

முதன் முதலில் பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்கு ஆரம்ப நாட்களில் சில உளவியல் அழுத்தங்கள் இருக்கலாம். பக்கத்து வீட்டு அண்ணன்களையும் அக்காக்களையும் பார்த்து அவை மெல்ல குறையலாம். அதுபோல் ஆசிரியரின் அன்பான நடத்தையும் அவர்கள் பெற்றோருடன் பழகும் விதத்தையும் பார்த்து பரவாயில்லை நாம் பாதுகாப்போடுதான் இருக்கிறோம் என்ற உணர்வு தோன்றலாம். ஆனால், அதையெல்லாம் தாண்டி பல நுணுக்கமான சிக்கல்களைக் குழந்தை சந்திக்கிறது.
எல்லோரும் என்னை பாருங்க! - வீட்டில் பெரியவர்கள் பேசிக்கொண்டிருப்பார்கள். குழந்தை அது பாட்டுக்கு ஒரு விளையாட்டுப் பொருளைப் பிரித்துமேயும் வேலையில் ஈடுபட்டிருக்கும். இருந்தாலும் இடையிடையே பெரியவர்கள் பேசுவது பற்றித் தன் கருத்தைச் சொல்லும். அதாவது தனக்குத் தேவையென்று தோன்றுவதை, தன்னோடு தொடர்புடைய செய்தியை வேறு வேலைசெய்துகொண்டிருந்தாலும் அது கவனத்துடன் கேட்டுக்கொண்டிருக்கிறது. இது நமக்கும் பொருந்தும். நாம்சில வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருப்போம். வானொலியில் ஏதோ பாடல் ஒலித்துக்கொண்டிருக்கும். சட்டென பள்ளியோடு தொடர்புடைய செய்தி வருகிறது என்றால் நாம் வேலையை நிறுத்திவிட்டு அதைக் கேட்கத் தொடங்குவோம்.
ஆனால், பள்ளிக்கூடத்தில் நிலைமை வேறுவிதமாக இருக்கிறது. ஆசிரியர் வகுப்புக்கு வந்ததும் எல்லோரும் என்னை கவனியுங்கள். வேறு எந்த வேலையும் செய்யாதீர்கள் என்று கட்டாயப்படுத்துகிறார். அது மட்டுமல்ல ஆசிரியர் சொல்வதை எல்லோரும் ஒன்றுபோல் கவனிக்க வேண்டும் என்கிறார். இது குழந்தையைப் பொறுத்தவரை மிகவும் அசாதாரணமாக தோன்றுகிறது. இந்தச் சூழல் குழந்தையின் மனதுக்குள் சில அழுத்தங்களை, சந்தேகங்களை ஏற்படுத்தலாம். ஆனால் புதுச்சூழல், புது மனிதர்கள் என்று தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்கிறது.
நாங்கள் நடத்திய ஆய்வில் கீழ்வரும் உண்மையைக் கண்டடைந்தோம். ஆசிரியர் புத்தகம் வாசிக்க, மழலை வகுப்புக் குழந்தைகள் அங்கங்கு ஓடிக்கொண்டிருப்பார்கள். ஆனால், கதையைவாசித்து முடித்தபிறகு அடுத்து என்ன நடந்திருக்கும், அந்தச் செடிக்குக் கீழே மறைந்திருந்தது என்னவாக இருக்கும் என்றெல்லாம் கேட்டால் குழந்தைகள் பொருத்தமாகப் பதில் சொல்வதைப் பார்க்கலாம். தான் விரும்பியதை,தனக்குத் தேவையானதைக் குழந்தைக் கேட்கிறது என்பது தான் கற்றலுக்கான அடிப்படை. அப்படி குழந்தைக்குத் தேவையானதை நாம் செய்கிறோமா என்பதுதான் பெரிய கேள்விக்குறி.
