

சென்ற வாரம் வாழ்க்கை வரலாறு எழுதுவது எப்படி என்று பார்த்தோம் அல்லவா? அதில் இன்னும் சில விஷயங்கள் உள்ளன. அவை என்னென்ன? கதை என்பது வேறு; கட்டுரை என்பது வேறு என்று உங்களுக்கு நன்கு தெரியும். கதையில் நம் கற்பனையைக் கலந்து எழுதலாம். ஆனால், கட்டுரையில் அப்படி எழுத முடியாது. வாழ்க்கை வரலாறு இந்த இரண்டு வகைகளில் எதைச் சேர்ந்தது என்று கண்டுபிடிக்க முடிகிறதா? உண்மையைச் சொன்னால் வாழ்க்கை கட்டுரையில் உள்ள அம்சங்கள் இடம்பெற வேண்டும். ஆனால், கதை தன்மையில் இருந்தால் படிக்க சுவாரஸ்யமாக இருக்கும். அது எப்படி இரண்டையும் கலந்து எழுதுவது சாத்தியமாகும் என்ற கேள்வி எழலாம். நிச்சயமாக முடியும் என்பதே பதில்.
கதையில் இடம்பெறும் கற்பனை என்பதுகூட உலகத்தில் எங்கேனும் ஓர் இடத்தில் யாரோ ஒருவருக்கு நிஜத்தில் நடைபெற்று இருக்கலாம். சில சாகசக் கதைகளில் இடம்பெறுவது போல பலரின் வாழ்க்கையில் நிஜமாகவே நடைபெற்று இருக்கலாம். வேலுநாச்சியார், ஜான்சிராணி போன்றவர்கள் போர் செய்திருக்கிறார்கள் என்று படித்திருப்போம். அப்போது அவர்கள் நிஜத்தில் சண்டை போட்டு செய்த சாகசத்தைத்தான் நாம்கதையில் கற்பனை என சாகசமாக எழுது கிறோம். அப்படியெனில், வேலுநாச்சியாரின் வாழ்க்கைவரலாற்றை நாம் எழுதினால் கற்பனை கதையின் சாகசம் அதில் இடம்பெறும் அல்லவா? அப்படி ஒவ்வொருவரின் வாழ்வில் வெவ்வேறு வகையான சுவாரஸ்ய நிகழ்வுகள் நடந்திருக்கும். அவற்றை சரியான விகிதத்தில் கலந்து எழுதினால் வாழ்க்கை வரலாறும் கற்பனை கதை தரும் சுவாரஸ்யத்தைத் தரும்.
உதாரணமாக, பகத்சிங் வாழ்க்கை வரலாற்றை எழுத நினைக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அவர் தன் நண்பர்களோடு நாடாளுமன்றத்தில் குண்டு வீசிய சம்பவம் தெரியும் அல்லவா? அதைக் கொஞ்சம் உங்கள்மனதில் ஓட்டிப் பாருங்கள். பரபரப்பான ஒருதிரைப்படக் காட்சி போல இருக்கிறது அல்லவா? அதை அப்படியே எழுதிவிட்டால் சிறப்பாக இருக்கும். வாழ்க்கை வரலாறு எழுதும்போது வாசிப்பு சுவைக்காக சம்பவங்களை முன்பின் அடுக்கலாமே தவிர, அவரின் வாழ்வில் நடைபெறாத சம்பவங்களையோ, சந்திக்காத நபரோடு உரையாடுவதாகவோ எழுதக்கூடாது. அப்படி எழுதினால் பொய்யான வரலாற்றை எழுதுகிறீர்கள் என்று அர்த்தம்.
அடுத்து, ’ஆண்டு’ அவர் பிறந்தது முதல் இறப்பு வரை நீங்கள் குறிப்பிடும் ’ஆண்டு’ இல்கூடுதல் கவனம் தேவை. ஒருவரின் வாழ்க்கை வரலாற்றை எழுதும்போது 1940-ம் ஆண்டு பிறந்தார் என்று எழுதுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அவர் பாரதியாரைச் சந்தித்தார் என்று எழுதினால், பெரும் பிழை. ஏனெனில் அவர் பிறப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே பாரதியார் இறந்துவிட்டார். நீங்கள் எழுதியதில் பிறந்த ஆண்டு தவறு அல்லது பாரதியாரைச் சந்தித்தார் என்பது தவறு என வாசகர்கள் குழம்புவார்கள். அதனால் கவனம் தேவை.
வாழ்க்கை வரலாற்றில் இடம்பெறும் நபர் களின் பெயர்கள், ஊர் பெயர்கள், உணவு பெயர்கள், வாகனங்களின் பெயர்கள், ரயில்நிலைய பெயர்கள், திரைப்படம், நூல்களின் பெயர்கள் என ஒவ்வொன்றிலும் கவனம் தேவை. ஏனெனில், ’ஜவஹர்லால் நேரு ஒரு நூலைப் படித்துகொண்டிருந்தார். அந்த நூலின் பெயர் அப்துல்கலாம் எழுதிய அக்னிச் சிறகுகள்’ என்று எழுதினால் எவ்வளவு அபத்தம். நேரு இறந்த பல ஆண்டுகள் கழித்தே அப்துல்கலாம் அந்த நூலை எழுதினார். அதனால் மிகக் கவனமாக இருக்க வேண்டும்.
நீங்கள் எழுதும் வாழ்க்கை வரலாற்றை படிப்பவர்கள் உண்மையாக நடந்தவை என்று நம்ப போகிறார்கள். அதை வைத்து ஆய்வுகள் செய்ய போகிறார்கள். அந்த ஆளுமை மீது மதிப்பு வைக்கப்போகிறார்கள். எனவே, மிக விழிப்போடு, அர்ப்பணிப்போடு, கவனத்தோடு எழுத வேண்டிய பொறுப்பு வாழ்க்கை வரலாற்றை எழுதும் எல்லோருக்கும் இருக்கிறது.
- கட்டுரையாளர் : எழுத்தாளர், ‘ஒற்றைச் சிறகு ஓவியா’, ‘வித்தைக்காரச் சிறுமி’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்; தொடர்புக்கு: vishnupuramsaravanan@gmail.com