

இன்றைக்கு சுவாரஸ்யமான இடத்தைப் பற்றிப் பார்க்கப் போகிறோம். எத்தனை பேரு, சுற்றுலா தொடர்பான செய்திகளைப் படிக்கிறீங்க?
‘நான் படிப்பேன்…’ ‘நான்..’ ‘நான்…’ ‘நான்...’
சரி. அப்போ இந்தக் கேள்விக்கு உங்களால பதில் சொல்ல முடியும். வெளி நாட்டுல இருக்குற ஒரு கடற்கரை, நிறைய பிரபலங்கள் குறிப்பா சினிமா பிரபலங்கள் விடுமுறைக்கு இங்கு போய் இருக்கிறதா போட்டோ எடுத்துப் போடுவாங்க… அது எந்த நாடு? என்ன கடற்கரை?
‘ஆஸ்திரேலியா..?’
இல்லை. அவ்வளவு தூரம் போக வேண்டாம். இது கொஞ்சம் பக்கத்திலே இருக்கு. ‘கெஸ்’ பண்ணிப் பாருங்களேன்.
‘இலங்கை?’ ‘இல்லை. சரி, நானே சொல்றேன். மாலத்தீவு. அடிக்கடி கேள்விப் படறோம் இல்லையா. அப்படின்னா, அதைப் பத்தி நாம தெரிஞ்சுக்கணுமா இல்லையா?
தெற்கு ஆசியாவில் உள்ள முக்கியமான நாடு மாலத்தீவு. இந்தியாவுக்குத் தென் மேற்கே உள்ள தீவு நாடு. இந்தியாவிலிருந்து சுமார் 2500 கி.மீ. தூரம். விமானத்தில் நான்கு மணி நேரத்தில் சென்றடைய முடியும். மாலத்தீவின் தலை நகரம் மாலே. மூன்றாம் நூற்றாண்டில் தீவா மஹல் என்று அறியப்பட்டது. 110-1166இல் திவா குதா, திவா குன்பர். மாலத்தீவு என்பது சமஸ்கிருதத்தில் மாலா – த்வீபா (தீவு) எனப்படுகிறது. இதன் பொருள் தீவுகளின் மாலை.
மாலத்தீவின் மக்கள் தொகை சுமார் ஐந்து லட்சம். ஆசியாவில் மிகக் குறைந்த மக்கள் தொகை கொண்ட இரண்டாவது நாடு. இத்தீவின் ஆதிக் குடிமக்கள் தெய்யிஸ் ஆவர். கடல் மட்டத்திலிருந்து சராசரி உயரம் 1.5 மீட்டர் மட்டுமே இருக்கிறது. அதாவது 4 அடி 11அங்குலம்; நாட்டின் ‘உயரமான’ பகுதி – 7.10 அடி மட்டுமே. அதனால் உலகத்திலேயே மிகவும் ‘தாழ்வான’ நாடு இது. ஞாபகம் வைத்துக்கொள்ளுவோம் நிலவியல் படி, கடல் மட்டத்தில் இருந்து எத்தனை அடி உயரம் என்கிற கணக்கின்படி மட்டுமே இது தாழ்வான நாடு. மற்றபடி, உலகின் மிகச் சிறந்த மிக முக்கியமான சுற்றுலா மையம் இந்த நாட்டின் கடற்கரைதான். இது, ‘மன்னரின் தீவு’ என்றும் அழைக்கப்படுகிறது. காரணம், பழங்கால மன்னர்கள் இதன் மத்திய பகுதியை ஆண்டு வந்தனர்.
(மாலத்தீவு பயணம் தொடரும்)
- கட்டுரையாளர், கல்வி, வேலைவாய்ப்பு போட்டித்தேர்வுக்கான வழிகாட்டி; தொடர்புக்கு: bbhaaskaran@gmail.com