

மின் உற்பத்தித் துறையில் ஏற்கெனவே புதைபடிம எரிபொருளுக்கு மாற்றான முறைகள் வந்துவிட்டன. இதில் சூரிய ஆற்றல் மற்றும் காற்றாலை மூலம் உற்பத்தி செய்யும் மின்சாரம் முக்கிய பங்கு வகிக்கின்றன. சூரிய ஆற்றல் மின் உற்பத்தி முறையைப் பற்றி நாம் முன்பே கேள்விப்பட்டிருப்போம். சூரியக் கதிர்வீச்சை மின்சாரமாக மாற்றிப் பயன்படுத்தும் தொழில்நுட்பம் அது. இதற்கு நமக்குச் சூரியத்தகடுகள் பயன்படுகின்றன. இந்தத் தகடுகளில் சிலிகான் போன்ற உலோகங்கள் இடம்பெற்றிருக்கும். இவைசூரிய ஒளியில் உள்ள துகள்களான போட்டான்களை உறிஞ்சிக்கொண்டு எலக்ட்ரானை வெளியிடுகின்றன.
இந்த எலக்ட்ரான்களை நாம் மின்சாரமாக மாற்றி பயன்படுத்தலாம். இது நேரடியாக சூரிய ஒளியையே மின்சாரமாக மாற்றும் முறை. இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம் சிறிய அளவு மின்சாரத்தையே தயாரிக்க முடியும். சூரிய ஆற்றலைக் கொண்டு அதிகஅளவு மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கும் சூரிய மின்னாற்றல் நிலையங்கள்(Concentrating Solar Power Plants) இருக்கின்றன. இந்த நிலையங்களில் நூற்றுக்கணக்கான கண்ணாடிகள் அமைக்கப்பட்டிருக்கும். இந்தக் கண்ணாடிகள் அவற்றின் மீது விழும் சூரிய ஒளியை அருகே அமைக்கப்பட்டுள்ள துகள் ஏற்பி (Particle Receiver) மீது எதிரொலிக்கும்.
இப்போது ஒட்டுமொத்தக் கதிர்வீச்சும் ஒரே இடத்தில் குவியும்போது நூற்றுக்கும் மேற்பட்ட செல்சியஸ் அளவிலான வெப்பம் உருவாகும் இல்லையா? அதைப் பயன்படுத்தி நீரைக் கொதிக்கவைத்து, அதில் உருவாகும் நீராவியின் மூலம் விசையாழியைச் (Turbine) சுழல வைத்து மின்சாரத்தை உருவாக்க முடியும். இந்தச் செயல்முறையில் நேரடியாகக் கார்பன் உமிழப்படுவதில்லை. ஆனால்,அவற்றில் பயன்படுத்தும் இயந்திரங்களை இயக்குவதற்கு நாம் எரிபொருள்களையே பயன்படுத்துவதால் கொஞ்சம் கார்பன் உமிழ்வு உண்டு. ஒப்பீட்டளவில் அது அனல்மின் நிலையத்தை விட மிக மிகக் குறைவு.
(தொடர்ந்து பேசுவோம்)
- கட்டுரையாளர்: அறிவியல், சூழலியல், தொழில்நுட்பம் குறித்து எழுதி வரும் இளம் எழுத்தாளர். ‘மிரட்டும் மர்மங்கள்’ நூலாசிரியர். தொடர்புக்கு: tnmaran25@gmail.com