

அழகுமீனாவுக்கு ஏற்பட்ட மனஅழுத்தத்தை ஏன் எதிர்மறை மனஅழுத்தம் என்று சென்ற வாரம் பேசினோம் என்று வினவினாள் அருட்செல்வி. பைக்கின் வேகத்தைக் குறைக்க வேண்டிய கட்டாயம் அழகுமீனாவுக்கு ஏற்பட்டது. ஆனால், அவரால் அச்செயலுக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. ஆகவே அவருக்கு சில நொடிகளுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.
இவ்வாறு ஒருவர் தனக்கு ஏற்பட்டிருக்கும் சூழலைத் தன்னால் எதிர்கொள்ள முடியாதபொழுது அவருக்கு மனஅழுத்தம் ஏற்படுகிறது. அதனால் அவரது முயற்சி முடங்குகிறது. எனவே, அதனை எதிர்மறை மனஅழுத்தம் என்கிறோம் என்று விளக்கினார் எழில்.
எதனால் எதிர்மறை மனஅழுத்தம்? - ஏன் எதிர்மறை மனஅழுத்தம் ஏற்படுகிறது? என்று வினவினான் கண்மணி. தேன்மொழி எப்பொழுதும் மலர்ந்த முகத்தோடு இருப்பார். தனது ஊரிலுள்ள உயர்நிலைப் பள்ளியில் பயின்று 10-ம் வகுப்பில் பள்ளியில் முதலாவது மாணவராகத் தேறினார். மேல்நிலைக் கல்வியைத் தொடர சற்று தொலைவிலிருக்கும் ஊரிலுள்ள மேல்நிலைப் பள்ளியில் சேர்ந்தார்; விடுதியில் தங்கினார். அவ்விரு இடங்களிலும் அவருக்குத் தெரிந்தவர்கள் யாரும் இல்லை. மற்றவர்களோடு பழகத் தயங்கும் இயல்பினரான தேன்மொழி எப்பொழுதும் வாடிய முகத்தோடு, படிப்பில் ஆர்வமற்றவராக மாறிப்போனார் என்று கூறிய ஆசிரியர், தேன்மொழிக்குள் நிகழ்ந்த இந்த மாற்றத்திற்குக் காரணம் என்ன? என்று வினவினார்.
மனஅழுத்தம் என்றான் சுடர். ஏன் மனஅழுத்தம் ஏற்பட்டது என்பதுதான் வினா என்றாள் தங்கம், சுடரைப் பார்த்து. பேசுவதற்குத் தெரிந்தவர்கள் இல்லாதது என்றான் கண்மணி. புதிய பள்ளியிலும் விடுதியிலும் இருக்கும் புதிய நடைமுறைகளுக்கு அவரால் ஈடுகொடுக்க முடியாதது என்றாள் மணிமேகலை. ஏன் ஈடுகொடுக்க முடியவில்லை என்று வினவினான் முகில். புதிய சூழல் என்றாள் அருட்செல்வி. அருமை என்று பாராட்டிய ஆசிரியர், சூழ்நிலை மாற்றம் எதிர்மறை மனஅழுத்தத்திற்குக் காரணமாக இருக்கிறது என்று விரித்துரைத்தார்.
பின்னர், இதுபோல வேறு எவையெல்லாம் காரணமாக இருக்கக் கூடும் என இரு குழுகளாகப் பிரிந்தமர்ந்து, கலந்துரையாடிப் பட்டியலிடுங்கள் என்று பணித்தார் எழில். மாணவர்கள் கலந்துரையாடி இரண்டு பட்டியல்களை உருவாக்கி, வகுப்பறையில் வாசித்தனர். அவற்றைக் கரும்பலகையில் தொகுத்தெழுதிய ஆசிரியர், அவை ஒவ்வொன்றையும் எடுத்துக்காட்டுகளுடன் விளக்கும்படி மாணவர்களைப் பணித்தார்.
அவரவருக்கு ஏற்பட்ட சிக்கல்கள்: எங்கள் உறவினர் ஒருவர், நீண்டகாலமாக நோய்வாய்பட்டு இருக்கிறார். அவர் எப்பொழுதும் யார் மீதாவது எரிந்து விழுந்துகொண்டே இருப்பார். அதற்கு, அந்த நீண்டகால நோயால் அவருக்கு ஏற்படும் எதிர்மறை மனஅழுத்தமே காரணம் என நினைகிறேன் என்றான் அழகன். என் அண்ணனின் வலதுகையில் ஒருமுறை கொதிநீர் கொட்டி புண்ணாகிவிட்டது. அதனால் அவனால் மாவட்ட விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்ள முடியவில்லை. அந்தக் கடுங்காயமே அவனுக்கு எதிர்மறை மனஅழுத்தமாக மாறி அவனது எதிர்காலமே பாழாகிவிட்டதாகப் புலம்பினான் என்றாள் மதி. என் பாட்டி இறந்தபொழுது, என் அம்மாவிற்குக் கடுமையான எதிர்மறை மனஅழுத்தம் ஏற்பட்டது என்றான் முகில்.
எங்களது கடையில் மழைக் காலத்தில் வணிகம் குறையும். அப்பொழுது பொருளாதாரச் சிக்கல் ஏதேனும் ஏற்பட்டால் என் பெற்றோர் எதிர்மறை மனஅழுத்தத்திற்கு ஆளாவார்கள் என்றாள் கயல்விழி. என் அப்பா பலருக்கும் உதவுவார். ஒருமுறை அவருக்கு ஓர் இக்கட்டு வந்தது. அவரிடம் உதவிபெற்ற யாரும் அப்பொழுது அவருக்கு உதவவில்லை. அவர்களின் நம்பிக்கையற்ற உறவும், தோல்வி பயமும் அவருக்கு எதிர்மறை மனஅழுத்ததைக் கொடுத்தன என்றான் சாமுவேல். தெளிவான விளக்கத்திற்காக அனைவரையும் பாராட்டினார் எழில்.
(தொடரும்)
- கட்டுரையாளர்: வாழ்க்கைத் திறன் கல்வித் திட்ட வடிவமைப்பாளர் மற்றும் பயிற்றுநர்; தொடர்புக்கு: ariaravelan@gmail.com