

ஒருநாள், ஃபிரான்சிஸ் பேக்கனுக்கு ஒரு விசித்திர யோசனைத் தோன்றியது. மாமிச உணவைக் குளிர்பதனம் செய்வதன்மூலம் வெகுநாட்கள் அதைக் கெட்டுப்போகாமல் பாதுகாக்கமுடியுமா என்று தனக்குள் ஒரு கேள்வி எழுப்பினார். கி.பி.1626ஆம் ஆண்டு அது.
கேள்விக்கு விடை காணும் வண்ணம், ஓர் இறந்த கோழியைக் கையில் எடுத்துக் கொண்டு பனிப்பொழியும் லண்டன் வீதியில் நடந்து சென்றார். கொட்டும் பனியைப் பொருட்படுத்தாமல், கோழி இறைச்சியைப் பனியால் போர்த்தி தன் ஆராய்ச்சியை மேற்கொண்டார். கடும் பனிக்கு ஆட்பட்ட ஃபிரான்சிஸ் பேக்கன், அடுத்த சில நாட்களில் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிர் நீத்தது வரலாறு.
புலனுக்கு வெளிப்படையாகும் ஆய்வின் மூலமே அறிவியல் ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும் என்றதோடு அதன் பரிசோதனையில் உயிர் துறந்த ஒப்புயர்வற்ற ஆளுமை அவர். தத்துவ உலகில் விஞ்ஞான ஆராய்ச்சியின் மகத்துவத்தை முன்னிறுத்திய முன்னோடி.
சட்டப் படிப்பும் அரசு வேலையும்
லண்டன் மாநகரில் கி.பி. 1561ஆம் ஆண்டு பேக்கன் பிறந்தார். அவரின் தந்தை எலிசபெத் மகாராணியின் அவையில் உயர் பதவியில் அங்கம் வகித்தவர். டிரினிட்டி கல்லூரியில் சேர்ந்து பாடம் பயின்ற பேக்கன், தன் 15-வது வயதில் அங்கிருந்து பட்டம் பெறாமல் வெளியேறினார். அடுத்த மூன்றாவதாண்டில் பேக்கனின் தந்தை இறந்துபோனதால், குடும்பப் பொறுப்பை ஏற்று, சட்டம் பயின்று காமன்ஸ் சபையில் உறுப்பினராகச் சேர்ந்தார்.
எலிசபெத் மகாராணி கொண்டுவந்த சட்ட வரைவுக்கு பேக்கன் பலத்த எதிர்ப்பு தெரிவித்ததால், இவரின் திறமைக்கேற்ற பெரும் பொறுப்புகள் கொடுக்கப்படாமல் அலைக்கழிக்கப்பட்டார். மகாராணியின் மரணத்திற்குப் பிறகு ஆட்சிக்கட்டில் ஏறிய முதலாவது ஜேம்ஸ், பேக்கனுக்குப் படிப்படியாக பதவி உயர்வு வழங்கினார். இறுதியாக இங்கிலாந்தின் உயர் ஆட்சித் தலைவர் பொறுப்பும் இவரைத் தேடி வந்தது. கிட்டத்தட்ட அமெரிக்காவின் முதன்மை நீதிபதி பொறுப்புக்கு நிகரான பதவி இது.
அரசியல் வாழ்வின் அஸ்தமனம்
அடுத்தடுத்து பதவி உயர்வு வந்தபோதும், பேக்கன் அதைத் தக்கவைக்கவில்லை. தேச நலனுக்கு எதிராகக் கையூட்டு பெற்றதால், இவரின் பதவி பறிக்கப்பட்டது. லண்டன் டவர் சிறையில் சிலகாலம் அரசியல் கைதியாக அடைத்து வைக்கப்பட்டார். பேக்கனின் அரசியல் வாழ்க்கை இறுதி அத்தியாயத்தைத் தொடங்கிய போதுதான், அவரின் ஈடு இணையில்லா வாழ்வின் மற்றொரு அத்தியாயம் ஒளிவிடத் தொடங்கியது.
‘மாபெரும் புத்தாக்கம்’ என்ற பெயரில் ஆறு தொகுப்புகளாக தான் ஒரு தத்துவ நூல் எழுத வேண்டும் என்று பேக்கன் விரும்பினார். அதனொரு பகுதியாக கி.பி.1605இல் ‘கற்றலில் ஏற்படும் முன்னேற்றம்’ (The Advancement of Learning) என்ற நூலையும் கி.பி.1620இல் ‘புதிய கருவி’ (New Instrument) என்ற நூலையும் எழுதினார்.
தத்துவ உபதேசங்கள் தொடங்கின
‘அறிவாற்றல் என்பது ஒன்றில் தொடங்கி, யூகத்தின் அடிப்படையில் மற்றொன்றை கண்டடைவது அல்ல. நம் பயணத்தின் இறுதியில் சென்றடைவது’ என்றார் பேக்கன். அறிவியலும் விஞ்ஞானமும்தான் உலகை மாற்றப் போகிறது என்று முதன்முதலில் உணர்த்திய தத்துவ அறிஞரும் இவரே. ‘தி நியூ அட்லான்டிஸ்’ எனும் தன் இறுதிப் புத்தகத்தில் கூட, அறிவியல்பூர்வ ஆராய்ச்சிகள் மட்டும்தான் ஐரோப்பிய மக்களை மேன்மையடைச் செய்யும் என்று ஆணித்தரமாக வாதிட்டார்.
‘வரலாறு படிப்பதன் மூலம் நீங்கள் பாண்டித்தியம் பெறலாம். கவிதைகளின் வழிக் கற்பனாவாதி ஆகலாம். கணிதத்தின் மூலம் தந்திரங்கள் கற்கலாம். அறிவியல் பாடத்தால் நுண்மான் நுழைபுல ஆற்றல் பெறலாம். நீதிபோதனை, இலக்கணப் பாடங்களால் தீவிரச் சிந்தனையும் சொல்லாட்சித் திறமும் கைக்கூடலாம்’ என்ற புகழ்பெற்ற வாசகத்தின் மூலம் பேக்கனின் தெளிந்த பார்வையைப் புரிந்துகொள்ள முடிகிறது.
(பேக்கனை மேலும் அறிவோம்)
கட்டுரையாளர்: எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், ஆய்வு மாணவர்.
தொடர்புக்கு: iskrathewriter@gmail.com