

மக்கள் புரட்சிப் படையினரின் தூது செய்தியை எடுத்துக்கொண்டு அரண்மனையை நோக்கிச் சென்றுகொண்டிருந்தான் குணபாலன். அவனது எண்ணங்களும் எங்கெங்கோ சென்று கொண்டிருந்தன. அடடா, நம்மைக் காணாமல் நமது பெற்றோர் இத்தனை காலமும் ஏங்கித் தவித்திருப்பார்களே? நாம் உயிருடன் இருக்கிறோமா, இல்லையா என்று கூட அவர்களுக்குத் தெரியாமல் கிடந்து தவிப்பார்களே! எப்படியாவது நான் உயிரோடு இருப்பதை அவர்களுக்குத் தெரிவித்துவிட வேண்டும் என்று நினைத்துக்கொண்டான். குதிரையும் விரைவாகச் சென்று அரண்மனையை அடைந்தது. அவனது வருகை முன்பே எதிர்பார்க்கப்பட்டு இருந்ததால், அரண்மனை கோட்டைக்குள் அவனது குதிரை சுதந்திரமாக செல்ல முடிந்தது. யாரும் தடுக்கவில்லை. குதிரையை விட்டுக் கீழே இறங்கி அரண்மனையின் உள்ளே நடந்து சென்றான்.
அங்கே திருத்தோன்றியே முதலில் எதிர்ப்பட்டார். அவரைப் பார்த்ததும் குண்பாலனுக்கு ஒரு நிமிடம் ‘திக்’கென்று ஆகிவிட்டது. அவரை திருச்சேந்தி என்று நினைத்துக்கொண்ட குணபாலன், இவரிடமிருந்து அல்லவா நாம் தப்பித்து வந்திருக்கிறோம்? மறுபடியும் இவரிடமே சிக்கி இந்த உயிர் போக வேண்டுமா? என்று நினைத்தபோது, ‘கவலைப்படாதே குணபாலா, இப்போதுதான் முகமூடி அணிந்திருக்கிறாயே. எதற்காக வாயால் கத்தி வீசும் இந்த வீரருக்கு வீணாக பயப்படுகிறாய்? என்று அவன் மனசாட்சி அவனுக்கு தைரியத்தைக் கொடுத்தது. இன்னும் இரண்டு அடி எடுத்து வைத்தால், அவரைக் கடந்து அப்பால் சென்றுவிடலாம் என்று நினைத்து மிடுக்காக நடந்தான்.
அடக்கடவுளே, இது என்ன சோதனை? முகமூடியில் இருந்த தூசுகள் குணபாலனின் நாசியின் உள்ளேபோனதால், அவன் அடுத்த நொடியிலேயே ‘அச்’சென்று தும்முவதைத் தவிர்க்க முடியவே இல்லை. அப்படி அவன் தும்மிய அடுத்த நிமிடம் குணபாலன் அணிந்திருந்த முகமூடி ‘பொத்’தென்று கழன்று தரையில் விழுந்தது. உடனடியாக ஓடிச்சென்று முகமூடியைக் கையில் எடுத்தான். அந்த முகமூடியை எடுத்து முகத்தில் மாட்டும் முன்பாக அக்கம் பக்கம் பார்த்தான். நல்லவேளை எவரும் பார்க்கவில்லை. இந்த திருச்சேந்தியைத் தவிர என்று நினைத்துக்கொண்டே நிமிர்ந்து திருத்தோன்றியைப் பார்த்தான். அவரும் குணபாலனை நன்றாகப் பார்த்து விட்டார்.
ஆனால், எதிரில் நிற்பது திருச்சேந்தியே அல்ல; அவர் திருத்தோன்றி என்பது குணபாலனுக்கு எப்படித் தெரியும்? ஆனால், திருத்தோன்றி குண்பாலனை நன்றாகப் பார்த்துவிட்டார். குணபாலனும் பொறுமையாக முகமூடியை எடுத்து முகத்தில் மாட்டிக் கொண்டிருந்தான் அதைக் கண்ட திருத்தோன்றி சிரித்துக் கொண்டே 'அட வீரனே உனது முகத்தைத்தான் நான் நன்றாகப் பார்த்துவிட்டேனே? பிறகு இன்னும் எதற்கு இந்த முகமூடி?' என்று கேட்டார். அதற்கு குணபாலன், தாங்கள் ஒருவர் மட்டும்தான் எனது முகத்தைக் கண்டீர்கள். அதனால் என்ன பரவாயில்லை. இனிமேலாவது எவர் முகத்திலும் எனது முகத்தை காட்டக் கூடாது என்பதற்காகவே இந்த முகமூடியை அணிகிறேன்' என்றான். ‘சரி வா அரசரைச் சென்று பார்ப்போம்’ என்றார் திருதோன்றி.
அவர் பேசுவதைப் பார்த்தால், குணபாலனை இதற்கு முன் சந்தித்ததை மறந்தே போனார் போல இருக்கிறதுஎன்று குணபாலன் நினைத்துக் கொண்டான். அதுவும் நல்லதுக்குத்தான் என்று நினைத்தான். மேலும் திருத்தோன்றியே மன்னரின் முன் குணபாலனை அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தினார். அவர் சொன்னதைக் கேட்ட மன்னர், குணபாலனை அலட்சியமாகப் பார்த்துவிட்டு , ‘யார் இவன்? இவனா தூதுவன்?’ என்றார் எகத்தாளமாக. அதற்கு திருச்சேந்தியாக நடித்துக்கொண்டிருக்கும் திருத்தோன்றி, ‘இவனைத் தெரியவில்லையா? இன்று நமக்கெல்லாம் சவால் விட்டுக்கொண்டு இருக்கக் கூடிய மக்கள் புரட்சிப்படையின் சார்பாக நம்மை குசலம் விசாரித்துப் போக வந்தவன்’ என்று தன் பங்குக்கு அவரும் கேலி செய்தார்.
குணபாலனுக்குத்தான் ‘திக் திக்’என்று இருந்தது. என்னதான் தூதுகொண்டுவரும் தூதுவனை மன்னர்கள் துன்புறுத்துவது இல்லை என்றாலும், அந்த தூது இன்னொரு மன்னர் மரபில் வந்தவனுடையதாக இருக்க வேண்டும். ஆனால், தானோ உள்நாட்டிலேயே புரட்சி என்று கலகம் விளைவித்துக் கொண்டிருக்கக் கூடிய ஒரு கூட்டத்திடமிருந்து தூது கொண்டு வந்ததால், தனது தலை தப்புமோ இல்லை யானை காலில் வைத்து இடரப்படுமோ என்கிற ஐயம் அவனை விட்டு விலகவே இல்லை. அப்போது மன்னர், ‘சரி சரி, நீ கொண்டு வந்த செய்தி என்ன என்று கூறிவிட்டு, அப்படியே திரும்பிப் பார்க்காமல் ஓடிவிடு’ என்றார்.
அதைக்கேட்ட குணபாலன், ‘மன்னா, முதலில் எனக்கும் இந்த புரட்சிப்படைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஒரு பெரிய விபத்திலிருந்து என்னைக் காப்பாற்றி ஆதரவு அளித்தார்கள் என்பதற்காகவே இந்த தூதுச்செய்தியை இப்போது நான் கொண்டுவந்தேன். தூதுச்செய்தி என்னவென்றால்…’
- தொடரும்.