

‘இடிமுழக்கம் மட்டும் இல்லையென்றால், மின்னல் வெட்டு மிகச் சாதாரணமாகப் போயிருக்கும்’ என்று கேப்டன் நீமோ சொல்வதாக ஜூல்ஸ் எழுதினார். உண்மையிலேயே ஜூல்ஸ் வேர்ண் மட்டும் இல்லையென்றால், புனைவு இலக்கிய வெளியில் காரசாரமற்ற கற்பனை வறட்சியான கதைகள் மட்டுமே எஞ்சியிருக்கும். 19ஆம் நூற்றாண்டில் அறிவியல் புனைகதைகளின் மன்னனாகத் திகழ்ந்து, உலகளவில் பெரும் அலை உருவாக்கிய சாகசக்காரர் ஜூல்ஸ் வேர்ணின் மாய உலகத்திற்குச் சென்றிருக்கிறீர்களா? கி.பி.1828ஆம் ஆண்டு, பிரான்ஸ் நாட்டிலுள்ள நாந்து எனும் ஓர் அழகிய தீவில் ஜூல்ஸ் பிறந்தார்.
கடற்கரையோரம் சரக்கு சுமந்து வரும் கப்பல்களை வீட்டிலிருந்து வேடிக்கைப் பார்த்தே வளரத் தொடங்கினார். ஜூல்ஸ் கடல்மேல் கொண்ட காதல், தொட்டிலில் இருந்து தொடங்கியது. பிற்பாடு இறுதிமூச்சுவரை கடல் பயணம் மேற்கொள்வதை வாழ்வின் அங்கமாகக் கடைப்பிடித்தார். 1846ஆம் ஆண்டு பள்ளிப் படிப்பை முடித்த கையோடு, தன் தம்பி பவுலுடன் சேர்ந்து கப்பல் கம்பெனியில் பணியாற்ற வேண்டுமென விரும்பினார். ஆனால், அதற்கு அவர் தந்தை பெர்ரி ஒத்துழைக்கவில்லை. தன் மகனும் தன்னைப் போல் ஒரு சட்ட மேதையாக வேண்டும் என விரும்பி, பாரீஸ் அனுப்பி வைத்தார்.
பாரீஸில் ஏற்பட்ட திருப்புமுனை: பாரீஸ் நகரம் ஜூல்ஸ் வாழ்க்கையில் பல மாற்றங்களை உண்டாக்கியது. இரண்டு ஆண்டுகளில் சட்டப்படிப்பை முடித்து, சட்ட நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து பெரும் வக்கீல் ஆவர் என்று எதிர்ப்பார்த்த பெர்ரியின் கனவு, வெறும் கனவாய் போனது. கவிதை, நாடகம்,பாடல் என்று பொழுதுக்கும் எழுதிக் கொண்டிருந்தார் ஜூல்ஸ். அக்காலத்தில் எழுத்தாளருக்கு பெரிய அங்கீகாரமோ, சம்பாத்தியமோ கிடையாது. இவ்விரண்டையும் பின்னாட்களில் ஜூல்ஸ் உடைத்தார். பாரீஸில் இருந்தபோது விக்டர் ஹியூகோ, அலெக்சாண்டர் டூமா போன்ற புகழ்பெற்ற எழுத்தாளர்களைச் சந்தித்து மேலும் தன் எழுத்துலகை விஸ்தாரமாக்கிக் கொண்டார். 1850இல் ஜூல்ஸ் எழுதிய கதை, முதல் முறையாக மேடை நாடகமாய் அரங்கேறியது. அடுத்த ஆண்டே, வானில் பயணிக்கும் பலூனை வைத்து மற்றொரு கதை எழுதி இதழில் வெளியிட்டார்.
நாவல் உலகில் பிரவேசம்: வக்கீல் தொழிலை நிந்தித்ததன் பொருட்டு, செலவுக்குப் பணம் அனுப்புவதை பெர்ரி நிறுத்திவிட்டார். ஸ்டாக் மார்க்கெட்டில் பணிசெய்து கொண்டே, விடாமல் எழுதினார் ஜூல்ஸ். பதிப்பாளர் பெர்ரி - ஜூல்ஸ் ஹெட்செல்லின் அறிமுகத்தால்தான் நாவல் உலகில் இவர் அடியெடுத்து வைத்தார். 1863இல் ‘ஃபை வீக்ஸ் இன் எ பலூன்’ என்றொரு அறிவியல் புதினத்தின் மூலம் ஜூல்ஸ் வாழ்வில் புதிய அத்தியாயம் தொடங்கியது. எட்கர் ஆலன் போ-வின் எழுத்துக்களால் அதிகம் ஈர்க்கப்பட்ட ஜூல்ஸ், திகிலூட்டும் மர்மக் கதைப்பின்னணி கொண்ட களங்களை அமைத்தார். நாவல் எழுதத் தொடங்கும் முன்பு, குறிப்பிட்ட நிலப்பகுதிக்கு சென்று வருவது அவர் வழக்கம். அதன்படி பல கடல் பயணங்கள் சென்றிருக்கிறார்.
(ஜூல்ஸை மேலும் தெரிந்து கொள்வோம்) கட்டுரையாளர்: எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், ஆய்வு மாணவர்; தொடர்புக்கு: iskrathewriter@gmail.com