

இந்தியாவின் குழந்தைகள் நல மருத்துவத்தின் தந்தை டாக்டர் ஜார்ஜ் கொஹிலோ குறித்து கடந்த வாரம் தெரிந்து கொண்டோம். குழந்தைகள் நல மருத்துவத்தின் தந்தை தொடங்கி வைத்ததை வழிநடத்திச் சென்ற பெருமை அடுத்து வந்த இரு மருத்துவர்களைச் சாரும். ஒருவர் டாக்டர் எஸ். டி. ஆச்சார். மற்றொருவர் டாக்டர் கே.சி. சௌத்ரி. தமிழகத்தில் இன்றளவும் குழந்தைகள் நலன் என்றால் எழும்பூர் (எக்மோர் ஆஸ்பத் திரி) என்பது எழுதப்படாத விதி எனலாம்.
"தி எக்மோர் மாடல்" எனப்படும் அனைத்து தரப்பு குழந்தைகளுக்கான தரமான குழந்தைகள் நல சிகிச்சையை வழங்கும் செயல் திட்டத்தைத் தொடங்கியவர் தான் டாக்டர் எஸ். டி. ஆச்சார். 'The Institute of Child Health' எனும் எழும்பூரின் குழந்தைகள் நல மருத்துவமனையின் பேராசிரியராகப் பணியாற்றிய அவர், குழந்தைகளுக்கான தடுப்பூசிகள், நோய்த்தொற்று தடுப்பு, ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளிட்ட பற்பல திட்டங்களுக்கும் மாநில அரசுடன் இணைந்து செயலாற்றியுள்ளார். அடுத்ததலைமுறையினர் ஆற்றலுடன் விளங்க வேண்டும் என்று நூற்றுக்கணக்கான குழந்தைகள் நல மருத்துவர்களை உருவாக்கிய இவரது பெயரில் இன்றும், "டாக்டர் எஸ். டி. ஆச்சார் விருது" சிறந்த மருத்துவ மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
"எளிதில் குணப்படுத்தக் கூடிய நோய்களிலிருந்து குழந்தைகளைக் காப்பாற்று வதைக் காட்டிலும் ஒரு மருத்துவனுக்குத் தேவை என்ன..? இந்த சேவையைச் செய்வதற்கு முன் மரபணுக்கள் வரைச் செல்லும் ஆய்வுகள் எதற்கு..?" என்ற கேள்வியை தனது மாணவர்களிடம் எழுப்பியதோடு, தனது வாழ்நாள் முழுவதும் அதனைக் கடைபிடித்து வந்தவர் தான் டாக்டர் கே.சி.சௌத்ரி. தனது மண்ணான கல்கத்தாவில் குழந்தைகள் நல மருத்துவத் துறையையும் அதன் செயல்பாடுகளையும் மிக நேர்த்தியாக முன் நடத்திச் சென்றவர் இவர்..!
இப்படி குழந்தைகள் நலன் எனும் ஒரு முக்கியத் துறையைத் தொடங்கி, நாடெங்கும் அதனை திறம்பட செயல்படுத்தியது இந்த மும்மூர்த்தி மருத்துவர்கள் என்றால், நமது கட்டுரையின் ஆரம்பத்தில் நாம் குறிப்பிட்ட குறைமாதக் குழந்தைகளின் நலனை சர்வதேச தரத்துடன் எடுத்துச் செல்ல முதல் வித்திட்டது டாக்டர் ஓம்கார் நாத் பாக்ஹூ எனும் தனி மருத்துவரின் எண்ணம் எனலாம்.
அமெரிக்கா மற்றும் கனடாவில் Neonatology எனும் பிறந்த குழந்தைக்கான சிறப்பு மேற்படிப்பை மேற்கொண்டு, தேசம் திரும்பிய டாக்டர் ஓம்கார் நாத் பாக்ஹூ, பேராசிரியர் அனில் நராங்குடன் இணைந்து, தான் பணிபுரிந்த பி.ஜி.ஐ. சண்டிகரில் பிறந்த குழந்தைக்கான சிறப்பு மருத்துவத் துறையை 1980 களின் இறுதியில் தொடங் கினார். அந்த விதை தான் இன்று ஆல விழுதாக, தேசமெங்கும் பல நூறு நியோநேட்டாலஜிஸ்ட்களுடன், 600 அல்லது 700 கிராம் அளவு எடை மட்டுமே உள்ள கையளவுக் குழந்தைகளைக் காப்பாற்றி வரு வதை ஒரு தவம் போலச் செய்து வருகிறது..
இந்த குழந்தைகள் நல மருத்துவர்கள் தான், இன்றும் ஷாருக்கான், பிரியங்கா சோப்ரா போன்ற பல முன்னணிநட்சத்திரங்களுக்கும், மற்ற பல்லாயிரக் கணக்கான பெற்றோர்களுக்கும் பிறந்தகுறைமாதக் குழந்தைகள் எந்தவொரு குறையும் இன்றி, எதிர்கால நியூட்டன் களாகவும் டார்வின்களாகவும் வலம்வர வழிவகுக்கிறார்கள்..!
"நாளை என்ற நாளை, நாளும் குழந்தைகள் அனைவருக்கும் பரிசளித்து வரும் இந்த மகத்தான குழந்தைகள் நல மருத்துவர்களுக்கு நமது வணக்கங்களையும் வாழ்த்துகளையும் இன்றைய நாளில் கூறிச் செல்வோம்..!
(மகிமை தொடரும்)
- கட்டுரையாளர் : மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர்; தொடர்புக்கு: savidhasasi@gmail.com