

செப்படி வித்தைக்காரனான தத்தன் தனது கதையை சொல்லி முடித்ததும் அவன் மேல் குணபாலனுக்கு இரக்கம் பிறந்தது. அவன் தத்தனை நோக்கி, தத்தா, உனக்கு இப்படி நேர்ந்துவிட்டதே என்று நினைத்து வருந்தாதே. நமக்கு வரும் இன்பங்களைப் போலவே துன்பங்களையும், ‘எல்லாம் நன்மைக்கே’ என்று நினைத்துக் கடந்து சென்றுவிட வேண்டும். நமக்கு நடந்த துயரமான சம்பவத்தையே நினைத்துக்கொண்டு கவலையோடு வாழக் கூடாது. அப்படிச் செய்தால், நம்மால் ஓர் அளவுக்கு மேல் முன்னேறிச் செல்ல முடியாது.
மேலும் நாம் நமது செயல்களையும் சிந்தனையையும் வேறு திசையில் செலுத்தி விட்டால் நம்மை பாதித்த துயரங்களில் இருந்து மீண்டு வரலாம். நமக்குத் தேவையில்லாமல் ஏற்படும் மன அழுத்தத்தையும் தவிர்த்துவிடலாம் என்று பலவாறாக தத்தனுக்கு அறிவுரைகளை எடுத்துக் கூறினான் குணபாலன். அதைக் கேட்ட தத்தனும், அண்ணா, தாங்கள் யார் என்று கூட எனக்குத் தெரியாது. ஆனால், எங்கிருந்தோ வந்து எனக்கு இவ்வளவு ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் வழங்கி உள்ளீர்கள். இதற்கு நான் என்ன கைமாறு செய்யப் போகிறேன் என்று எனக்கு தெரியவில்லை. மிகவும் நன்றி என்றான்.
அதற்கு குணபாலன், உன்னால் எனக்கு ஒரு சிறு உதவி ஆக வேண்டி இருக்கிறது. அதை செய்வாயா என்று கேட்கத்தான் உன்னைப் பின்தொடர்ந்து வந்தேன் என்றான். என்னால் ஆகக் கூடிய உதவியா, அது என்ன? என்று கேட்டான் தத்தன். நான் சில கழுகுக் குஞ்சுகளைக் காப்பாற்றி வளர்த்து வருகிறேன். இப்போது எனக்கு சில வேலைகள் இருப்பதால் அவற்றை பராமரிக்க என்னால் இயலவில்லை. எனவே, நான் வரும்வரை அந்த கழுகுக் குஞ்சுகளுக்கு உணவளித்து, பராமரித்து வர ஒரு ஆள் வேண்டும். அதற்கு நீ சரியாக இருப்பாய் என்று நினைக்கிறேன் என்றான். அதைக் கேட்ட தத்தனும், அப்படியா, மிகவும் மகிழ்ச்சி! எப்போது வர வேண்டும்? என்றான்.
முடிந்தால், இப்போதே என்னுடன் கிளம்பி வா போகலாம் என்ற குணபாலன் அவனைக் கழுகுக் குஞ்சுகளை வளர்த்து வரும் ஏரிக்கரைக்கு அழைத்துச் சென்றான். அங்கு தான் வளர்த்து வரும் கழுகுக் குஞ்சுகளை தத்தனுக்குக் காட்டினான். மேலும் அவற்றுக்கு எவ்வாறு இரையைப் பிடிப்பது என்று தூண்டிலைப் போட்டு செய்து காட்டினான். அட, இவ்வளவுதானா? இந்த வேலையை நான் செய்து வருகிறேன். தாங்கள் போய் வாருங்கள் என்றான். என்னை யாரென்றும் கேட்கவில்லை. எங்கே போகிறேன் என்றும் கேட்கவில்லையே? என்று குணபாலனை கூறியதும், ஒருவரது முகத்தைப் பார்த்தாலே அவர் நல்லவரா, கெட்டவரா என்று எனக்குத் தெரிந்துவிடும். உமது முகத்தைப் பார்த்தால், நீங்கள் எந்தத் தவறும் செய்திருக்க போவதில்லை எனத் தோன்றுகிறது.
உங்கள் மீது கலங்கம் இருக்க வாய்ப்பில்லை எனவே நீங்கள் உங்களதுகடமையைச் செய்துவிட்டு வாருங்கள். அதுவரை இந்த கழுகுக் குஞ்சுகளை வளர்த்து பராமரிப்பது எனது கடமை என்றான் தத்தன். அவனுக்கு தேவையான காசுகளைக் கொடுத்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டான் குணபாலன். முதலில் தனது சொந்த ஊருக்குச் சென்று தனது தாய், தந்தை, தங்கையைப் பார்த்து வர மிகவும் ஆவலாக இருந்தான். அதைச் சொல்லிவிட்டு வரலாம் என்று மலையடிவாரத்தில் உள்ள மக்கள் புரட்சிப்படை கூட்டத்தாரின் குடிசைப் பகுதிக்கு சென்றான். அங்கிருந்த பெரியவரிடம் அவன் தனது விருப்பத்தை சொல்ல எத்தனித்தான். ஆனால், அவன் நினைத்துச் சென்றது வேறு; அங்கு நடந்தது வேறாக இருந்தது.
குணபாலன் அங்கு சென்றதும் அவனைக் கண்ட அனைவரும், குணபாலா வா, வா, உன்னைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருந்தோம். இப்போதே நீ அரண்மனைக்குப் புறப்பட்டுச் செல்ல வேண்டும் என்றார்கள். அதனைக் கேட்ட குணபலன் திகைத்துப் போனான். என்ன, இப்போதேவா? என்று கேட்டவனை, ஆமாம், இப்போதே நாட்கள் நிறைய கடந்துவிட்டது. இனிமேலும் நம்மால் பொறுமை காக்க முடியாது. மன்னனிடம் சென்று நமது புரட்சிப் படை இன்னும் நீருபூத்த நெருப்பாகவே உள்ளது என்பதை மன்னனுக்கு உரைக்கும்படி எடுத்துச் சொல்லிவிட்டு வா.
மேலும், யாரோ ஒரு கோமாளியைப் பிடித்து வைத்துக்கொண்டு, நமது புரட்சிப் படைத் தலைவரைப் பிடித்து விட்டதாக எக்காளமிட்டுக் கொக்கரிக்க வேண்டாம் என்று திருச்சேந்தியிடமும் எடுத்துச் சொல்லிவிட்டு வா.
இதுவே எங்களது ஒட்டுமொத்த இயக்கத்தினரின் வேண்டுகோள் என்றார் பெரியவர். குணபாலன் தயங்குவதை பார்த்த பெரியவர், சரி நீ எதற்கும் தயங்காதே, இங்கே வா என்று சொல்லி, ஒரு முகமூடியை எடுத்து குணபாலனிடம் கொடுத்தார். இதை அரண்மனையை நெருங்கியதும் உனது முகத்தில் அணிந்துக்கொள். அதன் பிறகு நீ மன்னனிடமும் மற்றவரிடம் பேசிவிட்டுத் திரும்பி வா. விரைந்து செல், வெற்றி நமதே என்று சொல்லி அனுப்பினார். குணபாலனும் அந்த முகமூடியை எடுத்து இடுப்பில் சொருகிக்கொண்டு குதிரையில் ஏறி அரண்மனை நோக்கி விரைந்தான்.
- தொடரும்.