

அழகுமீனா தன் அப்பாவின் பைக்கை ஓட்டிப்பழக விரும்பினாள். அப்பாவும் அதற்கு சம்மதித்தார். அவர் கிளட்சு, கியர், பிரேக், ஆக்ஸிலேட்டர், ஹாரன் ஆகியவை எவ்வாறு இயங்குகின்றன, அவற்றை எப்படி இயக்க வேண்டும் என்பதனை அழகுமீனாவுக்கு விளக்கினார். பின்னர் அழகுமீனாவிடம் பைக்கை ஓட்டக் கொடுத்துவிட்டு, வண்டியின் பின்னிருக்கையில் தானும் ஏறி அமர்ந்துகொண்டார்.
அப்பா சொல்லச் சொல்ல அழகுமீனா வண்டியை ஓட்டத் தொடங்கினாள். மனத்திற்குள் ‘நம்மாளும் பைக்கை ஓட்ட முடிகிறதே’ என்ற மகிழ்ச்சியும் கீழே விழுந்துவிடாமல் ஓட்ட வேண்டும் என்ற எச்சரிக்கை உணர்வும் மாறிமாறித் தோன்றின. சிறிது தொலைவு அழகுமீனா தடுமாறாமல் வண்டியை ஓட்டவும், ‘நீ நன்றாக ஓட்டுகிறாய்’ என்று பாராட்டினார் அப்பா. அதனால் உற்சாகமடைந்த அழகுமீனா ஆக்ஸிடேட்டரை மேலும் திருகினார். வண்டி வேகமெடுத்தது. ‘வேகத்தைக் குறை’ என்றார்அப்பா. அழகுமீனா வேகத்தைக் குறைப்பதற்குப் பதிலாக, அதனைக் கூட்டினார்.
‘குறை, குறை’ என்று அப்பா கத்தினார். அழகுமீனாவுக்கு சில நொடிகளுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. ஆக்ஸிலேட்டரை முன்னும் பின்னுமாக மாறிமாறித் திருகினார். வண்டி உறுமியது என்ற நிகழ்வைக் கூறி அன்றைய வகுப்பைத் தொடங்கினார் ஆசிரியர் எழில். பின்னர், ஏன் அழகுமீனா அவ்வாறு செய்தார்? என்ற கேள்வியை மாணவர்களிடம் எழுப்பினார்.
ஏன் குழம்பினாள்? - அச்சத்தினால் என்றான் அழகன். இல்லை. குழப்பத்தினால் என்றாள் மதி. ஏன் குழம்பினாள்? என்று வினவினார் எழில். அப்பா கொடுத்த நெருக்கடியால் என்றான் காதர். அந்த நெருக்கடியைப் பொறுத்துக்கொள்ளும் மனம் அவளுக்கு இல்லாததால் என்றாள் இளவேனில். ஏற்படும் நெருக்கடிக்கு ஈடுகொடுக்கும் மனவலிமை இல்லாத பொழுது மனத்தில் ஓர் அழுத்தம் ஏற்படும். அதுவே மனஅழுத்தம் எனப்படுகிறது என்று அவர்கள் அனைவரும் கூறியனவற்றையும் தொகுத்து மனஅழுத்தத்திற்கு வரைவிலக்கணம் கூறினார் எழில்.
நான் பேச்சுப்போட்டியில் பங்கேற்கும் ஒவ்வொரு முறையும் தடுமாறாமல், பிழையில்லாமல், நான் முன்னர் பேசியதைவிட இம்முறை சிறப்பாகப் பேசவேண்டும் என நினைப்பேன். அப்பொழுது மனம் பாரமாக இருப்பதைப்போல உணர்வேன். அதுதான் மனஅழுத்தமா என்று வினவினாள் பாத்திமா. ஆம் என்றார் எழில்.
இரண்டு வகை மனவழுத்தம்: ஏன் மனவழுத்தம் ஏற்படுகிறது? என்று வினவினான் தேவநேயன். ஒரு சூழலை உணர்ச்சி வசப்பட்டு எதிர்கொள்ளும் பொழுது மனவழுத்தம் ஏற்படுகிறது என்றார் எழில். மேலும், அழகுமீனாவுக்கு இக்கட்டான சூழலால் மனஅழுத்தம் ஏற்பட்டது. அது எதிர்மறை மனஅழுத்தம். பாத்திமாவுக்கு சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்னும் சூழலால் மனஅழுத்தம் ஏற்படுகிறது. அது உடன்பாட்டு மனஅழுத்தம் என்று விளக்கினார் எழில். ஏன் இதனை உடன்பாட்டு மனஅழுத்தம் என்கிறோம்? என்று வினவினாள் நன்மொழி. சிக்கலை எதிர்கொள்ள உதவுவதாலும் தொடங்கிய செயலைத் தொடரத் தூண்டுகோலாக இருப்பதாலும் அச்செயலைச் செய்துமுடிக்கத் தேவையான வலிமையைத் தருவதாலும் அவ்வாறு அழைக்கிறோம் என்றார் எழில்.
எப்பொழுதெல்லாம் ஏற்படுகிறது இது? என்று வினவினான் சாமுவேல். ஒரு செயலைப் பொறுப்போடு செய்ய முனையும் பொழுது என்றான் அருளினியன். பிறர் நம்மை ஊக்குவிக்கும் பொழுதும் ஏற்படுகிறது என்றாள் கயல்விழி. அருமை என்று கூறி, கைதட்டி அனைவரையும் பாராட்டினார் எழில். மாணவர்கள் அனைவரும் அவரோடு இணைத்து கைதட்டி தம்மைத்தாமே பாராட்டி மகிழ்ந்தனர். இத்த கைதட்டல், இன்னும் சிறப்பாகக் கலந்துரையாட வேண்டும் என்னும்உடன்பாட்டு மனஅழுத்தத்தை ஏற்படுத்துகிறது என்றான் அருளினியன். அவனுக்கு ஒரு ‘ஹை-பை’ காட்டினார் எழில்.
(தொடரும்)
- கட்டுரையாளர்: வாழ்க்கைத் திறன் கல்வித் திட்ட வடிவமைப்பாளர் மற்றும் பயிற்றுநர்; தொடர்புக்கு: ariaravelan@gmail.com