

குழந்தைகள் பெற்றோரிடத்தில் வளர்வதை விட தாத்தா, பாட்டிகளிடம் வளரும்போது நிறைந்த அறிவும், உடல் ஆரோக்கியமும், விசாலப் பார்வையை கொண்டவர்களாகவும் வளர இயலும். கல்விக்கூடங்கள் எண்ணறிவையும், எழுத்தறிவையும் வளர்த்தெடுக்கலாம். கேள்விகள் கேட்கக்கூடிய திறனை தாத்தா,பாட்டிகளே ஊக்குவித்து வளர்ப்பர். புதுச்சேரியைச் சேர்ந்த இரா.தட்சிணா மூர்த்தி ஓய்வு பெற்ற தமிழாசிரியர். புதுவை அறிவியல் இயக்கத்தின் தலைவர். இயற்கை, சுற்றுச்சூழல் ஆர்வலர். குழந்தை உரிமைகள் பற்றிய நூல்களை எழுதியவர், ஓய்வு பெற்ற பிறகு தாத்தாக்களுக்கே உரிய வேலைகளான பேரன், பேத்திகளை பராமரிக்கும் பணி கிடைக்கிறது. தன் பேத்தியை பள்ளிக்கு அழைத்துச் செல்வதும், திரும்ப அழைத்து வருவதும் தாத்தாவின் பணி.
பள்ளி செல்லும் அந்தப் பயணத்தில்தன் பேத்தி கேட்ட அதிநுட்பமான கேள்விகளைப் பார்த்து ஆச்சரியப்படு கிறார். அந்தக் கேள்விகளை அழகானகுறுநாவலாக எழுதி நமக்கு பரிசளித்துள்ளார். பள்ளிக்கூடங்களில் குழந்தை களை வாய்பேசாமல் இருக்கச் செய்யும் மந்திரவித்தைகளே நடைபெறுகிறது. சுதந்திரமாகக் கேள்வி கேட்க அனுமதிக்காத கல்விக்கூடங்களை தாத்தா கண்டிக்கிறார். தன் இருசக்கர வாக னத்தில் பேத்தியை அமர்த்தி, பள்ளி செல்லும் தூரம் வரை பேத்தி கேட்கும் கேள்விகளுக்கு விடைகளைக் கூறியும், பேத்தியின் அறிவைக் கண்டு வியப்பும் கொள்கிறார் இந்த தாத்தா.
பேத்தியின் கேள்விகள்: வாகனங்கள் புகையை வெளிப்படுத்து கின்றன, சைக்கிளில் ஏன் புகை வருவதில்லை என்ற கேள்வி நம்மையும் சிறிது ஆச்சரியப்படுத்துகிறதுதான். பெட்ரோல் எரிந்து வெப்ப ஆற்றல் இயக்க ஆற்றலாக மாறுவதால் புகை வெளிப்படுகிறது என்ற விளக்கத்தை, குழந்தை வயதின் புரிதலுக்கு கூறுவது சரியாகுமா என்ற சந்தேகத்தோடே தாத்தா இருக்கவும், கேஸ் ஸ்டவ் ஏன்புகையை வெளிப்படுத்தவில்லை என்ற புதுகேள்வியை எழுப்புகிறாள். என்னபதிலைக் கூறி புரியவைப்பது என்ற குழப்பத்தில் தாத்தா தவிக்கிறார். ஆனாலும் பேத்தி கேள்விகளை தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்க, ஊக்குவிக் கிறார்.
