நீங்க ‘பாஸ்' ஆக வேண்டுமா?-52: கடனை அடைக்க 5 அற்புதமான வழிகள்

நீங்க ‘பாஸ்' ஆக வேண்டுமா?-52: கடனை அடைக்க 5 அற்புதமான வழிகள்
Updated on
2 min read

கடன் எந்த ரூபத்தில் இருந்தாலும் அது கடன் தான். அதனை சீக்கிரம் அடைக்க வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் மனதின் ஓரத்தில் உறுத்திக்கொண்டே இருக்கும். அது நல்ல கடனாக இருந்தாலும் சரி, கெட்ட கடனாக இருந்தாலும் சரி, உடனடியாக கட்டிவிடுவது நல்லது. இல்லாவிடில் கடன் வட்டி போட்டு, வட்டி குட்டிப்போட்டு பிரச்சினை தலைக்கு மேல் போய்விடும்.

நமது நாட்டில் பங்குச்சந்தை முதலீடு, பரஸ்பர நிதி ஆகியவற்றுக்காக நிறைய பேர் நிதி ஆலோசகர்களிடம் ஆலோசனை கேட்கிறார்கள். ஆனால், கடன் பிரச்சினை என்றால் யாரிடமும் ஆலோசனை கேட்பதில்லை. அதனை யாருக்கும் சொல்லாமல் உள்ளுக்குள்ளே போட்டு புழுங்கி கஷ்டப்படுகிறார்கள்.

ஆலோசனை முக்கியம்

ஆனால், வெளிநாடுகளில் முதலீட்டை காட்டிலும் கடன் பிரச்சினைகளுக்காகவே நிறைய பேர் நிதி ஆலோசகர்களை அணுகுகிறார்கள். அதனால் அங்கு கடன் பிரச்சினையால் குடும்பத்தோடு தற்கொலை செய்பவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. எனவே கடன் பிரச்சினையில் இருக்கும்போது தயங்காமல் உடனடியாக நிதி ஆலோசகரை அணுகி, அதனை தீர்ப்பதற்காக திட்டங்களை தீட்ட வேண்டும். அவ்வாறு செய்தால் பண பிரச்சினையில் இருந்து மட்டுமல்லாமல் மன பிரச்சினையில் இருந்தும் மீள முடியும்.

கடனை அடைக்க 5 அற்புதமான திட்டங்களை நிதி ஆலோசகர்கள் பட்டியலிடுகிறார்கள். அவை பின்வருமாறு:

1. வட்டி விகிதத்தின்படி பட்டியலிடுங்கள்

முதலில் உங்களது அனைத்து கடன்களையும் பட்டியலிடுங்கள். பின்பு அதனை வட்டி விகிதத்தின் அடிப்படையில் தரவரிசைப்படுத்துங்கள். இதில் கெட்ட கடன், ஆபத்தான கடன், பாதுகாப்பற்ற கடன் என குறிப்பிடப்படும் ஆன்லைன் செயலி கடன், கிரெடிட் கார்ட் கடன், தனிநபர் கடன் ஆகியவற்றை முதலில் எழுதுங்கள். இந்த கடன்களை அடைப்பதற்கு முன்னுரிமை அளிக்கவும். அதிக வட்டியை உறிஞ்சும் இவற்றை கூடுதல் இ.எம்.ஐ. செலுத்தி விரைந்து முடிக்கவும். இந்த கடன்களை அடைத்த உற்சாகத்திலேயே பிற கடன்களை செலுத்த உத்வேகம் பிறந்துவிடும்.

2. ஊதியம் உயரும்போது கூடுதலாக செலுத்துங்கள்

உங்களது ஊதியம் உயரும்போதோ, ஊக்கத்தொகை கிடைக்கும்போதோ உடனடியாக செலவு செய்யக்கூடாது. அந்த பணத்தை கடனுக்கு செலுத்தி அதனை குறைக்க வேண்டும். மாதாமாதம் இ.எம்.ஐ. செலுத்திக்கொண்டிருப்பதை விட, ஆண்டுக்கொரு முறை கூடுதலாக ஒன்றிரண்டு இ.எம்.ஐ. செலுத்தினாலே கடனும் வேகமாக குறையும். வட்டி விகிதமும், கட்ட வேண்டிய காலமும் குறையும்.

3. கெட்ட கடனை அடைக்க நல்ல கடன்

கிரெடிட் கார்ட் கடன், தனிநபர் கடன், வாகன கடன் ஆகிய கெட்ட கடன்களில் சிக்கிக் கொண்டிருந்தால், வீட்டுக் கடன் வாங்கிய வங்கியிலே டாப் அப் கடன் வாங்கி அதனை அடைக்கலாம். ஏனென்றால் வீட்டு கடனுக்கான வட்டி விகிதம் குறைவானது என்பதால் ஒரளவுக்கு லாபகரமாக இருக்கும்.

4. கடனை குறைந்த வட்டிக்கு மாற்றுங்கள்

இப்போதெல்லாம் வங்கிகள் கடனை ஒரு வங்கியில் இருந்து வேறொரு வங்கிக்கு மாற்றிக்கொள்ள அனுமதிக்கின்றன. எனவே அதிக வட்டி வசூலிக்கும் வங்கியில் இருந்து நகைக் கடன், வாகன கடன் போன்றவற்றை குறைந்த வட்டி வாங்கும் வங்கிக்கு மாற்றிக்கொள்ளலாம். குறைந்த வட்டியை செலுத்திக்கொண்டே மற்ற கடன்களை அடைக்கலாம்.

5. ஒரே கடனாக மாற்றிக் கொள்ளுங்கள்

சில நேரம் ஆங்காங்கே வாங்கிய சிறிய கடன்களை பெரும்பாலானோர் மறந்துவிடுகின்றனர். அதற்கு விதிக்கப்பட்ட வெவ்வேறு வட்டி விகிதங்களை மறந்து, செலுத்த வேண்டிய தேதியையும் மறந்துவிடுகின்றனர். இதனால் கூடுதல் வட்டி கட்டுவதுடன் அபராதமும் செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இந்த பிரச்சினையில் இருந்து மீள, அனைத்து கடன்களையும் சேர்த்து குறைந்த வட்டியில் கிடைக்கக்கூடிய ஒரே கடனாக மாற்றி விட வேண்டும். அதன் மூலம் கடனை கையாள்வதும், அதற்கு செலுத்துகிற வட்டியையும் ஓரளவு சேமிக்க முடியும்.

(தொடரும்)

கட்டுரையாளர் தொடர்புக்கு : vinoth.r@hindutamil.co.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in