற்கத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒரு நோய்த்தொற்றைத் தடுத்தால் புற்றுநோயைத் தவிர்க்க முடியும் என்பதற்கு ஹெச்பிவி வேக்சின் ஓர் மிகச்சிறந்த எடுத்துக்காட்டு.
அடுத்து, எந்த வயதிலிருந்து, எத்தனை முறை இந்த வேக்சினை செலுத்த வேண்டும் என்கிற கேள்வியை அந்த வாசகர் கேட்டிருந்தார்.
பொதுவாக ஹெச்பிவி வேக்சின், இரண்டு தடுப்பூசிகளாக ஆறு மாத இடைவெளியில் ஒன்பதிலிருந்து பதினான்கு வயது வரை உள்ள பெண் குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது. அதேசமயம் 15-21 வயது வரை, மூன்று முறை இதுவரை வழங்கப்பட்டு வந்தது. உலக சுகாதார அமைப்பின் சமீபத்தியப் பரிந்துரைப்படி ஒன்று அல்லது இரண்டு தடுப்பூசிகளை திருமண பந்தத்திற்கு முன் அனைவருக்கும், அதாவது 9-21 வயது வரை அனைவருக்கும் வழங்கிட அறிவுறுத்தப்படுகிறது. பெண்களைப் போலவே ஆண்களுக்கும் இது பல்வேறு புற்றுகளைத் தடுப்பதால், இருபாலருக்கும் ஹெச்பிவி வேக்சின் பரிந்துரைக்கப்படுகிறது.
(ஹெச்பிவி வேக்சின் ஆலோசனை தொடரும்)
கட்டுரையாளர் : மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர்.
தொடர்புக்கு: savidhasasi@gmail.com