

வாகா என்ற பெயர் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் மிக முக்கியமானது. நம்முடைய பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் நகரையும் பாகிஸ்தான் பஞ்சாபின் லாகூரையும் இணைக்கும் எல்லை தான் வாகா. பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் பேருந்து சேவை கூட வாகா வழியாக இருந்திருக்கிறது. வாகா எல்லைக்கு என பல சரித்திரங்கள் உண்டு. இந்த பயணத்தில் எப்படியாவது வாகா சென்று வர வேண்டும் என்று தீர்மானித்து, அதற்கான வேலைகளைத் தொடங்கினோம்.
அமிர்தசரஸில் பொற்கோவில் தரிசனத்தை முடித்துவிட்டு, மறுநாள் மதியம் வாகா நோக்கி நம் பயணத்தைக் தொடங்கினோம். அமிர்தசரஸில் இருந்து அட்டாரி வாகா எல்லை சுமார் நாற்பது கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. வாகா எல்லையில் தினந்தோறும் இந்திய ராணுவ வீரர்கள் மற்றும் பாகிஸ்தான் ராணுவ வீரர்களின் அணிவகுப்பு நடைபெறும். மாலை நான்கு மணிக்கு மேல் இந்த அணிவகுப்பு தொடங்கும். அதற்கு முன்னர் சென்றால் தான் நம்மை உள்ளே அனுமதிப்பார்கள்.
மெய்சிலிர்க்க வைத்த அணிவகுப்பு: சரியான நேரத்துக்கு உள்ளே சென்று, மொத்த அணிவகுப்பையும் பார்க்கும் விதமாக சரியான இடத்தை தேர்வு செய்து உட்கார்ந்தோம். எல்லைக்கு மேற்கே பாகிஸ்தான், இந்த பக்க எல்லையின் இருபுறமும் மக்கள் வெள்ளம். அதற்கு நடுவில் நம் எல்லை பாதுகாப்பு படை வீரர்களின் மெய்சிலிர்க்க வைக்கும் அணிவகுப்பு தொடர்ச்சியாக நடைபெறும். நம் ராணுவ வீரர்கள் அணிவகுப்பின்போது சத்தம் எழுப்பும் போதெல்லாம் அங்கிருந்த மொத்த மக்களும் 'ஜெயஹிந்த்' என்று கோஷம் எழுப்பி, அந்த இடத்தையே உணர்ச்சிப்பிழம்பில் வைத்திருந்தார்கள்.
அதிக கூட்டம், அஸ்தமனத்துக்கு முன் வெயில் கொளுத்திக்கொண்டு இருந்தது. எடுத்துவந்த தண்ணீரும் காலியாகிவிட்டது. அணிவகுப்பு தொடங்கியதும் தண்ணீர் பாட்டில், தின்பண்டங்கள் எல்லாம் நாம் இருக்கும் இடத்துக்கே வந்து விற்கிறார்கள். வெயிலை சமாளிக்கும் விதமாக கிளம்பி செல்ல வேண்டும், இல்லையெனில் கொஞ்சம் கஷ்டம் தான். இந்த வெயிலிலும் இரு நாட்டு வீரர்களும் அணிவகுப்பை தொடர்ந்து கொண்டிருந்தார்கள். இருபக்கங்களிலும் அவரவர் தேசப்பற்றை போற்றும் வகையில் பாடல்கள் ஒலித்துக் கொண்டிருந்தது.
அணிவகுப்பின் போது, எல்லைக்கதவு திறக்கப்பட்டது. மொத்த கூட்டமும் ஆர்ப்பரித்தது. அணிவகுப்பு முடிந்ததும், இரு நாட்டின் கொடிகளும் இறக்கப்படும். அதன்பிறகு அங்கு வந்த பெண்களை மட்டும் ராணுவத்தினர் எல்லைக்கதவு வரை செல்ல அனுமதித்தனர். நூற்றுக்கணக்கான பெண்கள் இந்தியக் கொடிகளை ஏந்தியவாறு மகிழ்ச்சியுடன் அந்த வாகா எல்லை சாலையில் நடனமாடினார்கள். இந்த அணிவகுப்பைப் பார்க்க பல வெளிநாட்டினர் வந்திருந்தனர். அவர்களும் இந்திய கொடிகளை ஏந்தி மக்கள் வெள்ளத்தில் ஆடிக்கொண்டிருந்தார்கள்.
எல்லை ஆனது எப்படி? - வாகா எல்லை நமக்கு எந்தளவு முக்கியமோ, அதுபோலத்தான் பாகிஸ்தானுக்கும் முக்கியம். இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் தனித்தனியாக பிரிய முடிவு செய்தன, சுதந்திரத்தின்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் தனியாக பிரிக்கப்பட்டபோது இந்த வாகா கிராமம் தான் எல்லையாக நிர்ணயிக்கப்பட்டது. இங்கிலாந்தைச் சேர்ந்த வழக்கறிஞரான சிரில் ராட்கிளிஃப் இந்த எல்லையை நிர்ணயித்ததில் முக்கிய பங்கு வகித்தார். கிழக்கு வாகா இந்தியாவுக்கும் மேற்கு வாகா பாகிஸ்தான் நாட்டுக்கும் என வகுக்கப்பட்டது. அந்த வழக்கறிஞர் நினைவாக, இந்த எல்லை கோட்டுக்கு ராட்கிளிஃப் கோடு என பெயர் வைக்கப்பட்டது. இந்த வாகா எல்லை இந்தியாவின் அம்ரித்ஸரில் இருந்து 32 கிலோ மீட்டர் தொலைவிலும் பாகிஸ்தானில் லாகூரில் இருந்து 24 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.
அணிவகுப்பு முடிந்து வெளியே வந்ததும், இரும்பு வேலிகளுக்கு அந்தப்பக்கம் இருக்கும் பாகிஸ்தான் மக்களுக்கு நாமும் பதிலுக்கு அவர்களும் கையசைத்து அன்பைத் தூரத்தில் இருந்து பரிமாறிக்கொண்டனர். கிட்டத்தட்ட ஐந்து மணிநேரம் இந்தியராணுவத்தின் தியாகத்தையும் மகத்துவத்தையும் இன்னும் அதிகம் தெரிந்துகொண்ட திருப்தியில் அமிர்தசரஸ் நோக்கி கிளம்பினோம். அடுத்து காஷ்மீர் தான்.. இந்த பயணத்தின் மிக முக்கிய மைல்கல்லாக நினைத்திருந்த இடத்துக்கு அருகே வந்துவிட்டோம். நாளை காஷ்மீருக்கு கிளம்ப வேண்டும்.
- கட்டுரையாளர்: இதழியலாளர், பயணப் பிரியை; தொடர்புக்கு: bharaniilango@gmail.com