

என் மகள் இப்பொழுது 4-ம் வகுப்பு படிக்கிறாள். கணிதம் தவிர மற்ற பாடங்களை நன்கு படிக்கிறாள். கணிதம் புரிவது கஷ்டமாக உள்ளது. என்னால் அவளுக்கு புரியும்படி சொல்லித் தர முடியவில்லை. எனவே நான் கணிதத்தை புரிந்து கொண்டு என் மகளுக்கு சொல்லித்தரும் வகையில் ஏதேனும் பயிற்சி உள்ளதா என்று சொல்லுங்கள். - பூங்கோதை, அதிராம்பட்டினம்.
உங்கள் எண்ணம் வரவேற்கத்தக்கது. பெற்றோரில் பலர் பட்டதாரியாக இருந்தாலும் பிள்ளைகளுக்கு சரிவர சொல்லித்தரும் அளவுக்கு திறன் பெற்றிருப்பதில்லை. மேலும் கணிதம் ஒரு முக்கியமான பாடமாகும். ஆரம்பம் முதலே அதில் ஈர்ப்பு வருமாறு செய்ய வேண்டும். இல்லையெனில் அதைவிட்டு மாணவர்கள் வெகுதூரம் சென்றுவிடுகின்றனர். கணிதத்தின் அடிப்படைகளைப் பெற்றோர் புரிந்துகொண்டு பிள்ளைகளுக்கு சொல்லித்தர வசதியாக இக்னோ எனப்படும் இந்திரா காந்திதேசிய திறந்த நிலைப் பல்கலைக்கழகம் சர்ட்டிஃபிகேட் இன் டீச்சிங் ஆஃப் ப்ரைமரி மேக்ஸ் (CTPM) எனும் 6 மாதகால சான்றிதழ் படிப்பு வழங்குகிறது. ஆங்கிலம் மற்றும் இந்தியில் இது கற்பிக்கப்படுகிறது.
இதில் சேர 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். அஞ்சல் வழியில் படிக்கலாம். இதன் மூலம் கணிதத்தை மற்றவர்களுக்கு எளிமையாக கற்பிக்கலாம். கணிதம் பயில ஆரவம் உள்ளவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய மேலும் சில தகவல்கள் இதோ: ஐ.ஐ.டி மெட்ராஸ், ’Out of Box Thinking Through Mathematics’ என்ற ஆன்லைன் படிப்பை வழங்குகிறது. இதனை பள்ளி மாணவர்கள் முதல் பணிபுரியும் நபர்கள்வரை யார் வேண்டுமானாலும் படிக்கலாம். கணிதத்தை அடிப்படையாகக் கொண்டு பிரச்சினைகளுக்குச் சற்றே வித்தியாசமான தீர்வுகளை எட்டுவது குறித்து அறிந்து கொள்ளலாம். கால அளவு 3 மாதம். முழுக்க இலவசம்.
இணையத்தில் பிரபலமான கோர்சேரா (coursera) தளத்தில் அமெரிக்காவின் ஜான்ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் ’Algebra elementary to advanced’ என்ற 4 மாத கால இலவசப் படிப்பை வழங்குகிறது. மாணவர்கள், பெற்றோர் என அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளக் கூடிய அளவில்அல்ஜீபராவினை இதில் வகைப்படுத்தியுள்ளனர். கோர்சேரா தளத்தில் 39 மணி நேரபடிப்பாக, ’Introduction to Mathematical thinking’ ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தால் இலவசமாக வழங்கப்படுகிறது. இதில் சிறுவர்கள் முதல் கணித ஆராய்ச்சியாளர்கள்வரை தெரிந்து கொள்ள ஏகப்பட்ட விஷயம் உள்ளது.
பிசினஸ், எக்னாமிக்ஸ், பைனான்ஸ் பிரிவுகளில் அனாலிட்டிகல் திறன்களை மேம்படுத்தவும், எம்.பி.ஏ. பட்டதாரிகளுக்கு வழிகாட்டும் வகையிலும் எட் எக்ஸ் தளத்தில் ’Maths Essentials’ உள்ளது. லண்டனில் உள்ள இம்ப்பீரியல் கல்லூரி இப்படிப்பை 6 வாரங்களுக்கு இலவசமாக வழங்குகிறது.
| உயர்கல்வி, வேலைவாய்ப்பு தொடர்பான உங்களது சந்தேகங்களை ‘வேலைக்கு நான் தயார்’ பகுதிக்கு vetrikodi@hindutamil.co.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி நிபுணரின் வழிகாட்டுதல் பெறுங்கள். |
- கட்டுரையாளர்: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை முன்னாள் இணை இயக்குநர்.