கற்றது தமிழ் - 22: நம் பண்புகள் கோடி பெறுமா?

கற்றது தமிழ் - 22: நம் பண்புகள் கோடி பெறுமா?
Updated on
2 min read

குழலியும் சுடரும் தேர்வுக்கான பாடங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்க, பாப்பா தன் புத்தகத்தை எடுத்து வந்து நானும் படிக்கிறேன் என்று அவர்கள் அருகே அமர்ந்தாள்.

மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம்

மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்

என்று வாய்விட்டுப் படிக்கத் தொடங்கினாள்.

சுடர்: பாப்பா, ரொம்ப அழகாச் சொல்றியே...

குழலி: நாமும் சின்னப்பிள்ளைகளா இருக்கிறப்போ இந்தப் பாட்டெல்லாம் படிச்சிருக்கோம். உனக்கு நினைவில்லையா சுடர்.

சுடர்: அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்னு படிச்சது நினைவிருக்கு. பாப்பா படிச்சது ஔவையார் பாடினதுதான...

குழலி: இல்ல சுடர், இது உலகநாதர் எழுதின உலக நீதியில வருது.

சுடர்: அப்படியா... ஔவையாராதான் இருப்பாங்கன்னு நினைச்சிட்டேன்.

குழலி: ஆமா, அறிவுரை சொன்னாலே பாட்டின்னு தான நினைப்போம். ஔவை அதனாலதான் நமக்குப் பாட்டியாத் தெரியுறாங்க. கவிஞர் இன்குலாப் ஔவைன்னு ஒரு நாடகம் எழுதியிருக்காராம்.

சுடர்: எந்த ஔவையைப் பத்தி எழுதியிருக்கிறாரு.

குழலி: இது சரியான கேள்வி... நாம ஏற்கெனவே பேசினோமே, பாடினின்னு... அதியமானோட நட்புக்கொண்ட இளமையான ஔவை. மன்னனையும் கேள்வி கேட்கிற துணிச்சலான ஔவை. நீதிநெறிகளை மட்டுமே சொல்லிக்கிட்டிருந்த பாட்டியாக நம்ம எல்லாரும் நினைக்கிற ஔவை இல்ல இந்த ஔவைன்னு சொல்றாரு.

சுடர்: ம்... அப்ப அவர் சொல்ற ஔவைய சங்க கால ஔவைன்னு புரிஞ்சிக்கலாமா.

குழலி: கிட்டத்தட்ட சரிதான். ஆனா சங்க இலக்கியத்துல தொகுக்கப்பட்ட பாடல்கள் எல்லாத்தையும் எழுதியவர் இந்த ஒரு ஔவைதானான்னு நம்மள யோசிக்க வைக்கிறாரு.

சுடர்: மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம்னு பாப்பா படிச்ச மாதிரியே, ஔவையாரோட பாட்டு ஒன்னு இருக்கு. ஆனா எனக்கு வரிகள் நினைவுக்கு வரல குழலி.

குழலி: மதியாதார் முற்றம் மதித்தொரு கால்சென்று

மிதியாமை கோடி பெறும்;

உண்ணீர் உண்ணீர் என்று உபசரியார் தம்மனையில்

உண்ணாமை கோடி பெறும்;

கோடி கொடுத்தும் குடிப்பிறந்தார் தம்மோடு

கூடுதல் கோடி பெறும்;

கோடானு கோடி கொடுப்பினும் தன்னுடைநாக்

கோடாமை கோடி பெறும்.

சுடர்: இந்தப் பாட்டுதான்னு நினைக்கிறேன்.

குழலி: இது ஔவையாரோட தனிப்பாடல்கள்ல வருது சுடர். இந்தப் பாட்டுக்குப் பின்னால ஒரு சுவாரஸ்யமான கதை இருக்கு.

சுடர்: என்னன்னு சொல்லேன்.

குழலி: ஒரு சோழ மன்னன் தன் அவையில இருந்த புலவர்களக் கூப்பிட்டு, நாளைக்குப் பொழுது விடியறதுக்குள்ள நாலு கோடி பாடல்களப் பாடணும்னு ஆணையிட்டானாம். ஒரே இரவுக்குள்ள நாலு கோடி பாடல்கள எப்படிப் பாடுறதுன்னு புலவர்கள் திகைச்சிப் போய் நின்னாங்களாம். அப்ப அங்க வந்த ஒளவையார், புலவர்கள் ஏன் இப்படிக் கவலையா இருக்காங்கன்னு காரணத்தக் கேட்டாங்களாம். அவங்களும் சொல்ல, இதுக்காகவா கவலைப்படுறீங்க. கவலைய விடுங்க. இப்பவே நாலு கோடிப் பாடல்களப் பாடுறேன்; மன்னன்கிட்டப் போய் இந்தப் பாட்டப் பாடுங்கன்னு சொன்னாங்களாம். அந்தப் பாட்டு தான் இது.

சுடர்: ஒரு பாட்டப் பாடிட்டு நாலு கோடிப் பாடல்களப் பாடியாச்சுன்னா எப்படி குழலி..

குழலி: இந்தப் பாட்டுல எத்தன கோடிவருதுன்னு பாரு சுடர். நம்மள மதிக்காதவங்கள மட்டுமில்ல, நல்ல பண்புகள மதிச்சு நடக்காதவங்க வீட்டு வாசல மிதிக்காம இருக்கிற பண்பு ஒரு கோடிப் பொன்னுக்கு இணையானதாம். நம்மள உள்ளன்போட கூப்பிட்டு சாப்பிடச் சொல்லாதவங்க வீட்டுல,அதாவது சும்மா வார்த்தைக்கு வாங்க, சாப்பிடுங்கன்னு சொல்வாங்களே அவங்க வீட்டுல சாப்பிடாம இருக்குறது ஒரு கோடிபெறுமாம். ஒரு கோடி பொன்னக் கொடுத்தாவது, நல்ல குடும்பத்தில பிறந்தவங்களோட சேர்ந்து வாழ்றது கோடிப் பொன்னுக்கு ஒப்பாம். அதே போலப் பல கோடிப் பொன் கிடைக்கிறதா இருந்தாலும் சொன்ன சொல் தவறாம வாழ்றது கோடி பொன்னுக்குச் சமமாம். இப்படி நாலு கோடியப் பாடினாங்களாம் ஔவை. பொன்னோ பணமோ அது கோடியா இருந்தாலும் நல்ல பண்புகள் அதை விட உயர்வானதுன்னு சொன்ன ஔவையோட அறிவை நாம வியக்கத்தான் வேணும்.

- கட்டுரையாளர்: தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர்; தொடர்புக்கு: janagapriya84@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in