எதற்காக மீண்டும் கேட்கிறீர்கள்? - குழந்தையின் குழப்பத்திற்குக் காரணமாகும் வேறொரு வகுப்பறைச் செயல்பாட்டைப் பார்ப்போம். ஆசிரியர் ஒரு குழந்தையிடம் ஒரு கேள்வி கேட்கிறார். அக்குழந்தை சரியான பதிலைச் சொல்கிறது. குழந்தை சொன்ன பதிலை வகுப்பிலுள்ள எல்லா குழந்தைகளும் கேட்கின்றனர். ஆசிரியர் பாராட்டுகிறார். ஆனால், மீண்டும் அதே கேள்வியை வேறொரு குழந்தையிடம் கேட்கிறார். இது குழந்தையின் அனுபவத்தில் இல்லாத ஒன்று. எல்லோருக்கும் பதில் தெரிந்தால் மீண்டும் அதே கேள்வியை யாராவது கேட்பார்களா என்று சந்தேகம் குழந்தைக்கு ஏற்படுவதைத் தடுக்க முடியாது. நான் பயிற்சியாளராக இருந்தபோது வகுப்பறை ஆய்வுக்குச் செல்வது வழக்கம். கோடைவிடுமுறையில் நாங்கள் ஆசிரியர்களுக்குப் பயிற்சி கொடுத்தோம்.
அந்தப் பயிற்சியின்படி ஆசிரியர் நடந்துகொள்கிறாரா? ஏதேனும் சிரமங்கள் இருக்கின்றனவா? கொடுத்த பயிற்சியின் தாக்கம் எத்தகையது? போன்றவற்றைக் கவனிப்பதே என் வகுப்பறை ஆய்வின் நோக்கம். ஆசிரியர் வகுப்புக்கு வந்தார். சிறகுள்ள நண்பர்களைப் பற்றித் தெரியுமா என்று கலந்துரையாடலைத் தொடங்கினார். பறவைகளும் நம்மைப்போலத்தான். நாமும் பேசுகிறோம். ஒரு பறவையும் பேசும். அது எது என்று கேட்க குழந்தைகள் கிளி என்று சொல்ல ஆசிரியர் கிளி என்று கரும்பலகையில் எழுதினார். இப்படி பாடும் பறவை, ஆடும் பறவை, மீன்பிடிக்கும் பறவை, தச்சு வேலை செய்யும் பறவை, தையற்காரப் பறவை என பறவைகளின் பெயர்கள் இடம்பெற்றுக்கொண்டே வந்தன. இறுதியில் அது பறக்கும், ஆனால் உயிரில்லை அது என்ன என்ற கேள்வியைக் கேட்டார். ஒருநிமிடம் வகுப்பே அமைதியானது. அடுத்த நிமிடம் பட்டம், விமானம் என்று விடைகள் வரத் தொடங்கின.
குழந்தைகள் கூறிய பதில்களை ஆசிரியர் கரும்பலகையில் எழுதினார். ஒவ்வொரு சொல்லாக வாசித்துக் காட்டினார். குழந்தைகளும் மொத்தமாக அச்சொல்லை உரக்க கூவினர். ஆசிரியர் இரண்டாம் முறையும் வாசிக்கத் தொடங்கினார். பாதிச் சொற்களை வாசித்திருப்பார். அப்போது என்னருகில் அமர்ந்திருந்த ஒன்றாம் வகுப்புக் குழந்தை ஐயோ, ஆசிரியைக்கே தமிழ் தெரியாதா என்று தனக்குத்தானே கேட்டுக்கொண்டது. வகுப்பு முடிந்தபிறகு அக்குழந்தையிடம் பேசினேன். திரும்பத் திரும்பப் படிப்பது எப்போது? தெரியாமலிருக்கும் போதுதானே என்றாரே பார்க்கலாம்.
- கட்டுரையாளர்: மூத்த கல்வியாளர், கல்வி இயக்குநர், ‘Qrius Learning Initiatives’, கோவை. தொடர்புக்கு: rajendran@qrius.in