

ஆன்லைன் செயலி கடன் கும்பல் ரம்யாவின் கழுத்தை சுற்றிய பாம்பாய் ஓயாமல் தொல்லை கொடுத்தது. அவரது செல்போனில் இருந்த எல்லா புகைப்படங்களை தரவிறக்கம் செய்து, ஆபாசமாக மார்ஃபிங் செய்து எல்லோருக்கும் அனுப்பி கொண்டே இருந்தனர். இதில் அவரின் குடும்பத்தார், நண்பர்களின் புகைப்படங்களும் இருந்ததால் பிரச்சினை பூதாகரமாக வெடித்தது. ரம்யாவின் வீட்டிலும், கல்லூரியிலும் இது பெரும் பிரச்சினையாக மாறியது. வீட்டிலும் வெளியிலும் பார்ப்பவர்கள் எல்லோரும் திட்டி தீர்த்தனர். அழுது தீர்த்தாலும் யாரும் விடுவதாக இல்லை.
வார்த்தைகளால் விவரிக்க முடியாத வலிக்கு ஆளானார் ரம்யா. ஆனாலும் ஆன்லைன் செயலி கடன் கும்பல் அவரை விடுவதாக இல்லை. ஓயாத தொல்லை தொடர்ந்தது. ஒரு கட்டத்தில், ரம்யா தன் வாழ்க்கையையே முடித்துக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டார். தற்கொலை எனும் மோசமான முடிவை நாடிய அவரை, நல்வாய்ப்பாக குடும்பத்தார் காப்பாற்றினர். மருத்துவமனையில் உயிருக்கு போராடிய நிலையில் இந்த பிரச்சினை போலீஸாரின் கவனத்துக்கு சென்றது.
முதலில் அன் இன்ஸ்டால்: வேலூர் சைபர் கிரைம் போலீஸார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். முதல் வேலையாக ரம்யாவின் செல்போனில் தரவிறக்கம் செய்யப்பட்டிருந்த கடன் செயலியை அன் இன்ஸ்டால் செய்தனர். அதன்பின்னர் கடன் செயலி கும்பல் தொடர்பு கொண்ட அனைத்து செல்போன் எண்களையும் பிளாக் செய்தனர். ஆனாலும் அழைப்புகள் தொடர்ந்ததால் அந்த வாட்ஸ் அப் செயலியையும் அன் இன்ஸ்டால் செய்தனர். பின்னர் சிம் கார்டையும் அகற்றினர். ரம்யா பணம் செலுத்திய செயலி மூலமாக குற்றவாளிகள் 6 பேரை கைது செய்தனர். உத்தர பிரதேசத்தை சேர்ந்த இவர்கள் வேலூரில் முகாமிட்டு ஆன்லைன் கடன் செயலி மூலம் மோசடியில் ஈடுபட்டதை கண்டுபிடித்தனர். கைதானவர்களிடம் இருந்து நூற்றுக்கணக்கான செல்போன்களையும், ஆயிரக்கணக்கான சிம் கார்டுகளையும் பறிமுதல் செய்தனர். ரம்யாவைப் போல பாதிக்கப்பட்டோர் செலுத்திய பணத்தையும் மீட்டுக் கொடுத்தனர். இந்த பிரச்சினையில் இருந்து ரம்யா முழுவதுமாக மீண்டெழுந்தார்.
ரம்யாக்களின் கதை: ஆனாலும் அவரால் அதன் பாதிப்பில் இருந்து மீள முடியவில்லை. தீவிரமான உளவியல் பிரச்சினைக்கு ஆளானார். செல்போனை பார்ப்பதற்கே பயப்பட தொடங்கினார். அதனை தொடுவதற்கு கைகள் நடுங்கின. செல்போன் ரிங் சத்தம் கேட்டாலே அஞ்சி நடுங்கி அழுதார். இத்தனைக்காலம் செல்பி எடுத்து ரசித்துக்கொண்டிருந்த அவர், தன் புகைப்படங்களை பார்ப்பதையே வெறுத்தார். வீட்டைவிட்டு வெளியே வர பயந்தார். முகத்தை வெளியே காட்டவும் தயங்கினார். இரவும் பகலும் முக கவசத்துடன் இருந்தார்.
அவரது உளவியல் பிரச்சினையை தீர்க்க, தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருக்கிறார். இது ஒரு ரம்யாவின் கதை மட்டுமல்ல. அவரைப் போல நாடு முழுவதும் ஆன்லைன் செயலி கடன் கும்பலால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான ரம்யாக்களின் கதை.அவர்களின் நிலை ரம்யாவை விட மிகமோசமாக இருக்கிறது. இந்த கும்பலால்நூற்றுக்கணக்கானோர் உயிரை இழந்துள்ளனர். ஏராளமானோர் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். தமிழகத்திலே கடந்த 3 ஆண்டுகளில் 50க்கும்மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
பின்னணியில் சர்வதேச மோசடி கும்பல்: ஆன்லைன் கடன் செயலி கும்பல் நாடு முழுவதும் ஒரு சங்கிலி தொடர் போல் நீண்டிருக்கிறது. இந்த கும்பலுக்கு வெளிநாட்டு மோசடி நெட்வொர்க் உடன் தொடர்பு இருக்கிறது. அந்த நெட்வொர்க்கின் வழிகாட்டுதலின்பேரில் இந்த கும்பல் நாடு முழுவதும் மோசடியில் ஈடுபட்டு வருகிறது. இதற்காகவே தில்லு முல்லு நிறைந்த ஆன்லைன் செயலியை வடிவமைத்து, சட்ட விரோத பண பரிமாற்ற யுத்திகளையும் உருவாக்கியுள்ளது. இதன் மூலம் கடந்த ஓராண்டில் ரூ.500 கோடிக்கும் அதிகமான பணம் சீனாவுக்கு சென்று இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
(தொடரும்)
- கட்டுரையாளர் தொடர்புக்கு: vinoth.r@hindutamil.co.in