

கார், பைக், பஸ், லாரி இவற்றையெல்லாம் ரிப்பேர் செய்வதற்கு மெக்கானிக் கோர்ஸ் இருக்கிறது. அதுபோல விமானத்தை ரிப்பேர் மற்றும் ரெகுலர் மெயின்டனன்ஸ் கோர்ஸ் ஏதும் உள்ளதா? அதனை படித்தால் வேலை கிடைக்குமா?- மணிமாறன், புதுக்கோட்டை.
விமானப் பயணம் என்பது மிகவும் பாதுகாப்பாக இருத்தல் அவசியம். அதற்கு முக்கியமாக விமானத்துக்கு வகுக்கப்பட்டுள்ள காலவரையில் பராமரிப்பு பணி முறையாக மேற்கொள்ளப்பட வேண்டும். இதற்காக தனியாக ஏர் கிராஃப்ட் மெயின்டனன்ஸ் இஞ்ஜினியரிங் படிப்பு உள்ளது. இதனை படிக்க பிளஸ் 2 வில் இயற்பியல், வேதியியல், மற்றும் கணிதம் படித்திருக்க வேண்டும். இந்த பொறியியல் பட்டப்படிப்பை DGCA-யினால் (Director General of Civil Aviation) அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் மட்டுமே படிக்க வேண்டும். இந்த அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட 47 கல்வி நிறுவனங்கள் இந்தியாவில் உள்ளன.
நான்காண்டு பட்டப்படிப்பான இதில் இரண்டு வருடம் கல்லூரியில் பயிற்சி அளிக்கப்பட்டும்; அடுத்த இரண்டு வருடம் இத்துறை சார் நிறுவனத்தில் ’இஸ்டர்ன்’ ஆக இருத்தல் வேண்டும். இதன் பின்னர் பல நிலைகளில் லைசன்ஸ் பெற வேண்டும். இப்படிப்பினை படிக்க அகில இந்திய அளவில் நுழைவுத்தேர்வும் நடத்தப்படுகிறது. அதன் பெயர் AME CEE எனப்படும் ஏர்கிராப்ட் மெயின்டனனஸ் இஞ்ஜினியரிங் காமன் என்ட்ரன்ஸ் எக்ஸாம் ஆகும். இந்நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுவதன் மூலம் அகில இந்திய வரிசைப்படி நல்ல கல்லூரிகளில் கல்வி உதவித் தொகையுடன் படிக்கலாம்.
தமிழகத்தில் இதனை பின்வரும் கல்வி நிறுவனங்கள் வழங்குகின்றன. 1. பார்க்’ஸ் ஸ்கூல் ஆஃப் ஏரோனாட்டிக்கல் சயின்சஸ், கோவை 2. நேரு காலேஜ் ஆஃப் ஏரோநாடிக்ஸ் அண்ட் அப்ளைடு சயின்ஸ், கோவை 3. எச்.சி.ஏ.டி, கன்னியாகுமரி 4. விநாயகா மிஷன்ஸ் ஏவியேஷன் அகாடமி, சேலம் 5. ஹிந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆஃப் இஞ்ஜினியரிங் டெக்னாலஜி, சென்னை 6. ஏர் கார்னிவல் ஏவியேஷன் அகாடமி, கோவை. வேலை வாய்ப்பினை பொருத்தவரை பிரகாசமாகவே உள்ளது. ஏனெனில் இந்தியாவில் உள்ள விமான நிறுவனங்கள் சுமார் 4000க்கும் மேல் கொள்முதல் ஆர்டர்களை வழங்குகின்றன. ஏற்கெனவே இருக்கும் விமானங்கள் மற்றும் வரவுள்ள புதிய விமானங்கள் என அதனையும் பராமரிக்க வேண்டி இருப்பதால் ஏராளமான வேலை வாய்ப்புகள் உள்ளன. உயர்கல்வி, வேலைவாய்ப்பு தொடர்பான உங்களது சந்தேகங்களை ‘வேலைக்கு நான் தயார்’ பகுதிக்கு vetrikodi@hindutamil.co.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி நிபுணரின் வழிகாட்டுதல் பெறுங்கள்.
- கட்டுரையாளர்: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை முன்னாள் இணை இயக்குநர்.