

கொ.மா.கோ. இளங்கோ நூற்றுக்கும் மேலான கதைப்புத்தகங்களை குழந்தைகளுக்காக எழுதியுள்ளார். 'சூரியனை ஒளித்து வைத்த சிறுமி' புத்தகம் அறிவியல் செய்திகளையும், ஏராளமான கற்பனைச் சம்பவங்களையும் உள்ளடக்கிய புனைகதைகளை கொண்டது. அதீபா பெற்ற திகில் அனுபவம், ஆழ்கடலில் ஓர் அதிசயம், தேன்சிட்டு தேடிய பதில் போன்ற கதைகள் குழந்தைகளுக்கு அறிவியலில் விருப்பம் கொள்ள வைக்கும் கதைகளாக உள்ளன.
அறிவியல் தகவல்கள்: பாலைவனத்தில் மணற்குன்று இயற்கையாக உருவாகாது. கோடைகாலத்தில் வீசும் புழுதிப்புயல், ஓர் இடத்திலிருக்கும் மணற்குன்றைக் கடத்தி வேறொரு இடத்தில் குவித்துவிடும் என்பதையும், பாலைவனத்தில் மணற்பிரதேசத்தில் வேகமான காற்றுக்கு மணல் நகரும்போது புலி உறுமுவதைப் போல சத்தம்வருமென்பதையும், மணல் ஆறு பாலைவனத்தில் உருவாக வாய்ப்பில்லை, பாலைவனத்திலும் சில நேரங்களில் ஆலங்கட்டி மழை பெய்யும், மணற்குன்றுகளின் மேலே உள்ள மணலுடன் கலக்கும் ஆலங்கட்டி கலவை கீழே வழிந்து ஓடும். அது பார்க்க மணல் ஆறு போல இருக்கும். உண்மையில் மணல் ஆறு இல்லை என்ற தகவல்களை அதீபாக்கு கூறுவது போல வரும் கதையின் அறிவியல் தகவல்கள் புதிய செய்திகளாக ஆச்சரியப்பட வைக்கின்றன.
தேன்சிட்டு: தேன் குடிக்கச் செல்லும் தேன் சிட்டுவிடம், செடி கேட்கும் கேள்வி, பூக்கள் ஏன் பல வண்ணங்களில் உள்ளன? விடை கூறினால் மட்டுமே தேன்தருவேன் என்கிறது செடி. தேன்சிட்டு பசியுடன் இருந்தாலும் விடை தேடிச் செல்கிறது. தனக்கு உதவும்படி நண்பர்களை அழைக்கிறது. வண்ணத்துப்பூச்சி, கொக்கு, மாடு என அனைத்து நண்பர்களும் தேன்சிட்டுக்கு உதவ விரும்பு கின்றன. ஆனால் விடை தெரியாமல் விழிக்கின்றன. இறுதியில் மாடு நண்பன், தன் வளர்ப்புத்தந்தை வரதனிடம் உதவி கேட்கிறது. வரதன் தன் மகனின் பள்ளி ஆசிரியரிடம் விடையறிந்து வந்து, தேன்சிட்டுக்குக் கூறுகிறார். தேன்சிட்டின் விடா முயற்சியும், தேன்சிட்டுக்கு உதவ நினைக்கும் நண்பர்களின் அன்பும் குழந்தைகள் மனதில் விழுமியங்களாகப் பதியும்.
மின்மினி பூச்சி: பொன்னிக்கு உதவிய மின்மினி கதையில், காட்டில் வழிதவறிய மின்மினி ஒன்று, கொஞ்சம் ஓய்வெடுத்துக்கொள்ள, அப்பகுதியில் வாழும் தவளையிடம் அனுமதி கேட்கிறது. உன் விளக்கு வெளிச்சத்தால், பாம்புகள் எங்கள் இருப்பிடத்தை அடையாளம் கண்டுவிடும். வேண்டாம் வேண்டாம் போ போ என்கிறது தவளை. பறந்து வந்த மின்மினி தேனடையை பார்த்து, சிறிது நேரம் ஓய்வெடுக்க தேனீக்களிடம் அனுமதி கேட்கிறது. புதிதாக பிறந்த தேனீக்களுக்கு உறக்கம் வராது. இங்கிருந்து செல் என தேனீக்கள் விரட்டியடிக்கின்றன.
இறுதியில் பொன்னியின் வீடடை அடையும் மின்மினி, பொன்னி அக்காள் கவலையுடன் இருப்பதன் காரணத்தைக் கேட்கிறது. வீட்டு நாய்க்குட்டிக்கு உடல்நலமில்லை. மருத்துவமனை வாகனம்வந்திருக்கிறது, ஆனால் அவசரகால விளக்கு எரியவில்லை. கவலைக்கு காரணம் இதுதான் என்கிறாள் பொன்னி. மின்மினி தன் நண்பர்கள் கூட்டத்தை உடனே அழைத்து, மருத்துவமனை வாகனம் முன்பு செல்ல, அந்த வெளிச்சத்தில் நாய்க்குட்டி மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டது. அழகான கற்பனையுடனான, இந்தக் கதையில் மின்மினியின் உதவும் மனம் மனதில் நிற்கிறது.
யார் இசைத்த புல்லாங்குழல்: காற்று வீதி வழியே பயணிக்கிறது. பொம்மைகள் விற்கும் கடைக்குள்ளே செல்கிறது. கடை முழுவதும் சுற்றிப்பார்க்கும் காற்றுக்கு மூலையில் தனிமையிலிருக்கும் புல்லாங்குழலின் புலம்பல் கேட்கிறது. கடைக்காரர் தன்னை மூலையில் நிறுத்தியதால், குழந்தைகள் கண்களில் படாமலே இருக்கிறேன் என்கிறது புல்லாங்குழல். புல்லாங்குழலுக்கு உதவ நினைக்கிறது காற்று. புல்லாங்குழலின் துளைகள் வழியே சென்று திரும்பி அழகான இசையை உருவாக்குகிறது. இசையைக் கேட்ட குழந்தைகள் தங்களுக்கு புல்லாங்குழல்தான் வேண்டும் என்கிறார்கள்.
நிறைய புல்லாங் குழல்களை வரவழைத்து தருவதாக கடைக்காரர் கூறுகிறார். புல்லாங்குழல் மகிழ்ச்சியடை கிறது. இளங்காற்று நிம்மதியாக கடையைவிட்டு கிளம்புகிறது. கதையில் மனிதர்கள்தான் பேச வேண்டும் என்பதில்லை. கொ.மா.கோவின் கதையில் சுவரில் வரைந்து வைத்த மான் உயிர் பெற்று வருகிறது. ஓவியத்தில் உள்ள சூரியன் வெப்பத்தை தருகிறது. குழந்தைகளுக்கான மகிழ்ச் சியை, கற்பனையை, படைப்பாக்கத்தை மறைமுகமாக மனதில் பதியவைக்கும் அற்புதமான கதைகள் புத்தகத்தில் உள்ளன.
- கட்டுரையாளர்: குழந்தை நேய செயற்பாட்டாளர், ஆசிரியர், அரசுப்பள்ளி, திருப்புட்குழி, காஞ்சிபுரம் தொடர்புக்கு: udhayalakshmir@gmail.com