போவோமா ஊர்கோலம் - 23: அழகிய ஆப்பிள் தோட்டத்தால் பிரமிப்பூட்டிய காஷ்மீர்

போவோமா ஊர்கோலம் - 23: அழகிய ஆப்பிள் தோட்டத்தால் பிரமிப்பூட்டிய காஷ்மீர்
Updated on
2 min read

காஷ்மீர் வந்தடைய இரவாகிவிட்டது. அசதியில் அப்படியே உறங்கிவிட்டோம். மறுநாள் அதிகாலை ஹோட்டல் அறையை விட்டு வெளியே வந்து, காஷ்மீர் அழகைப் பார்த்து அப்படியே உறைந்துபோனோம். குளிர் ஒருபுறம் வாட்டினாலும், சுற்றிலும் பசுமையான பெரிய பெரிய மலைகள், அவ்வப்போது வந்து செல்லும் பனிமூட்டம், திடீரென எட்டிப்பார்க்கும் சூரியன் என காஷ்மீர் கொள்ளை அழகு. காஷ்மீர் என்றதுமே பனிபோர்த்திய மலைகள்தான் சட்டெனெ எல்லோருக்கும் நினைவுக்கு வரும். ஆனால். நாம் அங்கு சென்றது வசந்த காலத்தில் என்பதால், பச்சைப்பசேலென காஷ்மீர் காட்சியளித்தது.

காஷ்மீர் சென்ற முதல் நாளன்று அங்கு உள்ளூர் விழா. அதனால் மொத்த ஊரும் எல்லோருக்கும் குளிர்பானம் கொடுத்து கொண்டாடிக் கொண்டிருந்தது. பண்டிகை என்பதால் எந்த உணவகமும் இல்லை. ஏன் பெரும்பாலான கடைகளுமே மூடி இருந்தது. வண்டியை எடுத்து மொத்த ஊரையும் பொறுமையாக சுற்றி வந்தோம். கரடுமுரடான மலைப்பாதைகளில் வண்டி பயணித்து வந்ததில், வண்டியில் இருந்து ஏதோ சத்தம் வந்துகொண்டு இருந்தது.

அறை அருகே காத்திருந்த அதிசயம்: ஊரெல்லாம் அலைந்து திரிந்தாலும், எந்த மெக்கானிக் கடையும் இல்லை. எல்லாமே மூடி இருந்தது. சில மணி நேரம் தேடி அலைந்து, மெக்கானிக் ஒருவரது வீட்டைக் கண்டுபிடித்து அங்கு சென்றோம். நம்முடைய கதையை கொஞ்சம் எடுத்து சொல்லி, அன்றே வண்டியை சரி செய்து தருமாறு கேட்டோம். பண்டிகை இருந்தாலும், அவரும் வண்டியை சரி செய்யத்தொடங்கினார். அதுவரை வெளியே வந்து, வீதியில்குழுவாக இணைந்து விளையாடிக்கொண்டிருந்த இளைஞர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம். சிறிது நேரத்தில் ராணுவ வாகனம் வர, அவர்கள் அப்படியே கலைந்து போனார்கள். அதற்குள் வண்டியும் தயாராகி இருந்தது.

அலைந்து திரிந்ததில் பசி அதிகமாகிவிட்டது. பண்டிகை என்பதால், நாம் தங்கி இருந்த ஹோட்டலிலும் உணவு கிடைக்கவில்லை. மாலை நேரத்தில்தான் ஒவ்வொரு கடையாகத் திறக்க ஆரம்பித்தார்கள். ஒருபேக்கரியில் ரொட்டியும் பிஸ்கெட்டும்வாங்கிவந்து பசியைப் போக்கிக்கொண்டோம். மறுநாள் ஹோட்டலிலேயே உணவுக்கு சொல்லிவிட்டோம். நாம் தங்கி இருந்த ஹோட்டலை சுற்றிலும் மலைகள், அந்தஇடத்தில் அழகான தோட்டம், அதில் நிறைய ஆப்பிள் மரங்கள். முதல் முறையாக ஆப்பிள் மரத்தை காஷ்மீரில் தான் பார்க்கிறேன். மரத்தில் காய்த்து இருக்கும் ஆப்பிள் பழங்களை பார்க்க பார்க்க ஆச்சர்யமாக இருந்தது. இதுவரை நாம் பார்த்திடாத ஒன்றை முதல் முறையாகப் பார்க்கும் போது ஒரு பிரமிப்பு ஏற்படுமல்லவா, அது போகவே ரொம்ப நேரம் ஆனது. மரத்திலிருந்து நல்ல ஆப்பிள்களை நமக்காகப் பறித்துக்கொடுத்தார்கள்.

ருசிகரமான குஸ்தபா: மத்திய உணவுக்கு காஷ்மீரின் ஸ்பெஷல் உணவான ’குஸ்தபா’வை நமக்காம தயார் செய்திருந்தார்கள். நம் ஊர் கோலா உருண்டை போல் இருந்தது. கறியை அரைத்து அதை பெரிய பெரிய உருண்டையாக செய்து, அதை இரண்டு விதமான குழம்பில் நமக்கு கொடுத்தார்கள். குஸ்தாபா ருசி எதிர்பார்த்ததைவிட சுவையாக இருந்தது. ஒன்று மட்டும் கொஞ்சம் காரமாக இருந்தது. வயிறு நிறைய சாப்பிட்டுவிட்டு, ஆப்பிள் மரத்தின் அடியிலேயே கொஞ்ச நேரம் உட்கார்ந்து இருந்தோம். ஏனோ நியூட்டன் நினைவுக்கு வந்துபோனார். நாம் எதிர்பார்த்த அளவு குளிர் இல்லை. அதனால் ஹோட்டலை சுற்றி மலையடிவாரம் வரை நடந்து சென்றோம். சின்ன சின்ன சாலைகள், அழகான வீடுகள். ஒவ்வொரு வீடும் நம்மை ரசிக்க வைத்தது. ஆடு மேய்ப்பது அங்கு இருந்தவர்களுக்கு தொழிலாக இருந்தது. அஸ்தமன நேரத்தில் ஆட்டு மந்தைகளை வீட்டுக்கு ஒட்டி வந்துகொண்டிருந்தார்கள். மீண்டும் ஹோட்டல் அறைக்கு வந்தபோது நன்றாக இருட்டிவிட்டது. நாளை காலை காஷ்மீரின் மிக முக்கியமான இடத்துக்கு செல்லவேண்டும்.

- கட்டுரையாளர்: இதழியலாளர், பயணப் பிரியை; தொடர்புக்கு: bharaniilango@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in