

விமானப் பணிப்பெண் வேலைக்குப் பயிற்சி பெற்றவர் ஒருவர் தற்காலிகமாக ஒரு தனியார் பள்ளியில் அரும்பு வகுப்பாசிரியராக வேலைக்குச் சேர்ந்தார். அவர் ஆசிரியப் பயிற்சி பெற்றவர் அல்ல. பாடப்பொருளின் ஆழங்களை அறிந்தவர் அல்ல. இருந்தாலும் அவருடைய வகுப்பைக் குழந்தைகள் பெரிதும் விரும்பினர். அவருடைய வகுப்புக்கும் பிற ஆசிரியர்களுடைய வகுப்புக்கும் பல வேறுபாடுகள் இருந்தன. பயணிகளின் வசதியான, மகிழ்ச்சியான பயணத்தை உறுதி செய்வதுதானே பணிப்பெண்களின் தலையாய நோக்கம். கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருவது ஒரு பக்கம் எனில் பயணிகளின் உடல்மொழியைப் புரிந்துகொண்டு வலிந்து சென்று என்ன வேண்டும் என்று கேட்கவும் அவர்களுக்குப் பயிற்சியளிக்கப்படுகிறது.
விமானப் பணிப்பெண் பயிற்சி: ஒரு பயணியின் கை உயர்ந்தாலோ, தலை திரும்பினாலோ அந்த இடத்திற்கு அவர் வந்திருப்பார். சிரித்துக்கொண்டு பணிவிடை செய்வார். எத்தனை முறை இப்படி நடந்தாலும் சலிப்பின்றித் தம் சேவையைத் தொடர்வார். வகுப்பிலும் அப்படித்தானே. பல சூழல்களிலிருந்து குழந்தைகள் வருகிறார்கள். பலவற்றை யோசித்தபடி இருக்கிறார்கள். அவர்களுடைய எண்ணங்களை முழுமையாக வெளிப்படுத்துவதற்கான மொழி அவர்களிடம் இல்லை. இங்கு விமானப் பணிப்பெண் வேலைக்குப் பயிற்சிபெற்ற ஆசிரியை எப்போதும் குழந்தைகளைக் கவனிக்கிறார். கண்ணசைந்தால், முகபாவம் மாறினால், தலையைத் திருப்பிப் பார்த்தால் உடனே கற்பிப்பதை நிறுத்திவிட்டு அக்கறையோடு அக்குழந்தைகளின் அருகே சென்று அன்போடு விசாரிக்கிறார். அவர்கள் தம் தேவைகளை நிறைவேற்றுகிறார்.
மௌன தாக்கம்: குழந்தைகள் ஆசிரியரைத் தங்களுக்கு மிகவும் நெருங்கியவராகக் கருதுகின்றனர். எதைப் பற்றி வேண்டுமானாலும் அவரிடம் பேசலாம் என்றஎண்ணம் ஏற்படுகிறது. அதனாலேயே அனைவருக்கும் அவரைப் பிடித்துப்போகிறது. ஒருவரை நமக்குப் பிடித்துவிட்டால் அவருடைய செயல்களை நாம் கூர்ந்து கவனிப்போம். பின்பற்றுவோம். அதனாலேயே ஆசிரியர் எழுதுவதுபோல், வாசிப்பதுபோல் தங்களை அறியாமலே குழந்தைகள் செய்ய முன்வருகின்றனர்.
ஆசிரியர் ‘க்’ என்று எழுத ‘க’ எழுதி மேல் ஒரு சிறு வட்டம் வரைந்தால் குழந்தைகளும் அதுபோல் எழுதுவார்கள். அவர் உணர்ச்சியோடு வாசித்தால் குழந்தைகளும் உணர்ச்சி ததும்ப வாசிப்பார்கள். அவருடைய பேச்சின் சாயல் குழந்தைகளின் பேச்சிலும் எதிரொலிப்பதைக் காணலாம். இதுவே மௌன தாக்கம். இது தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும். குழந்தைகளுக்கு நெருக்கமானவர்கள், அவர்களின் இதயத்தில் இடம்பிடித்தவர்களால் மட்டும்தான் இந்த மௌன தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.
பார்த்துக் கற்க வந்தவர்கள்: அரும்பு வகுப்புகளில் குழந்தைகள் ஆசிரியர் சொல்வதைக் கேட்டுக் கற்க வந்தவர்கள் அல்லர். மாறாக அவர்தம் செயல்களைப் பார்த்துக் கற்க வந்தவர்கள் என்ற கூற்று எத்தனை சரி. அதனாலேயே ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் ஒவ்வொரு நிமிடமும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குழந்தைகள் புத்தகம் வாசிக்க வேண்டும் என்று விரும்பும் ஓர் ஆசிரியர் அவர் குழந்தைகள் முன் புத்தகம் வாசிக்க வேண்டும். வகுப்பறையைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று கூறும் ஆசிரியர் காகிதத்தைக் கிழித்து ஜன்னல் வழியாக வீசியெறியாதவராக இருக்க வேண்டும்.
உங்கள் கையெழுத்து அழகாக இருக்க வேண்டும் என்று சொல்பவருடைய கையெழுத்து அழகாக இருக்கிறது என்பதை உறுதிப்படுத்த வேண்டும். தாமதமாக வரக்கூடாது என்பவர் ஒருபோதும் தாமதமாக வரக்கூடாது. இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். ஆசிரியர் முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்று சொல்வதில் மறைந்திருக்கும் பொருள் இந்த மௌனத்தாக்கமே. இந்தக் கட்டுரையில் ஆசிரியர் என்பதற்குப் பதில் பெற்றோர் என்றோ குழந்தைகளுடன் உறவாடுபவர் என்றோமாற்றி வாசிக்கலாம். அப்படி மாற்றினாலும் அனைத்துக் கருத்துகளும் பொருந்துவதைப் பார்க்கலாம். ஆசிரியரே (பெற்றோரே), குழந்தைகள் படிக்கும் முதல் புத்தகம் என்பதை ஒவ்வொரு நிமிடமும் நம் நினைவிலிருக்க வேண்டும்.
- கட்டுரையாளர்: மூத்த கல்வியாளர், கல்வி இயக்குநர், ‘Qrius Learning Initiatives’, கோவை. தொடர்புக்கு: rajendran@qrius.in