

நம்மால் கதை எழுத முடியும் என்ற நம்பிக்கை பலருக்கும் வந்திருக்கும் என நினைக்கிறேன். கதைக்கான கரு, கதாபாத்திரங்களின் பெயர்கள் போன்ற விஷயங்களைப் போலவே இன்னொரு முக்கியமான சந்தேகம் எல்லோருக்கும் வரும். அதுதான், வட்டார வழக்கு மொழிநடையை நாம் பின்பற்றலாமா, கூடாதா? என்பதுதான். முதலில் வட்டார வழக்கு என்றால் என்ன என்பதைப் பார்த்துவிடுவோம். நம்முடைய தமிழ் மொழி ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இந்த மண்ணில் பேசப்பட்டு வருகிறது. காலத்துக்கு ஏற்ப அதன் உச்சரிப்பும், சொற்களும் மாற்றம் அடைந்தே வருகின்றன. பழந்தமிழில் பேசினால், இப்போது பலருக்கு எளிதில் புரியாது.
தமிழானாலும் புரியாதே! - அதேபோல, தமிழ்நாடு முழுக்க தமிழில் பேசினாலும் பேச்சின் சுவைக்கு ஏற்ப, அதன்உச்சரிப்புகள் மாறுபடவே செய்கிறது. கூடவே,அந்தப் பகுதியில் பயன்படுத்தும் பொருட்களை ஒட்டிய சொற்களும் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. அவை மற்ற பகுதிகளுக்கு எளிதில் புரிவது இல்லை. உதாரணமாக, கடல் சார்ந்து உள்ள பகுதியில் மீன் பிடிப்பது தொடர்பாக அதிகம் பேசுவார்கள். ஆனால், மலை பகுதியில் கடலைப் பார்ப்பதே அரிதினும் அரிதாக நடக்கும் ஒரு நிகழ்வு. எனவே, கடலில் மீன் பிடிப்பது பற்றியும், அது தொடர்பான சொற்களைத் தெரிந்துகொள்வதற்கும் வாய்ப்பு இல்லை. எனவே, இது கடல் வட்டார வழக்கு,அது மலை வட்டார வழக்கு எனப் புரிந்துகொள்ளலாம்.
இதுவே நாளடைவில் ஒவ்வொரு பகுதிக்கான பேச்சு நடையாக மாறிபோனது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட சிலவற்றை தென் மாவட்டங்கள் என்றும் திருச்சி, தஞ்சை உள்ளிட்ட சிலவற்றை மத்திய மாவட்டங்கள் என்றும் குறிப்பிடுகின்றன. வட ஆற்காடு, செங்கல்பட்டு உள்ளிட்ட சிலவற்றை வட மாவட்டங்கள் என்றும் கோயம்புத்தூர், சேலம் உள்ளிட்ட சிலவற்றை மேற்கு மாவட்டங்கள் என்றும் அழைக்கின்றனர்.
இதன் அடிப்படையில் பார்த்தாலே வட்டார பேச்சு மொழி ஒன்றுக்கு ஒன்று மாறுபடும். இவ்வாறு, கொங்கு மொழி, கரிசல் மொழி, நாஞ்சில் மொழி, நெல்லை மொழி உள்ளிட்ட வட்டார மொழிகள் இங்கே உள்ளன. ஒரு பகுதியில் பயன்படுத்தும் சொற்கள் இன்னொரு பகுதி மக்களுக்கு எளிதில் புரியாது. உதாரணத்திற்கு புழுக்கமாக இருப்பதை கொங்கு பகுதியில் உப்புசமாக இருக்கிறது என்பார்கள். இதை மற்ற பகுதி மக்கள் புரிந்துகொள்வதில் சிரமப்படலாம். இந்தப் பின்னணியில் தான் வட்டார வழக்கு மொழியில் கதைகளை எழுதலாமா கூடாதா என்ற கேள்வியை நாம் பார்க்க வேண்டும்.
பொதுத்தமிழ் போதுமா? - தமிழின் மூத்த எழுத்தாளர் கி.ராஜநாராயணன், கரிசல் வட்டார வழக்கு மொழிநடையில்தான் தன் கதைகளை எழுதினார். அவரைப் போலவேநாஞ்சில் நாடன், கண்மணி குணசேகரன் உள்ளிட்ட பல எழுத்தாளர்கள் வட்டார மொழிநடையில் எழுதுவதை சரி என்று சொல்கிறார்கள். அப்படி எழுதினால்தான் அந்த மக்களின் வாழ்க்கையை சரியாக எழுத முடியும் என்றும் சொல்கிறார்கள். ஆனால், சிலர் பொதுத்தமிழைப் பயன்படுத்துவதே சிறந்தது. ஏனெனில், எல்லோரும் எளிதாகப் புரிந்துகொள்ள பொதுத்தமிழே சரியானது.
மேலும், உங்கள் கதையை ஒருவர் வேறு மொழியில் மொழிபெயர்ப்பு செய்ய வேண்டும் எனில் பொதுத்தமிழில் இருந்தால்தான் நல்லது என்கிறார்கள். வட்டார வழக்கு கதைகளை ஒவ்வாமையோடு பார்க்கும் சிலரும் இருக்கத்தான் செய்கிறார்கள். இரண்டு தரப்பையும் பார்த்த பிறகு, வட்டார மொழிநடை பற்றியும் அதன் சாதக பாதகங்கள் பற்றியும் ஓரளவு அறிந்திருப்பீர்கள். வட்டார மொழி நடையில் எழுதும்போது அவசியம் கவனிக்க வேண்டிய விஷயங்கள் சில உள்ளன. அவை என்னென்ன என்பதை அடுத்த பகுதியில் பார்ப்போம்.
- கட்டுரையாளர்: எழுத்தாளர், ‘ஒற்றைச் சிறகு ஓவியா’, ‘வித்தைக்காரச் சிறுமி’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: vishnupuramsaravanan@gmail.com