கற்றது தமிழ் - 23: யாதும் ஊரே... யாவரும் கேளிர்...

கற்றது தமிழ் - 23: யாதும் ஊரே... யாவரும் கேளிர்...
Updated on
2 min read

குழலி: என்ன சுடர் இன்னைக்கு இவ்வளவு சீக்கிரமா வந்துட்ட...

சுடர்: நாளை எனக்கு ஒரு கட்டுரைப் போட்டி இருக்கு குழலி. தலைப்பைப் பத்தி உன்கிட்ட பேசலாம்னு, விளையாடக்கூடப் போகாம நேரா வீட்டுக்கு வந்துட்டேன்.

குழலி: தலைப்பு என்னன்னு சொல்லு சுடர். நம்ம வீட்டுல இருக்கிற புத்தகங்களையும் பார்க்கலாம்.

சுடர்: யாதும் ஊரே... யாவரும் கேளிர்.

குழலி: நல்ல தலைப்புதான் சுடர். செம்மொழியான தமிழ் மொழியாம் பாட்டக் கேட்டப்ப இந்த வரிகளப் பத்திப் பேசினோமே.

சுடர்: கணியன் பூங்குன்றனார் எழுதின பாட்டுன்னு தெரியும்.

குழலி: பாட்டோட பொருளைப் படிப்போமா... அப்ப உனக்குக் கட்டுரையோட மையக் கருத்து என்னன்னு புரிஞ்சிடும்.

புறநானூறை எடுத்துப் பொருளை வாசிக்கத் தொடங்குகிறார்கள். பாடல் எண் 192.

குழலி:

யாதும் ஊரே; யாவரும் கேளிர்;

தீதும் நன்றும் பிறர் தர வாரா;

நோதலும் தணிதலும் அவற்றோரன்ன;

சாதலும் புதுவது அன்றே; வாழ்தல்

இனிது என மகிழ்ந்தன்றும் இலமே;

பாட்டு பொதுவியல் திணையில் அமைஞ்சது. துறை பொருண்மொழிக் காஞ்சித் துறை.

சுடர்: பொருண்மொழிக் காஞ்சித் துறைன்னா...

குழலி: இந்தப் பிறவியிலும் இனி வர இருக்கும் பிறவியிலும் நன்மையை உண்டாக்கக் கூடிய நல்ல காரியங்களை எடுத்துச் சொல்றதுதான் பொருண்மொழிக் காஞ்சி. அரசனுக்கும் மக்களுக்கும் நன்மை விளைவிக்கக்கூடிய நல்ல விஷயங்களைச் சொல்றது.

சுடர்: சரி... பொருளைச் சொல்லு... துறைக்கு நீ தந்த விளக்கத்தைப் பொருத்திப் பார்க்கலாம்.

குழலி: எனக்குத் தெரிஞ்ச மாதிரி பொருள் சொல்றேன். இந்த உலகத்துல இருக்கிற மனுசங்க எல்லாம் ஒரே இனத்தைச் சேர்ந்தவங்க தான். அவங்க எல்லாருமே நம்ம உறவினர்கள்தான். அதனால அவங்க வாழ்ற ஊரும் நம்ம ஊர்கள்தான். இப்படி ஒரு பரந்த மனப்பான்மைய நம்ம தமிழ் இலக்கியம் தான் சொல்லியிருக்கு. அதுவும் எவ்வளவு காலத்துக்கு முன்னாடியே.. இந்தப் பாட்டத்தான் நம்ம தமிழ்ப் பண்பாட்டோட தனித்துவத்தையும் உயர்வையும் சொல்ற பாட்டுன்னு சொல்றாங்க.

சுடர்: ஆமா, ஐந்திணை வாழ்க்கை, நிலத்துக்கேத்த தொழில்னு நாம திணைகளாக பிரிஞ்சுதானே இருந்தோம். ஒரு திணையில கிடைக்கிற பொருளை இன்னொரு திணை மக்களோட பகிர்ந்து, பண்டமாற்று செய்து தானே வாழ்ந்தோம். அப்படி இருக்கும்போது எல்லா ஊரும் நம்ம ஊரு தான், எல்லாரும் நம்ம உறவினர்கள்தான்னு சொல்ல வேண்டிய தேவை எங்கிருந்து வந்துச்சு....

குழலி: நீ சொல்றது ரொம்ப சரி சுடர். ஆனா, திணை மக்களா, இனக்குழுக்களா வாழ்ந்த காலம் மாறி நாடு, நகரம்னு நிலம் பெரிசானப்ப, ஆட்சி செஞ்ச வள்ளல்களும் வேளிர்களும் மறைஞ்சு பெரிய மன்னர்கள் வந்தப்ப மாற்றங்கள் வந்திருக்கும்தான...

சுடர்: ம்... போர்கள் நடந்ததால, புலம் பெயர்ந்து போற சூழல் வந்திருக்கும். அவங்க வாழ்ந்த இடத்தை விட்டுப் புதிய இடத்துக்குப் போக வேண்டி இருந்திருக்கும்.

குழலி: ஆமா, சுடர்... நாம எல்லோர்கிட்டயும் இணக்கமா இருக்கிறதும், யாரையும் பகையா நினைக்காம இருக்கிறதும் முக்கியம்தானே. அடுத்து வர்ற வரிகளப் பாரேன். தீதும் நன்றும்பிறர் தர வாரா” நமக்கு வர்ற தீமையும் நன்மையும், மத்தவங்களால நமக்கு வராது. நாமசெய்கிற செயல்களாலேயே நமக்கு வந்து சேரும். அதனால பிறருக்குத் தீங்கு எண்ணாத மனநிலை நமக்கு வேணும். இந்த உலகத்துல பல தீமைகள் நடக்குது. தன்னோட நலனுக்காக எந்தத் தீமையையும் செய்யத் துணிகிற மனிதர்களும் இருக்காங்க. ஆனாலும் இந்த உலகம் எப்படி இயங்கிக்கிட்டிருக்கு... தன்னைப் பத்தி மட்டும் நினைக்காம பிறருக்காகவும் நல்லது நினைக்கிற நல்லவங்க இந்த உலகத்துல இன்னும் இருக்காங்க. அதனாலதான் இந்த உலகம் நிக்காம இயங்குதுன்னு சொல்ற அழகான, ஆழமான பொருள் கொண்ட பாட்டு.

சுடர்: இதுவே போதும். நான் கட்டுரை எழுதத் தயாராயிட்டேன். பிறகு பேசுவோம் குழலி.

- கட்டுரையாளர்: தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர்; தொடர்புக்கு: janagapriya84@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in