ஞாயிற்றுக்கிழமை விடுமுறையில் தன் அம்மாவுடன் கோயிலுக்கு சென்ற பேத்திக்கு, சாமி பற்றிய சந்தேகம் எங்கிருந்து வந்திருக்கிறது என்று புரிகிறது. கோயிலில் என்ன நடந்தது என பேச்சுவாக்கில் கேட்கிறார். ‘அம்மா, சாமிகிட்ட தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா நல்லா இருக்கணும்ன்னு வேண்டிக்கோ, நல்லாப் படிக்கணும்ன்னு வேண்டிக்கோன்னுச் சொன்னாங்க' என்கிறாள் பேத்தி. நல்லா வேண்டிக்கிட்டாயா? சாமி என்ன சொல்லுச்சி என்கிறார். சாமி எப்படி பேசும்? அதான் சாமியாச்சே என்கிறாள் பேத்தி. ஆமாம். சாமி பேசாதுதானே. சாமி சிலைதானே. கற்சிலைதானே? என்று தாத்தா கேட்கும் கேள்வியில் பேத்தி சிறுபுரிதலுக்கு வருகிறாள்.
கொசு எப்படி ரத்தம் குடிக்கிறது? - பள்ளியில் விரல் நகங்களை வெட்டி வர வேண்டும் என்று சொன்னதால், நகங்களை வெட்டிக் கொண்டிருக்கும் தாத்தாவிடம், நகம் மட்டும் எப்படி வளருகிறது என்கிறாள். இதற்கான அறிவியல் விளக்கம் இந்த வயதில் பேத்திக்கு புரியுமா என தாத்தா தயங்க, மேலும் ஒரு கேள்விக்கு தாவுகிறாள். இந்த நகங்களை புதைத்து வைத்தால் வளருமா என்று. வளராது எனச் சொல்லும் தாத்தாவிடம், சென்ற வாரத்தில் அப்பா முருங்கை மரத்திலிருந்து வெட்டி வந்த கிளையை நட்டுவைத்து, அது துளிர் விட்டிருக்கிறதே என்று கேட்கிறாள். தாத்தா சங்கடத்தில் நெளிகிறார். சாலையில் சிக்னல் போட்டாச்சி, வீட்டுக்குச் சென்று சொல்கிறேன் என்று சமாளிக் கிறார்.
கொசு எப்படி ரத்தம் குடிக்கிறது என்கிற வினாவுக்கு,கொசு மூக்கில் ஒரு ஊசி இருக்கும், மனித தோலின் மீது அமர்ந்து சதக்கென்று குத்தும், பிறகு சக்க்னு ரத்தத்தை உறிஞ்சிடும் என்கிறார் தாத்தா. அப்படியானால் கொசுவுக்கு பல் இல்லையா? பிறகு ஏன் கொசு கடிக்குதுன்னு சொல்லணும். கொசு குத்துது என்றுதானே சொல்லணும் என்கிறாள் பேத்தி. இனி கொசு குத்துது என்றே தான் சொல்வதாக தாத்தா சரணடைகிறார்.
அறிவு வளரும்: முட்டை வாங்க கடைத்தெருவுக்குச் சென்ற தாத்தாவும் பேத்தியும், முட்டை வாங்கி முடித்த பிறகு, இந்த முட்டை ஏன் வெள்ளையாக இருக்கு என்கிறாள் பேத்தி. தண்ணீர் ஏன் ஓடுகிறது? என்று கேட்கிறாள். இப்படியான கேள்விகளுக்கு பதில் சொல்லும் தாத்தா, சில கேள்விகளுக்கு பதில் சொன்னால் புரியாது எனக் கூறுகிறார். விஷயம் புரிந்த நிலையில்தானே கேள்வி எழுகிறது, பதில் மட்டும் எப்படி புரியாமல் போகும் என்று நமக்கு தோன்றுகிறது. கேள்வி கேட்க அனுமதிக்கும்போதுதான் அறிவு எழுச்சி பெறும். இந்தத் தாத்தா போல தாத்தாக்கள் எல்லா பேரன் பேத்திகளுக்கும் கிடைக்க வேண்டும்.
- கட்டுரையாளர்: குழந்தை நேய செயற்பாட்டாளர், ஆசிரியர், அரசுப்பள்ளி, திருப்புட்குழி, காஞ்சிபுரம் தொடர்புக்கு: udhayalakshmir@gmail.com