

பன்மொழி வித்தகர் நீரத் சந்திர சவுத்ரி. இவர் 1897 நவம்பர் 23 வங்கதேசம் கிஷோர்கஞ்சில் பிறந்தார். கொல்கத்தா ரிப்பன் கல்லூரியில் பட்டம் பெற்றார். ஆங்கிலம், வங்காளம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் புலமை பெற்றிருந்தார். கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் ஸ்காடிஷ் சர்ச் கல்லூரியில் வரலாற்றை சிறப்பு பாடமாக பயின்று பட்டம் பெற்றார். இந்திய வரலாறு, கலாச்சாரம் குறித்து ஆங்கிலத்திலும் வங்காளத்திலும் நிறைய எழுதினார். இவருக்கு எழுத்து மீது இருந்த ஆர்வம் காரணமாக பத்திரிகை துறையில் பணிபுரிய தொடங்கினார். ‘மாடர்ன் ரெவ்யூ’ என்ற பத்திரிகையில் இவரது கட்டுரைகள் பிரசுரமாகின.
1941-ல் டெல்லி அகில இந்திய வானொலி நிலையத்தில் அரசியல் விமர்சகராக நியமிக்கப்பட்டார். 1951-ல் ‘தி ஆட்டோபயாகிரபி ஆஃப் ஆன் அன்நோன் இண்டியன்’ என்ற இவரது முதல் நூல் வெளிவந்தது. இதில் இடம்பெற்ற தகவல்களால் அரசியல் மற்றும் அதிகார வர்க்கத்தில் உள்ளவர்களின் கோபத்துக்கு ஆளானார். 1975-ல் இலக்கியப் பங்களிப்புகளுக்காக சாகித்ய அகாடமி விருது, அமெரிக்காவின் ‘டஃப் கூப்பர்’ நினைவு விருது பெற்ற முதல் இந்தியர் நீரத் சந்திர சவுத்ரி என்பது குறிப்பிடத்தக்கது.