

‘கடலுக்கடியில் இருபதாயிரம் லீக்’ என்ற நாவலில் மின்சாரத்தில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல் பற்றி ஜூல்ஸ் வேர்ண் விவரித்திருப்பார். அக்கப்பலுக்குள் பழம் பொருட்கள் கொண்ட அருங்காட்சியகம், அரிய ஓவியங்கள், 12,000 புத்தகங்கள் கொண்ட நெடிய நூலகம், மின்விளக்கு வசதி கொண்ட அறைகள் எனப் பல சமாச்சாரங்கள் வைத்திருப்பார். இந்நாவலை எழுதி முடிப்பதற்கு மூன்று ஆண்டுகள் எடுத்துக் கொண்டார். எதிர்பார்த்தபடியே பெரும் வெற்றி பெற்றதால், அப்பணத்தை வைத்து தனக்கென்று ஒரு பெரிய கப்பல் கட்டினார். இத்தனைக்கும் அவர் காலத்தில் நீர்மூழ்கிக் கப்பல்களே கிடையாது.
ஜூல்ஸ் வேர்ணின் தீர்க்கதரிசனம்: ‘பூமியில் இருந்து நிலவுக்கு’ என்ற நாவலில் பல தீர்க்கதரிசனங்கள் வெளிப்பட்டன. 1865இல் வெளியான இந்நாவலை வைத்து,1960களில் விண்வெளி பயணம் மேற்கொண்ட அமெரிக்காவை நாம் இங்கு ஒப்புமைப்படுத்திப் பார்ப்போம். நாவலில் ஃப்ளோரிடா மாகாணத்தில் இருந்து விண்கலம் ஏவப்படுதாய் சொல்லியிருப்பார். நிஜத்திலும் அப்பல்லோ விண்கலம் அந்நகரத்துக்கு மிக அருகிலிருந்துதான் ஏவப்பட்டது. கதைப்படி முதலில் விலங்குகளை நிலவுக்கு அனுப்புவார்கள். நிஜத்திலும் குரங்கு மற்றும் நாய்களைத்தான் நாசா நிறுவனம் அனுப்பிவைத்தது. கதையிலும் நிஜத்திலும், விண்வெளிக்குச் சென்று திரும்புகையில் பாராசூட் அணிந்தவர்கள் கடலில் குதித்தே கரையொதுங்கினார்கள்.
புத்தக வாசிப்பும் எழுத்தும்: தன் கதைக்கான அறிவியல் பின்புலங்களை, அறிவியல் ஆய்வு இதழ்கள் மூலம் படித்துத் தேர்ந்தார் ஜூல்ஸ். நிஜத்தில் பல விஞ்ஞானிகளைத் தேடிக் கண்டுபிடித்து விவாதித்தார். இந்த உரையாடல்களும் வாசிப்பும் அவரின் அறவியல் எழுத்தை மேலும் மேலும் சாகசமூட்டும் ஜனரஞ்சக எழுத்தாய் மடைமாற்றியது. தொடக்கத்தில் ஆண்டுக்கு ஒருநாவல் என ஒப்பந்தமிட்ட பதிப்பாளர், ஆண்டுக்கு மூன்று நாவல் என உயர்த்திக் கொள்ளும் அளவுக்கு ஜூல்ஸ் எழுத்துக்கான சந்தை மதிப்பு கூடிக்கொண்டே போனது. பல ஆண்டுகளுக்குப் பின் தன் சொந்த ஊருக்குத் திரும்பியவர், ‘எ ஜேர்னி டூ தி சென்டர் ஆஃப் தி எர்த்’ எனும் உலகப் புகழ்பெற்ற நாவலை எழுதினார். உலகின் பல மொழிகளில் விளக்கப்படங்கள் கொண்டு மொழிபெயர்க்கப்பட்டது.
கப்பல் விபத்தால் பாதிக்கப்பட்டு தனித்தீவில் அடைக்கலமாகும் மையத்தில் எழும் நாவல்களுள், டேனியல் டீஃபோ எழுதிய ‘ராபின்சன் குருசோ’ முதன்மையானது. அதனையொட்டி ‘தி ஸ்விஸ் ஃபேமிலி ராபின்சன்’ என்ற கதையை 1812இல் டேவிட் விஸ் எழுதினார். அதன் தொடர்ச்சியாக ‘தி கேஸ்டவேஸ் ஆஃப் தி ஃப்ளேக்’ (The Castaways of the Flag) என்ற கதையை ஜூல்ஸ் எழுதினார். கப்பல் விபத்தில் தனியாக மாட்டிக் கொள்ளும் கதநாயகக் கதையில் அவருக்கு எப்போதும் ஒரு பித்தம் உண்டு.
ஜூல்ஸின் இறுதிக்காலம்: ‘அரவுண்ட் தி வேர்ல்ட் இன் 80 டேஸ்’ (Around the world in 80 days) நாவல் மூலம் பெரும் செல்வந்தர் ஆனார். ரோம் சென்று போப் பதின்மூன்றாம் லியோவை தனிமையில் சந்திக்கும் அளவுக்கு செல்வாக்கு அதிகரித்தது. வெனிஸ் வீதியில் இவர் நடந்து வரும்போது, பட்டாசுகள் வெடித்து மின் பெயர்பலகை வைத்து வரவேற்றனர். 1886ஆம் ஆண்டு தன் சகோதரர் மகனால் இவர் காலில் குண்டடிப்பட்டது. மருத்துவச் சிகிச்சையின் மூலம் துப்பாக்கிக் குண்டை நீக்கிய பிறகு, குச்சி வைத்து நடக்கத் தொடங்கினாலும் இறுதிவரை வலியுடன் போராடினார். அவர் பார்வையும் மங்கத் தொடங்கியது. தொடர்ச்சியாக எழுதியதால் கைகளில் நடுக்கம் ஏற்பட்டது. 1905ஆம் ஆண்டு, 77ஆவது வயதில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு உலக வாழ்விலிருந்து விடுபட்டார்.
பிதாமகன் மரபு: ஜூல்ஸ் வேர்ணின் புத்தகங்கள் உலகெங்கிலும் உள்ள 140 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டன. அறிவியல் புனைவெழுத்தின் தந்தையர் இருவருள் ஒருவராக அங்கீகரிக்கப்படுகிறார். பூமத்திய ரேகையின் வடதுருவத்தில் விமானத்தை நிலைநிறுத்திய அட்மிரல் ரிச்சர்ட் பயர்ட், “ஜூல்ஸ் என்னை வழிகாட்டுகிறார்” என உரக்கக் கத்தும் அளவுக்கு பல விஞ்ஞானிகளுக்கு வழிகாட்டியாய் உள்ளார். நிலவில் பாறை விழுந்த ஒரு பள்ளத்திற்கு, இவர் பெயரைச் சூட்டிப் பெருமைப்படுத்தியுள்ளனர். ஜூல்ஸின் பல நாவல்கள் ஹாலிவுட்டில் திரைப்படம் ஆனது. எழுத்தாளர் ரே பிரேடிபரி சொல்வதுபோல், “ஒருவகையில் நாம் எல்லோரும் ஜூல்ஸ் வேர்ணின் குழந்தைகள்தான்.”
- கட்டுரையாளர்: எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், ஆய்வு மாணவர்; தொடர்புக்கு: iskrathewriter@gmail.com