

அளவீடுகளில் கடந்த 2022-ம் ஆண்டு நான்கு புதிய வரவுகள் வந்துள்ளன. சுமார் 30 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த நான்கினை சேர்த்துள்ளனர். நாம் அளவீடுகளில் பின்பற்றுவது SI Units அனைத்துலக முறை அலகுகள். (International System of Units). உலகம் முழுக்க எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அலகு முறை. அறிவியலில், வணிகத்தில், கணிதத்தில், தினசரி வாழ்வில் என எல்லா இடத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அந்த நான்கு புதிய வரவுகள் ronna (ரொன்னா), quetta (குவெட்டா), ronto (ரொண்டொ) and quecto(குவெக்டோ).
இதென்ன புதிதாக இருக்கின்றதே என யோசிக்கின்றீர்களா? இவை எல்லாமே prefixகள். முன்னொட்டு பெயர்கள். நாம் ஏற்கனவே இதே போல பயன்படுத்துகின்றோம். வீட்டிலிருந்து பள்ளிக்கு எவ்வளவு தூரம் என்று கேட்டால் விடையை 3 கிலோமீட்டர் என்போம் அல்லவா? இதில் கிலோமீட்டர் என்பது தூரத்தின் அலகு. இதில் கிலோ-மீட்டர் என இருக்கின்றது அல்லவா? இதில் மீட்டர் அலகு, கிலோ – முன்னொட்டு (prefix). இதன் மதிப்பு – 1000 – 103
1 கிலோ கிராம் = 1 X 1000 கிராம் = 1000 கிராம்.
இப்போது அதே போலக் குறைவான மதிப்புகளை எப்படிச் சொல்வது? 0.000001 கிராம். இதை எப்படிச் சொல்லலாம்? 10-6
இதற்கு முன்னொட்டு மைக்ரோ (micro). 1 microgram.
1991 ஆம் ஆண்டில் சில முன்னொட்டுகளை SI Unitsல் சேர்த்தார்கள், அதற்குப் பின்னர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நான்கு முன்னொட்டுகளைச் சேர்த்துள்ளனர். அதற்கான மதிப்புகளும் முன்னொட்டு எழுத்துக்களும் இதோ:
இவ்வளவு பெரிய/சிறிய மதிப்பினை எங்கே பயன்படுத்துவோம் என்ற கேள்வி நமக்கு எழும்.
பயன்பாடு: பூமியின் நிறை – 6 ரோணா கிராம் – 6 Rgrams – 6 X 1027 Grams
இதைச் சொல்வது எளிதாக இருக்கின்றது அல்லவா? அதே போல ஜூப்பிட்டரின் நிறை - 2 குவெட்டாகிராம் = 2 Qgram = 2 X 10 30 gram
ஒரு எலக்ட்ரானின் நிறையை ரொண் டோகிராமில் குறிப்பிடலாம் = 1 rontogram = 1 X 10-27 grams.
குவெக்டோகிராம்: ரொண்டோவைவிட சிறியது குவெக்டோ, அது எங்கே பயன்படும். எங்கே பயன்படும் என்பதற்கு முன்னர் ரொண்டோகிராம் சிறியதா அல்லது குவெக்டோகிராம் சிறியதா?
10–27 பெரியதா? அல்லது 10–30 பெரியதா?
30 பெரியதா அல்லது 27 பெரியதா என்றால் 30 என்போம். அதே -30 பெரியதா -27 பெரியதா என்றால் -27 என்போம். ஆனால் அதே 10–27 பெரியதா? அல்லது 10–30 பெரியதா? என்றால்? 10–27 = 1 / (1027) = .0000000000000000000000001. அப்படியென்றால் 10–30 இன்னும் சிறியது. சரி, எங்கேனும் இது பயன்படுமா? மின்னஞ்சல் அல்லது அலைபேசியில் ஒரு கோப்பின் அளவு சில Kb எனக் குறிப்பிடப்பட்டு இருக்கும். 50 Kb என வைத்துக்கொள்வோம். 1000 byte = 1 Kb
8 bit = 1 byte.
இந்த bit இருக்கின்றது அல்லவா இது 0 அல்லது 1ஐ குறிக்கும். இதன் நிறை தோராயமாக 1 குவெக்டோகிராம் ( 1 quectogram).
- கட்டுரையாளர்: சிறார் எழுத்தாளர், ‘மலைப்பூ’, ‘1650 முன்ன ஒரு காலத்திலே’ உள்ளிட்டவை இவரது நூல்கள். தொடர்பு: umanaths@gmail.com