

முன்பெல்லாம் கந்துவட்டி கும்பல் வீடு தேடிவந்து கடன் கொடுப்பார்கள். 12 மணி நேரம், 24 மணி நேரம், 2 நாள், வாரம், மாதம் என பல வகையாக பிரித்து தாறுமாறாக வட்டி வசூலிப்பார்கள். இப்போதும் ஆங்காங்கே இந்த மோசடி தொடர்கிறது. கந்துவட்டி கும்பல் கடனை செலுத்தாத குடும்பத்தினரை முதலில் மரியாதைக் குறைவாகப் பேசுவார்கள். உறவினர் மத்தியில் கேவலப்படுத்துவார்கள். அப்போதும் தரவில்லை என்றால் தாக்குவார்கள். இன்னொருபுறம் அந்த வீட்டின் பெண்களிடம் அத்துமீறுவார்கள். இதுபோன்ற தொல்லைகளைத் தாங்க முடியாமல் ஏராளமானோர் குடும்பத்தோடு தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இதையடுத்து அரசு கடுமையான நடவடிக்கை மேற்கொண்டதால் கந்துவட்டி கொலைகள் வெகுவாக குறைந்துள்ளன.
ஆன்லைன் கந்து வட்டிக் கும்பல்: இப்போது காலம் மாறிவிட்டதால் தொழில்நுட்பத்தின் வாயிலாக ஆன்லைன் செயலி கடன் வடிவில் கந்துவட்டி கும்பல் வலம் வருகிறது. நடுத்தர வர்க்கத்தினரை, குறிப்பாக 18 வயது முதல் 40 வயதினரை குறிவைக்கின்றனர். வாட்ஸ் அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைத்தளங்கள் வழியாக ஆசை வலையை வீசுகின்றனர். பணத்துக்காக எந்த நிபந்தனைகளையும் படிக்காமல், செல்போனில் எல்லாவற்றையும் கண்காணிக்க அனுமதி கொடுக்கின்றனர். ஆதார் கார்டு எண், பான் கார்டு எண், வங்கி கணக்கு எண் ஆகியவற்றையும் சமர்ப்பிக்கின்றனர். கடனுக்கு தாறுமாறாக வட்டி வசூலிப்பதுடன், கடனை உரிய நேரத்தில் செலுத்தாவிடில் போன் மூலமாக மிரட்டுகின்றனர்.
ஆதார் கார்டு, பான் கார்டு, ஏடிஎம் கார்டு ஆகியவற்றை பிளாக் செய்துவிடுவதாக அச்சுறுத்துகின்றனர். உறவினர்களுக்கு மெசேஜ் அனுப்பி அவமானப்படுத்துகின்றனர். இறுதியில் அவர்களின் படத்தை ஆபாசமாக மார்ஃபிங் செய்து, கேவலப்படுத்துகின்றனர். கந்து வட்டி கும்பல் கையாண்ட அதே பாணியை ஆன்லைனில் இந்த கும்பல் பின்பற்றுகின்றனர். உலகின் ஏதோ ஒரு மூலையில் இருந்துகொண்டு ஆன்லைன் மூலமாகவே எல்லாவகையிலும் தொல்லை கொடுக்கின்றனர். இந்த கொடுமையை தாங்க முடியாமல் கடந்த 5 ஆண்டுகளில் 500க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாகப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
புகார் அளிப்பது எப்படி? - வாடிக்கையாளரின் பயத்தையும் மானத்தையும் முதலீடாகக் கொண்டே ஆன்லைன் செயலி கடன் கும்பல் செயல்படுகிறது. எனவே இதனை மிகுந்த தைரியத்தோடு துணிச்சலாக எதிர்கொள்ள வேண்டும். முதல் வேலையாக செல்போனில் தரவிறக்கம் செய்த கடன் செயலியை ‘அன்இன்ஸ்டால்’ செய்ய வேண்டும். அந்த கும்பல் தொடர்புகொண்ட அத்தனை செல்போன் எண்களையும் பிளாக் செய்ய வேண்டும். சமூக வலைத்தள பக்கங்களை மூடிவிட்டு, உடனடியாக சிம் கார்டையும் அகற்ற வேண்டும். இந்த கும்பலின் தொல்லை குறித்து சைபர் க்ரைம் போலீஸாரிடம் புகாரளிக்க வேண்டும். இதற்காக தேசிய அளவில் உருவாக்கப்பட்டுள்ள உதவி மையத்தை 1930 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள வேண்டும். sachet.rbi.org.in இணையதளம் மூலமாக ரிசர்வ் வங்கியிலும் புகார் அளிக்கலாம்.
சர்வதேச மோசடி வலைப்பின்னல்: ஆன்லைன் கடன் செயலி கும்பல் உலகம் முழுவதும் பெரும் வலைப்பின்னலைக் கொண்டுள்ளது. சீனாவில் தொடங்கி உள்ளூர் வரை தொடர்புகள் நீண்டுள்ளன. நேபாளம், உத்தரபிரதேசம், பிஹார் மட்டுமல்லாது கரூர், திருப்பூர் வரை நெட்வொர்க் வைத்திருக்கிறார்கள். வட இந்தியக் கும்பலுக்கு உள்ளூர் ஏஜெண்டுகளும் இருக்கிறார்கள். அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளில் 2012-ம் ஆண்டில் இந்த கும்பலின் ஆட்டம் மிகவும் மோசமாக இருந்தது. இதனால் ஆன்லைன் கடன் செயலிகளை அந்த நாடுகள் 2012-ம் ஆண்டிலே தடை செய்தன.
இந்தியாவில் 2015-ம் ஆண்டுக்கு பின்னர் இந்த வகை கடன் செயலிகள் அதிகரித்துள்ளன. 2021-ம் ஆண்டில் மட்டும் இந்த மோசடி குறித்து 14,007 வழக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த 2 ஆண்டுகளில் ரூ.1000 கோடிக்கும் அதிகமாக சீனாவுக்கு சட்ட விரோதமாகச் சென்றிருப்பதாகப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இந்த வகை செயலிகள் கூகுள் பிளேஸ்டோர் மூலமாகத் தரவிறக்கம் செய்யப்படுவதால், அவற்றை கட்டுப்படுத்துமாறு கூகுள் நிறுவனத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து கூகுள் சில சட்டவிரோத செயலிகளை நீக்கியது. ரிசர்வ் வங்கியின் தேசிய கொடுப்பனவு கழகமானது (National Payment Corporation of India) ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகள், கடன் செயலிகள் ஆகியவற்றைத் தீவிர கண்காணித்து வருகிறது.
தொழில்நுட்பம் வளர வளர ஆன்லைன் கடன் செயலி கும்பல் வெவ்வேறு வடிவங்களில் தில்லுமுல்லு காரியங்களில் ஈடுபடுகின்றன. அவற்றை கட்டுப்படுத்த முடியாமல் மத்திய, மாநில அரசுகள் திணறுகின்றன. இத்தகைய கடன் செயலிகளில் கடன் வாங்காமல் இருப்பதே, அதற்கு தீர்வாக இருக்க முடியும்.
(தொடரும்)
- கட்டுரையாளர் தொடர்புக்கு: vinoth.r@hindutamil.co.in