

கேன்சர் தடுப்பூசி சிறுமிகளுக்கு அவசியமா என்பது குறித்து கடந்த வாரம் பேசத் தொடங்கினோம். பொதுவாக ஆண் பெண் உடலுறவுக்குப் பின், ஒருவரது பிறப்புறுப்பு சருமத்திலிருந்து மற்றவருக்குப் பரவுவதால், இருபாலருக்கும் ஏற்படும் ஹெச்பிவி நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் மூவரில் ஒருவருக்கு என்ற அளவில் ஏற்படக்கூடிய மிகச் சாதாரண ஒரு வைரஸ் தொற்றாக இது இருக்கிறது. சளி, இருமல் வைரஸ்கள் போலவே இந்த ஹெச்பிவி டிஎன்ஏ வைரஸ்களும் பெரும்பாலானவர்களுக்கு எந்தவொரு பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை, அப்படியே மறைந்தும் விடுகிறது.
ஆனால், ஒருசிலரில் மட்டும் இந்த டிஎன்ஏ வைரஸ்கள், குறிப்பாக மேற்சொன்ன ஹை-ரிஸ்க் ஹெச்பிவி வைரஸ்கள் 16, 18 ஆகியன மனித உடலுக்குள்ளேயே தங்கியிருந்து, செல்களை மெதுவாக பாதித்து, பல வருடங்களுக்குப் பிறகு புற்றுநோயாக வெளிப்படுகிறது. ஆரம்பகாலத்தில் இந்தத் ஹெச்பிவி தொற்றுநோயைத் தவிர்த்தால் பிற்காலத்தில் புற்றுநோயைத் தவிர்க்க முடியும் என்பதால் தான் இது இவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது. தொற்றுநோய் வேறு புற்றுநோய் வேறு என எண்ணியிருக்கும் பலருக்கு இது புதிய தகவலாக இருக்கவே செய்யும். ஹெச்பிவி தொற்று எந்தெந்த புற்றுகளையெல்லாம் உண்டாக்கும் என்பதை இனி தெரிந்து கொள்வோம்.
ஹெச்பிவி நோய்த்தொற்று பிற்காலத்தில் ஏற்படுத்தக்கூடிய புற்றுநோய்களில் முதன்மையானது பெண்களில் ஏற்படும் செர்விகல் கேன்சர் (cervical cancer) எனும் கருப்பைவாய் புற்று தான். ஆனால், கருப்பைவாய் மட்டுமன்றி பெண்களில் பிறப்புறுப்பு மற்றும் ஆசனவாய் புற்றுநோய்களையும் (vaginal, vulvar and anal cancers), அதேபோல் ஆண்களில் பிறப்புறுப்பு, ஆசனவாய்மற்றும் தொண்டை (penile, anal throatcancers) புற்றுநோய்களையும் இது ஏற்படுத்துகிறது. இத்தனைப் புற்றுநோய்களை ஒரு ஹெச்பிவி நோய்த்தொற்று ஏற்படுத்தலாம் என்றாலும், ஏன் பெண்களின், குறிப்பாக கருப்பைவாய் புற்றுநோயைத் தவிர்க்க மருத்துவ விஞ்ஞானிகள் இவ்வளவு பிரயத்தனம் மேற்கொள்கிறார்கள் என்றால், செர்விகல் கேன்சர் உண்டாக்கும் பாதிப்புகளால் தான்.
இன்றளவும் உலகெங்கும் பெண்களைத் தாக்கும் முக்கியப் புற்றுநோய் என்றால் அது கருப்பைவாய் புற்றுநோய் தான். உலகளவில் வருடந்தோறும் சுமார் 6 லட்சம் பெண்களை பாதிக்கும் இந்தப் புற்றுநோய், இவர்களில் 3 லட்சத்திற்கும் அதிகமான உயிரிழப்புகளை ஏற்படுத்திவிடுகிறது. நமது நாட்டில் மட்டும் ஒவ்வொரு வருடமும் 1.2 லட்சம் பெண்கள் கருப்பைவாய் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களில் 77,000 பேரை நாம் இழந்து வருகிறோம். அதாவது ஒவ்வொரு ஏழு நிமிடத்துக்கும் ஒரு பெண்ணை இழந்து வருகிறோம் என்பது தான் வேதனையான உண்மை. ஏன் இதில் மட்டும் இவ்வளவு மரணங்கள் என்றால், இந்த உள்தங்கிய கருப்பைவாய் புற்றுநோய் மற்ற புற்றுகளைப் போல அல்லாமல், ஆரம்ப அறிகுறிகள் எதுவுமின்றி இருப்பதால், நோய் முற்றிய ஸ்டேஜ் 3 மற்றும் 4-ல் மட்டுமே இது கண்டறிப்படுகிறது. பரவிய நிலையில் அது பெரும் உயிரிழப்புகளையும் ஏற்படுத்திவிடுகிறது.
(கேன்சர் தடுப்பூசி பற்றிய ஆலோசனை தொடரும்)
- கட்டுரையாளர் : மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர்; தொடர்புக்கு: savidhasasi@gmail.com