

பெண் குழந்தைகளுக்கு கேன்சர் வராம தடுக்கற தடுப்பூசி பத்தி ஒரு வீடியோ எனது மகள் படிக்கும் பள்ளியில போட்டுக் காமிச்சிருக்காங்க...அந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கவும் அட்வைஸ் பண்ணியிருக்காங்க. புதுசா இருக்கறதால, இந்த கேன்சர் தடுப்பூசி பத்தி கொஞ்சம் புரியும்படியா தகவல்களை சொல்ல முடியுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார் 9-ம் வகுப்பு படிக்கும் சவிதாவின் தாயார். சமீபத்தில் இந்தியாவின் முன்னணி தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமான சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா மத்திய அரசாங்கத்துடன் இணைந்து வெளியிட்ட பருவப் பெண்களுக்கான செர்வவேக் (cervavac) ஹெச்பிவி வேக்சின் எனும் கேன்சர் தடுப்பூசி குறித்த தொலைக்காட்சி பதிவையும் காணொலியையும் நம்மில் பலர் பார்த்திருப்போம். ஆனால், இது எதற்காக, எப்போது, யாருக்கு, எவ்வளவு எனும் சவிதாவின் தாயார் உள்ளிட்ட நம் அனைவரின் கேள்விகளுக்கான பதில்களை இப்போது பார்ப்போம்.
ஹெச்பிவி வேக்சின் எனும் கேன்சர் தடுப்பூசியைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு முன் நாம் முக்கியமாகத் தெரிந்து கொள்ள வேண்டியது ஹூயூமன் பேப்பில்லோமா வைரஸ் (Human Papilloma Virus) எனும் நோய்த்தொற்று குறித்து தான். மற்ற வைரஸ்கள் போல் இதுவும் ஒரு தொற்றுநோயை உருவாக்குவதுடன் மற்ற வைரஸ் நோய்கள் போலவே இந்தத் தொற்றும் தானாகவே சரியாகும் இயல்புள்ளது. அப்படியிருக்க ஏன் இவை அதிகம் பேசப்படுகின்றன என்பதற்கு இவற்றைப் பற்றி இன்னும் அதிகம் எடுத்துரைக்கின்றனர் நுண்ணுயிரியலாளர்கள்.
பன்னெடுங்காலமாக மனிதர்களை பாதித்து வரும் இந்த (Human Papilloma Virus) ஹெச்பிவி வைரஸ்களில் ஏறத்தாழ200 வகைகள் இதுவரை கண்டறியப்பட்டுள்ளன. அவற்றுள் HPV 6, 11 போன்ற Low Risk HPV வகைகள் பிறப்புறுப்புகளிலும் உதடுகளிலும் சாதாரண மருகுகளை (genital warts) ஏற்படுத்தக் கூடியவை. மறுபுறம் HPV 16, 18, 31, 45 ஆகிய High Risk HPV வகைகள் மனிதர்களின் பிறப்புறுப்புகளில் புற்றுநோயையே ஏற்படுத்தக் கூடியன என்றும் கூறுகின்றனர் நுண்ணுயிரியலாளர்கள்.
(கேன்சர் தடுப்பூசி பற்றிய ஆசோனை தொடரும்)
- கட்டுரையாளர் : மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர்; தொடர்புக்கு: savidhasasi@gmail.com