

ரமணன் அமெரிக்காவில் இருந்து சொந்த ஊருக்கு தாத்தா வீட்டிற்குச் சென்றான். அங்கே இருக்கக்கூடிய ஆடு மாடுகளுடன் விளையாடி மகிழ்ந்தான். பச்சைக்கிளி பறந்து வந்து மடியில் அமர்ந் தது. அதனோடு ஆங்கிலத்தில் பேசினான் அவன். நண்பர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தார்கள். ஆட்டுக்குட்டியை தோளில் சுமந்து தோட்டத்தை சுற்றி சுற்றி வந்தான். புறா கூட்டத்திற்கு அரிசி போட்டு பசியைப் போக்கினான். வேலை நிமித்தமாய் வெளிநாட்டில் இருந்தாலும் தாய் மண் தரும் சுகமே தனி தான் என்று மனதிற்குள் எண்ணி மகிழ்ந்தான். அந்த எண்ணத்திற்கு இடையூறாய் நடைபெற்ற நிகழ்வைப் பார்த்தான். தாத்தா குலதெய்வ வழிபாட்டிற்கு அழைத்துச் சென்றார். அங்கே கண்ட காட்சி அவனுக்கு அதிர்ச்சி அளித்தது.
ஆசை ஆசையாய் விளையாடிய ஆட்டுக் குட்டியை சாமி முன்பே படையல் போட்டதை எண்ணி வருத்தம் அடைந்தான். அன்று முழுவதும் மனம் சோர்ந்து காணப்பட்டான். தண்ணீர் கூட அருந்தவில்லை. மக்கள் மீதும், தாத்தா மீதும் கோபம் ஏற்பட்டது. அவர்களிடம் நம் உடலை வளர்க்க இன்னொரு விலங்கை அடித்து சாப்பிடுவதா? பாவச் செயல் இல்லையா என்று கேட்டான். இவை காலம் காலமாக நடக்கும் நிகழ்வு தானே. இது பாவச் செயல் இல்லை என்று சமாதானம் சொன்னார். ரமணன் சமாதானம் அடையவில்லை. அதைப் பார்த்து விட்டு உனக்காக நான் மாமிசம் உண்ணும் வழக்கத்தை விட்டுவிடுகிறேன் என்றார். ரமணன் முகத்தில் புன்னகை மலர்ந்தது. மீண்டும் பறவைகளோடும் விலங்கு களோடும் நேரத்தை செலவழித்தான். மன மாற்றத்தை ஏற்படுத்திய நிம்மதியில் நன்கு உறங்கினான். இதை தான் வள்ளுவர்
தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறிது ஊன்உண்பான்
எங்ஙனம் ஆளும் அருள். - குறள்: 251
என்றார்
அதிகாரம்: 26 புலால் மறுத்தல்
- கட்டுரையாளர்: பள்ளி ஆசிரியர்