

இந்திய முற்போக்கு எழுத்தாளரும் சமூகப் போராளியுமான அருந்ததி ராய் (Arundhati Roy) பிறந்த தினம் இன்று (நவம்பர் 24). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் 10:
# ஷில்லாங்கில் பிறந்தவர் (1961). தந்தை டீ எஸ்டேட் மேனேஜர். இவருக்கு இரண்டு வயதானபோது பெற்றோர் பிரிந்தனர். அம்மா இவரை ஊட்டியில் இருந்த தன் தாய் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். 5வது வயதில் கேரளா சென்றனர், அங்கு இவரது தாய் ஒரு பள்ளியைத் தொடங்கினார்.
# முதலில் கோட்டயத்திலும் பின்னர் நீலகிரியிலும் பள்ளிப் படிப்பை முடித்தார். டெல்லி பல்கலைக்கழகத்தில் கட்டிடக் கலையில் பட்டம் பெற்றார். டெல்லியில் நேஷனல் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் அர்பன் அஃபயர்சில் வேலை கிடைத்தது.
# 1984-ல் திரைப்பட இயக்குநர் பிரதீப்கிருஷனைச் சந்தித்தார். சில திரைப்படங்களுக்குத் திரைக்கதை எழுதினார். ‘இன் விச் ஆனி கிவ்ஸ் இட் தோஸ் ஒன்ஸ்’, ‘தி பேனியன் ட்ரீ’, ‘எலக்ட்ரிக் மூன்’ உள்ளிட்ட பல திரைக்கதைகளைத் தொலைக்காட்சிக்காக எழுதினார்.
# சமூக நிகழ்வுகள் மற்றும் அரசியல் குறித்து தனது கருத்துக்களை பல பத்திரிகைகளில் எழுதி வந்தார்.
# இவர் எழுதிய ‘தி கிரேட்டர் காமன்குட்’ மற்றும் ‘தி என்ட் ஆஃப் இமேஜினேஷன்’ உள்ளிட்ட கட்டுரைகள் குறிப்பிடத்தக்கவை. தனது கருத்துக்களை மிகவும் வெளிப்படையாகவும் துணிச்சலாகவும் கூறி வருபவர்.
# மேதா பட்கர் தொடங்கிய ‘நர்மதா பச்சாவோ’ அமைப்பில் மிகவும் தீவிரமாகப் பங்கேற்றவர். 1992-ல் வெளிவந்த ‘காட் ஆஃப் ஸ்மால் திங்ஸ்’ நாவல்இவரது தலைசிறந்த படைப்பாகக் கருதப்படுகிறது. இந்நாவல் உலகம் முழுவதும் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்நூலுக்கு 1997-ல் ‘மான் புக்கர்’ பரிசு கிடைத்தது. இந்தப் பரிசை வென்ற முதல் இந்தியஎழுத்தாளர் என்ற பெருமை பெற்றார்.அதையடுத்து வெளிவந்த ‘தி மினிஸ்ட்ரி ஆஃப் அட்மோஸ்ட் ஹாப்பினஸ்’, ’அஜாதி’ உள்ளிட்டவையும் பிரபலமடைந்தன.
# ‘தி காஸ்ட் ஆஃப் லிவிங்’, ‘பவர் பாலிடிக்ஸ்’, ‘வார் டாக்’, ‘ஆன் ஆர்டினரி பர்சன்ஸ் கைட் டு எம்ப்பயர்’, ‘ஃபீல்ட் நோட்ஸ் ஆன் டெமாகிரசி’, ‘ஏ கோஸ்ட் ஸ்டோரி’ உள்ளிட்ட பல நூல்களையும் எழுதியுள்ளார். பல்வேறு ஊடகங்களில் இடம்பெற்ற இவரது பேட்டிகள் தொகுக்கப்பட்டு ‘தி செக்புக் அன்ட் தி க்ருசே மிசைல்’ என்ற நூலாக வெளிவந்தது.
# இவரது எழுத்துப் பணிகளுக்காக ‘மகாத்மா ஜோதி புலே’ விருது கிடைத்தது. சிவில் சமூகத்தினருக்கான இவரது பணிகளுக்காக 2002-ல்அமெரிக்காவின் லானென் அறக்கட்டளையின் கலாச்சார சுதந்திரப் பரிசைப் பெற்றார். 2003-ல் அமைதிக்கான விசேஷ அங்கீகாரப் பரிசான ‘குளோபல் ஹ்யூமன் ரைட்ஸ்’ விருதைப் பெற்றார். சகிப்புத்தன்மை, அகிம்சை குறித்த இவரது பிரச்சாரங்களுக்காக 2004-ல் ‘சிட்னி பீஸ்’ பரிசையும் பெற்றார்.
# பெண் அடிமைத்தனம், குழந்தைத் தொழிலாளர் பிரச்சினை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, அமெரிக்க வெளியுறவுக் கொள்கைகள், மனித உரிமைப் பிரச்சினைகள், அணு ஆயுத சோதனைகள் உள்ளிட்ட உலகளாவிய பல்வேறு பிரச்சினைகள் குறித்து சர்வதேச இதழ்களிலும் எழுதி வருகிறார்.
# சமூகப் பிரச்சினைகள் குறித்த இவரது கட்டுரைத் தொகுப்புக்காக சாகித்திய அகாடமி விருதை மத்திய அரசு அறிவித்தது. ஆனால், அதைப் பெற மறுத்துவிட்டார். இன்று 62-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார்.