

குழந்தைகள் விளையாட்டாய் கற்கவே விரும்புகின்றனர். விளையாட்டு என்பது உடலுக்கான பயிற்சியாக மட்டுமல்லாமல், ஆக்கப்பூர்வமாக சிந்திக்கவும், குழந்தைகளின் கற்பனையைப் பயன்படுத்தவும் ஊக்குவிக்க வேண்டும். அப்படிப்பட்ட விளையாட்டு, குழந்தைகளின் படைப்பாற்றல் திறன் வெளிப்படுத்தவும், கலைத்திறன்களை வளர்த்தெடுக்கவும் உதவும். அது எப்படி சாத்தியம்? டாங்கிராம் (tangram) அதனைச் சாத்தியமாக்கும். டாங்கிராம் என்பதுஒரு பாரம்பரிய சீன புதிர் விளையாட்டாகும். இது ஏழு தட்டையான வடிவங்களைக் கொண்டுள்ளது. அவை டான்ஸ் என்று அழைக்கப்படுகின்றன. அவற்றைப் பயன்படுத்தி பல்வேறு வடிவங்கள் மற்றும் படங்களை உருவாக்க முடியும். இதை கணிதப் பாடத்தில் வடிவியல் பகுதிக்கு பயன்படுத்தலாம்.
வடிவங்களை உருவாக்குதல் என்பது இடம் சார்ந்த பகுத்தறிவு, காட்சிப்படுத்துதல், சிக்கலைத் தீர்க்கும் திறன்களை உள்ளடக்கியது. ஏழு டான்களைப் பயன்படுத்தி குழந்தைகள் பல்வேறு வடிவங்களை உருவாக்கச் செய்யலாம். அவர்கள் ஒவ்வொரு டான் வடிவத்தையும் மற்றொரு டான் வடிவத்துடன் பொருத்தும்போது இடம்சார்ந்த விழிப்புணர்வு பெறுகின்றனர். கொக்கு, மனிதன், குதிரை, பசு, தவளை, வீடு போன்ற பல்வேறு உருவங்களை உருவாக்கச் செய்து குழந்தைகள் மகிழ்ச்சியாக கற்க உதவலாம். அப்படி உருவாக்கும் போது, குழந்தைகள் அடிப்படை வடிவியல் கருத்துகளைப் புரிந்து கொள்கின்றனர். குழந்தைகள் பல்வேறு உருவங்களை உருவாக்குவதன் வழியே வடிவங்களைக் கையாளுதல் மற்றும் ஆராயும் பண்பை பெறுகின்றனர்.
அதனால், பல்வேறு வகையான கோணங்கள், வடிவங்கள், சமச்சீர் உருமாற்றங்களை நன்கு அறிந்து கொள்கின்றனர். அதனால், வடிவியல் சார்ந்த அவர்களின் எதிர்கால கற்றலுக்கு உறுதியான அடிதளத்தை டான்கிராம் அமைத்து தருகிறது. டாங்கிராம் புதிர்களைத் தனித்தனி யாகவோ அல்லது குழுக்களாகவோ தீர்க்கலாம். குழுவாகப் புதிர்களைத் தீர்க்கும் போது, குழந்தைகளிடையே ஒத்துழைப்பு மற்றும் தகவல்தொடர்பு ஊக்குவிக்கப்படுகிறது. சிக்கலான புதிர்களைத் தீர்க்கவும், வெவ்வேறு உத்திகளைப் பற்றி விவாதிக்கவும், தங்கள் கண்டுபிடிப்புகளைப் பகிர்ந்து கொள்ளவும் குழுப்பணி உதவுகிறது. கூட்டுறவு கற்றலை வளர்க்கவும், குழந்தைகள் ஒன்றிணைந்து செயல் படவும் டாங்கிராம் உதவுகிறது.
தமிழ், ஆங்கிலம், வரலாறு போன்ற பல்வேறு பாடங்களில் டாங்கிராமை பயன்படுத்த முடியும். டாங்கிராம் உருவங்களைப் பயன்படுத்தி மொழிப்பாடங்களில் கதைகள் கூறச் செய்யலாம். கதைகள் கூறும்போது கதாபாத்திரங்களுக்கு ஏற்ப உருவங்களை உருவாக்கிக் கொண்டே கதைகள் கூறுவதன் மூலம் கேட்பவரை வியப்படையச் செய்யலாம். பறவைகள் உருவத்தை உருவாக் கச் செய்து, பறவை குறித்து பேசச் செய்யலாம். பறவை மற்றும் விமானம் உருவங்கள் முறையே இருவேறு குழுக்களை உருவாக்கச் செய்து, இரண்டையும் ஒப்பிட்டு பறப்பதற்கான காரணங்களை விவாதிக்கச் செய்யலாம். பறவை உருவத்தை மட்டும் செய்து, பறவை பறப்பதற்கானக் காரணத்தைக் கூறச் செய்யலாம். இப்படி டாங்கிராமை அறிவியல் பாடத்திற்கும் பயன்படுத்தலாம்.
குழுச்செயல்பாட்டில் உருவாக்கிய உருவங்களைப் பயன்படுத்தி தமிழில்கதைகள் எழுதவும், கூறவும் செய்யலாம். விலங்குகள், பறவைகள், மரங்கள் போன்ற உருவங்களை குழந்தைகள் செய்து காண்பிக்கும் போது, அவர்கள் செய்த உருவங்கள் குறித்து ஆங்கிலத்தில் விவரிக்கச் செய்யலாம். உ.ம். It is a dog. It has four legs. It has a tail. It has two eyes. It is a very clever animal. It barks at the strangers. It runs fast. இப்படி பல்வேறு பாடங்களுக்கு உதவினாலும், டாங்கிராம் புதிர்களைத் திறம்பட தீர்க்க பொறுமையும், விடாமுயற்சியும் அவசியம். குழந்தைகள்விடாமுயற்சியின் முக்கியத்துவத்தைக் கற்றுக் கொள்கின்றனர். குழந்தைகள் சவால்களை எதிர்கொள்கின்றனர். சரியான தீர்வைக் கண்டறிய வெவ்வேறு அணுகுமுறைகளை முயற்சிக்கிறார்கள். கற்றலை சுவாரஸ்யமாகவும், ஊடாடக் கூடியதாக மாற்றவும் டாங்கிராமைப் பயன் படுத்தலாம்.
- எழுத்தாளர், தலைமையாசிரியர், டாக்டர் டி. திருஞானம் தொடக்கப் பள்ளி, மதுரை.