

இந்த பயணத்தில் நாம் ஆவலாக எதிர்பார்த்து இருந்தது இந்தநாளுக்காகத்தான். காஷ்மீர் செல்ல வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. அந்த ஆசை மிக அருகில் வந்துவிட்டது.அமிர்தசரஸிலிருந்துஜம்மு நோக்கி அதிகாலையிலேயே கிளம்பத் தயாரானோம். எதிர்பாராததை எதிர்பார்க்க வேண்டும், இந்த பயணம் நமக்கு சொல்லிக்கொடுப்பதும் அதுதான். தயாராகிக் கொண்டிருக்கும்போது இணையர் பிரேமுக்கு திடீரென முதுகுவலி வந்தது. கொஞ்ச நேரம் ஒய்வு எடுத்தால் சரியாகும் என நினைத்தோம். ஆனால், நேரம் ஆக ஆக முதுகுவலி அதிகரித்தது. கூகுளில் தேடியபோது அருகில் எந்த மருத்துவமனையும் காட்டவில்லை. அதனால் பொழுது விடியும் வரை காத்திருந்தோம். விடிந்ததும் அருகில் இருப்பதாக தெரியவந்த அரசு மருத்துவ மனைக்கு ஆட்டோபிடித்து விரைந்தோம்.
ஒரே ஒரு ஊசி மட்டும் போட்டுவிட்டு, அன்று முழுதும் ஒய்வு எடுக்க மருத்துவர் சொன்னார். சாப்பிட்டுவிட்டு இருவரும் நன்றாக ஓய்வெடுத்தோம். தூங்கி எழுந்தபோது வலி முழுவதும் குறைந்திருந்தது. தொடர்ச்சியாக நாற்பது நாட்களுக்கு மேல் வண்டி ஒட்டியதன் விளைவுதான் இந்த முதுகுவலி. அதனால் இனி ஓய்வெடுத்து பயணிக்கலாம் என்ற முடிவுக்கு வந்தோம்.
காத்திருந்த புதிய அனுபவம்: மறுநாள் காலை ஜம்மு புறப்பட்டாகிவிட்டது. பஞ்சாப் எல்லையைக் கடந்தபோதேசெல்போன் நெட்வொர்க் கிடைக்கவில்லை. ஆஃப்லைன் மேப் இருந்ததால் தொடர்ந்து பயணிக்க முடிந்தது. ஜம்முவில் பார்ப்பதற்கு நிறைய இடங்கள் இருந்தாலும், நம் எண்ணம் எல்லாம் காஷ்மீராக இருந்ததால், அன்று இரவுமட்டும் அங்கு தங்கிவிட்டு மறுநாள் கிளம்புவதாகத்திட்டம். மாலையே ஜம்மு வந்து சேர்த்தாகிவிட்டது. காஷ்மீர் போவதற்கு ஏதுவாகஅந்த எல்லையிலேயே ஹோட்டல் எடுத்துவிட்டோம்.
இனி புதிதாக சிம்கார்டுவாங்க வேண்டும். நிறைய செல்போன் கடைகள்இருக்கின்றன. அருகில் இருந்தபஜாருக்குசென்றோம். ஐந்நூறு மீட்டருக்கு ஒரு ராணுவ வீரர் பாதுகாப்புக்கு நின்றிருந்தனர். பத்து நிமிடத்துக்கு ஒரு ராணுவ வாகனம் நம்மை கடந்து சென்றது. இதையெல்லாம் பார்க்க புது அனுபவமாக இருந்தது. சீக்கிரம்சிம் கார்டு வாங்கிவிட்டு ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தோம். இதுவரை நாம் பயணித்தது எல்லாம் தார்சாலைகளில். ஆனால், இனி மேடு பள்ளம், குழிகளில்தான் பயணிக்கப்போகிறோம்.
சவாலான பயணம்: காஷ்மீர் கனவு கைக்கு எட்டும் தூரத்தில்வந்துவிட்டது. நாம் நினைத்ததுபோலவே சாலை மோசமாக இருந்தது. இமயமலையில் போகும் பாதைகள் எல்லாமே கடினமாகத்தான் இருந்தன. சில இடங்களில் நன்றாகவும், சில இடங்களில் பெரிய பெரிய குகைகளில் செல்லும்படியாகவும் சாலைகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த மலைப்பாதையில் தான் ட்ரக் லாரிகள் வரிசைகட்டி பயணித்துக்கொண்டு இருந்தன. இருநூற்று ஐம்பது கிலோமீட்டர் தூரம் தான், ஆனால் இந்த மலைப்பாதையில் பயணிக்க அதிக நேரம் ஆனது. சேறும் சகதியுமான சாலைகளில் பெரிய வண்டிகள் பல சிக்கிக் கொண்டன, அதனால் போக்குவரத்து நெரிசலும் அதிகமானது.
ஸ்ரீநகரை நெருங்கிவிட்டோம் என்பதை ராணுவ வண்டிகளின் எண்ணிக்கையைப் பார்த்துப் புரிந்துகொண்டோம். புல்வாமா பகுதியை கடந்து போகும்போது எந்த இடத்திலும் நம் வாகனத்தை நிறுத்தமுடியாது. நூறு மீட்டருக்கு ஒரு ராணுவ வீரர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தார். நகர் செல்லும் வழி எல்லாமே ராணுவ வீரர்களின் கட்டுப்பாட்டிலிருந்தது. இடையிடையே நிறைய பரிசோதனைகள். அதையெல்லாம் தாண்டி நகர் வந்துசேர இரவாகிவிட்டது. நடுக்கும் குளிரில் நகர் அழகை இரவில் காண முடியாதது கொஞ்சம் வருத்தம் தான். ஆனால் மறுநாள் காலை அந்த இயற்கை நமக்காக வைத்திருந்தது ஒரு மிகப்பெரிய அதிசயம்.
- கட்டுரையாளர்: இதழியலாளர், பயணப் பிரியை; தொடர்புக்கு: bharaniilango@gmail.com