

உள்ளூரில் வயோதிகத்தின் காரணமாக ஒரு மருத்துவர் மரணமடைகிறார். அவரது மறைவுக்கு மருத்துவ உலகமே கண்கலங்குகிறது. மரியாதை செலுத்துகிறது. அதே மருத்துவரின் மறைவுக்கு நாட்டின் பிரதமரும் இரங்கல் செய்தி வெளியிடுகிறார். மாநில முதலமைச்சரும் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறார். எதிர்க்கட்சி தலைவரும் தனது அனுதாபங்களை வெளிப்படுத்துகிறார்.
பல முன்னணி நிறுவனங்களின் தலைவர்களும் அவரது மறைவுக்கு வருந்துகின்றனர். விளையாட்டு மற்றும் கலை உலகத்தினர் பலரும் அஞ்சலி செலுத்துகின்றனர். இவ்வளவுக்கும் அவர் எந்தவொரு அரசுப் பதவியிலும் இல்லாதவர் என்றால் அவர் யார், அப்படி என்ன செய்தார் என்ற கேள்வி எழுகிறதல்லவா? அதைத் தெரிந்துகொள்ள 83 வயதில் அண்மையில் மறைந்த டாக்டர் எஸ். எஸ். பத்ரிநாத்தின் வாழ்க்கையைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும்.
மலர்ந்தவுடன் வாடிய கனவு: செங்கமேடு ஸ்ரீநிவாச பத்ரிநாத் எனும் டாக்டர் எஸ்.எஸ். பத்ரிநாத் பிறந்தது 1940, பிப்ரவரி மாதம் 24ம் தேதி, சென்னை திருவல்லிக்கேணியில். அரசுப் பணியில் பொறியாளராகப் பணிபுரிந்து வந்த தந்தை நிவாச ராவ் மற்றும் லக்ஷ்மி தேவி தம்பதியினரின் ஏழாவது கடைக்குட்டி பத்ரிநாத். சிறுவயது முதலே ஏற்பட்ட கல்லீரல் சம்மந்தப்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக பத்ரிநாத் பள்ளி சென்றதே ஏழு வயதிற்குப் பின்பு தானாம். வீட்டில் நோய்வாய்ப்பட்ட நிலையிலும் சிறுவயதில் அவருக்கு ஆரம்பக்கல்வியை அளித்த அவரது தாயார், அவருடைய தகப்பனாரைப் போலவே தனது கடைக்குட்டி மகனும் ஒரு வழக்கறிஞராக வேண்டும் என்றுதான் விருப்பப்பட்டுள்ளார்.
தாமதமாகப் பள்ளியில் சேர்ந்தாலும், வீட்டிலேயே தேவையானவற்றை கற்றுத் தேர்ந்ததால், ராமகிருஷ்ணா மிஷன் மேல்நிலைப் பள்ளியில் நேரடியாக நான்காம் வகுப்பில் நுழைந்த பத்ரிநாத்தின் விருப்பம் ஒரு மருத்துவராக வேண்டும் என்பதே. என்றாலும் பிறந்த போதே கல்லீரல் பிரச்சினை இருந்தவருக்கு பிற்பாடு வாழ்க்கையும் சோதனையாகவே இருந்தது. தனது பத்தாவது வயதில் தாயையும், பதின்பருவத்தில் தந்தையையும் இழந்த பத்ரிநாத்துக்கு பெற்றோரின் அடுத்தடுத்த மரணங்கள் அவரது வாழ்க்கையை மட்டுமல்ல மருத்துவக் கனவையும் சேர்த்தே சிதைத்தது.
தமிழும் மருத்துவமும் இரு கண்கள்: எனினும் அண்ணன் வாசுதேவன் வழிகாட்ட, தந்தையின் மரணத்தில் கிடைத்த காப்பீட்டுத் தொகையான 7,500 ரூபாயைக் கொண்டு பத்ரிநாத் தனது கல்வியைத் தொடர்ந்தார். படிக்கும்போதே பல வானொலி நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பத்ரிநாத் தமிழ்மொழி மீது தீராக்காதல் கொண்டு, பாரதியார் கவிதைகள், கல்கியின் புதினங்கள் உள்ளிட்ட புத்தகங்களைத் தேடித்தேடி படித்துள்ளார். தொடர்ந்து லயோலா கல்லூரியில் இன்டர்மீடியட் பயின்று, பின்பு மெட்ராஸ் மெடிக்கல் காலேஜில் 1957 முதல் 1962 வரை மருத்துவம் பயின்ற பத்ரிநாத், மருத்துவக் கல்வியில் குறிப்பாக கண் மருத்துவத்தில் அதிகளவு மதிப்பெண்கள் பெற்று, தங்கப்பதக்கத்துடன் முதல் மாணவராகவும் தேர்ச்சி பெற்றார்.
உலகத்தைக் காட்டும் சிறிய கண்களுக்குள் இவ்வளவு பெரிய உலகமா..? என்று எப்போதும் வியந்த டாக்டர் பத்ரிநாத்துக்கு இன்னும் ஒரு பெருங்கனவு இருந்தது. படிக்கும் போதே வாலண்டரி ஹெல்த் சர்வீசஸ் அமைப்பில் இணைந்து ரத்த தானம் உள்ளிட்ட பல மருத்துவ சேவைகளுக்கு உதவுவதும் அவர் வழக்கமாக இருந்ததால், கண் மருத்துவத்தில் மேற்படிப்பு முடித்து, ஏழை மக்களுக்கு தன்னால் இயன்ற சேவை செய்ய வேண்டும் என்பதே அது.
அவரது கனவுகளுக்கு அவருடைய பொருளாதாரம் இடம் கொடுக்கவில்லை. மேற்படிப்புக்கான நுழைவுத்தேர்வுகளை எழுதி வெற்றி பெற்றபோதிலும் அமெரிக்கா செல்ல கையில் பணம் இல்லாத நிலையில்தான் இருந்திருக்கின்றார். பிறகு நண்பர்கள் சொல்லக்கேட்டு, அப்போதைய இந்தியன் ஏர்லைன்ஸின் ‘இப்போது பயணியுங்கள்: பின்னர் பணம் செலுத்துங்கள்' (Fly Now: Pay Later) திட்டத்தின் மூலம் அமெரிக்கா சென்றார். இதன்காரணமாகவே தனது வாழ்நாள் முழுவதும் இந்தியன் ஏர்லைன்ஸ் தவிர வேறு விமான சேவையை தேர்ந்தெடுப்பதையே தவிர்த்துள்ளார்.
அமெரிக்காவின் கிராஸ்-லாண்ட்ஸ் மருத்துவமனை மற்றும் ப்ரூக்ளின் மருத்துவமனையில் கண்மருத்துவ மேற்படிப்பை மேற்கொண்ட பத்ரிநாத், அதிலும் சிறந்தமாணவராகத் தேர்ச்சிபெற்று, கண்மருத்துவத்தின் பெருமைமிக்க எஃப்.ஆர்.சி.எஸ்., மற்றும் அமெரிக்கன் போர்ட் ஆகிய சிறப்புப் பட்டங்களைப் பெற்றுத் தேர்ந்தார்.
(டாக்டர் பத்ரிநாத்தின் மகிமை தொடரும்)
- கட்டுரையாளர் : மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர்; தொடர்புக்கு: savidhasasi@gmail.com