முத்துக்கள் 10: நவீன விண் தொலைநோக்கி ‘ஹபிள்’ என அழைக்கப்படுவது இவரால்

முத்துக்கள் 10: நவீன விண் தொலைநோக்கி ‘ஹபிள்’ என அழைக்கப்படுவது இவரால்
Updated on
2 min read

உலகப் புகழ்பெற்ற அமெரிக்க வானியலாளர் எட்வின் ஹபிள் (Edwin Hubble) பிறந்த தினம் இன்று (நவம்பர் 20). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

# அமெரிக்காவின் மிசோரி மாநிலம் மார்ஷ்ஃபீல்டு நகரில் (1889) பிறந்தவர். தந்தை காப்பீடு நிறுவன அலுவலர். 1898-ல் இலினாய்ஸில் குடியேறினர். இளமைப் பருவத்தில் பல விளையாட்டுகளிலும் சிறந்து விளங்கினார்.

# சிகாகோ பல்கலைக்கழகத்தில் கணிதம், வானியல் பயின்று அறிவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். தந்தையின் கடைசி ஆசையை நிறைவேற்றுவதற்காக ஆக்ஸ்போர்டில் சட்டம் பயின்றார். பின்னர், இலக்கியம், ஸ்பானிய மொழி கற்று முதுகலைப் பட்டம் பெற்றார். தந்தையின் மறைவுக்குப் பிறகு, குடும்பப் பொறுப்பை ஏற்றார்.

# அமெரிக்கா திரும்பியதும், இண்டியானாவில் ஒரு பள்ளியில் ஸ்பானிய மொழி, இயற்பியல், கணித ஆசிரியராகவும், கூடைப்பந்து பயிற்சியாளராகவும் பணிபுரிந்தார். சிறிது காலம் வழக்கறிஞர் தொழில் செய்தார். முதல் உலகப்போரின்போது ராணுவத்தில் சேர்ந்து, மேஜராக உயர்ந்தார். போருக்குப் பிறகு, ஓராண்டு காலம் கேம்பிரிட்ஜில் வானியல் ஆய்வுகள் மேற்கொண்டார்.

# சிகாகோ பல்கலைக்கழகத்தில் இருந்த யர்கெஸ் வானியல் ஆய்வு நிலையத்தில் ஆய்வுகளை மேற்கொண்டு, முனைவர் பட்டம் பெற்றார். கலிபோர்னியாவில் கார்னகி நிறுவனத்தின் மவுன்ட் வில்சன் ஆய்வுக்கூடத்தில் பணிபுரியும் வாய்ப்பு பெற்றார். இறுதிவரை அங்கு பணியாற்றினார்.

# அப்போது புதிதாக மேம்படுத்தப்பட்டிருந்த உலகின் மிகப் பெரிய ஹூக்கர் தொலைநோக்கி உதவியுடன் வான்வெளியை ஆராய்ந்தார். வானின் அனைத்து திசைகளிலும், தொலைவில் உள்ள அண்டங்கள் ஒன்றை விட்டு ஒன்று விலகிச் செல்கின்றன என்றார்.

# பிரபஞ்சம் முழுமையும் விரிவடைகிறது என்றார். கடந்த காலத்தில் இவை மிக அருகில், ஒரு தொகுதியாக சேர்ந்து இருந்தன என்பதையும் நிரூபித்தார். கேலக்ஸிகளின் பின்வாங்கும் அல்லது பின்னடையும் திசை வேகம், அவை பூமியில் இருந்து உள்ள தொலைவுக்கு நேர்த்தகவில் இருக்கும் என்றார். இது ‘ஹபிள் விதி’ எனப்படுகிறது.

# பால்வெளி மண்டலத்தில் விண்வெளிப்படலம் (நெபுலா) என வகைப்படுத்தப்பட்டுள்ள பல பொருட்கள் உண்மையில் கேலக்ஸிகள் என்பதை சான்றுகளுடன் நிரூபித்தார். பால்வெளிக்கு அப்பாற்பட்ட வானியல் துறை (Extragalactic Astronomy) தோன்ற முக்கியப் பங்களிப்பை வழங்கினார்.

# இவரைப் போற்றும் வகையில், நாசா மற்றும் ஐரோப்பிய விண் வெளி அமைப்புகள் இணைந்து, நவீன விண்வெளித் தொலை நோக்கிக்கு ‘ஹபிள்’ என இவரது பெயரைச் சூட்டின. இவரது கண்டுபிடிப்புகள், பிரபஞ்சம் குறித்து அதுவரை நிலவிய அறிவியல் கண்ணோட்டத்தின் அடிப்படையையே மாற்றின. நெபுலா குறித்து தான் கண்டறிந்தவற்றை கட்டுரைகளாக எழுதி வெளியிட்டார்.

# தனது வானியல் பங்களிப்புகளால் உலகம் முழுவதும் பிரபல மானார். பல விருதுகள், பரிசுகளைப் பெற்றார். வானியல் தனி அறிவியல் பிரிவாக இல்லாமல் இயற்பியலின் ஓர் அங்கமாக கருதப்பட வேண்டும் என்பதற்காக தீவிர முயற்சிகளை மேற் கொண்டார். மற்ற துறைகள்போல வானியல் ஆராய்ச்சியாளர்களுக்கும் நோபல் பரிசு வழங்கவேண்டும் என்று விரும்பினார்.

# இறுதிவரை வானியல் ஆய்வுக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட எட்வின் ஹபிள் 64-வது வயதில் (1953) மறைந்தார். இவரது மறைவுக்குப் பிறகு, வானியல் சாதனையாளர்களுக்கும் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்படும் என நோபல் கமிட்டி அறிவித்தது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in