

இந்தியப் பெருங்கடலில் நீருக்கடியில் மலைத் தொடர் ஒன்றுள்ளது. அதன் பெயர் ‘சாகோஸ்-லேக்கடைவ் மலைத்தொடர்’. தீவிர பருவகால மாற்றம் மற்றும் அவ்வப்போது உயரும் கடல் அளவு காரணமாக எப்போதும் நிலையற்ற கால நிலை இங்கு நிலவுகிறது. பருவ நிலை திடீரென்று மாறும்; மழைக்காலத்தில் கடும் மழை சாதாரணம்; காற்றும்மழையும் பனியும் என்றைக்கு வேண்டுமானாலும் உச்சத்தை தொடும். என்றோ ஒருநாள் அல்ல; ஆண்டு முழுதும் எல்லாநாட்களிலும் இது இயல்பாக நடைபெறுகிறது. யோசித்துப் பாருங்கள் நமது நாட்டில் இயற்கை எந்த அளவுக்கு, நம்மை வசதியாக, பாதுகாப்பாக வைத்து இருக்கிறது.
மிக உயரிய தனிநபர் வருமானம்: இத்தகைய சூழலுக்கு மத்தியில் உள்ள மாலத்தீவை, உயர் மத்திய வருமானம் கொண்ட நாடு என்கிறது உலக வங்கி. சுற்றிலும் கடல் நீர் இருப்பதால், மீன் பிடித்தல், மக்களின் மிக முக்கிய பொருளாதார நடவடிக்கை. அடுத்ததாய் சுற்றுலா. கடந்த வாரம் பார்த்தோமே உலகம் முழுவதும் உள்ள பிரபலங்கள், ஓய்வெடுக்க மாலத்தீவு கடற்கரையை நாடி வருகின்றனர். அதனால், மனிதவள முன்னேற்றக் குறியீடு, தனிமனித வருமானம் இங்கு மிக அதிகம். 2004 டிசம்பர் சுனாமியில் மிக மோசமாக பாதிப்புக்கு உள்ளானது. 57 தீவுகள் முற்றிலும் சேதமாகின. 14 தீவுகள் காலி செய்யப்பட்டன. 6 தீவுகள் அழிந்து போயின. 21 சுற்றுலாத் தீவுகள் மூடப்பட்டன.
400 மில்லியன் டாலர் அளவுக்கு பொருட்சேதம். இங்கு, அலைகள் 14 அடி உயரம் கூட எழும். வடக்கு தெற்காக 871 கிமீ, கிழக்கு மேற்காக 130கிமீ, மொத்தம் சுமார் 90,00 சகிமீ கொண்ட மாலத்தீவில் 26 குழுக்கள், 1192 பவளப் பாறைகள் உள்ளன. இயற்கையான பவளப் பாறைத் தடுப்புகளின் தென் முனை வழியாகக் கப்பல்கள் பயணிக்கின்றன. மாலத்தீவின் மிக அகன்ற தீவு ’கான்’. நாட்டின் 80 சதவீதத்துக்கு மேல் பவளப்பாறைகள். இவை கடல் மட்டத்துக்கு ஒரு மீட்டருக்கும் கீழே உள்ளன. உயரும் கடல் நீரால் மூழ்கிப் போகும் அபாயம் இங்கு மூண்டுள்ளது.
மூழ்கிவிடும் அபாயம்: பருவ நிலை மாற்றத்துக்கான அரசுகளுக்கு இடையிலான குழு (பேனல்) கூறுகிறது, தற்போதைய நிலையின்படி, கடல் மட்டம் உயர்ந்து, 2100இல் மனிதர் வசிக்க இயலாத இடமாக மாலத்தீவு மூழ்கிப் போகும் அபாயம் உள்ளதாம். பொதுவாக, வெப்ப நாடுகளின் தட்ப வெப்ப நிலையே நீடிக்கிறது. குறைந்த கடல் மட்ட உயரம் என்பதால் வெப்பம், புழுக்கம் அதிகம். தென்மேற்குப் பருவகாலம் காரணமாக, தெற்கு ஆசியா மீது இந்தியப் பெருங்கடலில் ஈரப்பதம் மிகுந்த காற்று வீசுகிறது. இரண்டு முக்கிய பருவங்கள் – வடகிழக்குப் பருவகாலக் குளிரை ஒட்டிய வறண்ட பருவம்; கடுமையான சூறாவளிக் காற்றுடன் கூடிய தென்மேற்குப் பருவ காலத்தை ஒட்டிய மழைக் காலம்.
ஏப்ரல் – மே மாதங்களில் வடகிழக்கு பருவகாலத்தில் இருந்து தென்மேற்குப் பருவகாலத்துக்கான மாற்றம் (ஜூன் - நவம்பர்) நிகழ்கிறது. சராசரி மழைப்பொழிவு வடக்கில் 254 செ.மீ., தெற்கில் 381செ.மீ. வெயில் அதிகபட்சமாக 31.5 செல்சியஸ், குறைந்த அளவு 26.4 டிகிரி செல்சியஸ்.
(மாலத்தீவில் மேலும் பயணிப்போம்)
- கட்டுரையாளர், கல்வி, வேலைவாய்ப்பு போட்டித்தேர்வுக்கான வழிகாட்டி; தொடர்புக்கு: bbhaaskaran@gmail.com