

பாலுந் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலுங் கலந்துனக்கு நான்தருவேன் - கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்
சங்கத் தமிழ்மூன்றுந் தா
என்று அழகான சந்தத்தோடு பாடி, தங்கைக்கு அந்தப் பாடலை மனப்பாடம் செய்ய உதவிக் கொண்டிருந்தாள் குழலி. ஒரே பக்தி மயமா இருக்கு என்றவாறு வந்தமர்ந்தான் சுடர்.
குழலி: பக்தியா... பாடம் சுடர். பாப்பாவுக்கு மனப்பாடப் பகுதியில இருக்கு. அதான் சொல்லிக்கொடுத்திட்டிருந்தேன். இந்தப் பாட்டு யாரோடதுன்னு தெரியுமா உனக்கு...
சுடர்: நம்ம ஔவையார் எழுதினதுதான.
குழலி: ம்... இந்தப் பாட்டு ஔவையாரோட நல்வழியில கடவுள் வாழ்த்துப் பாட்டா இருக்கு.
சுடர்: இந்தப் பாட்டு நீதி நூல் காலத்து ஔவை எழுதினது தான.
குழலி: ஆமா சுடர். ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நல்வழி, மூதுரைன்னு நீதி நூல்கள எழுதின ஔவைதான் விநாயகர் அகவலையும் எழுதினதாச் சொல்றாங்க.
சுடர்: ஔவைன்னா என்ன பொருள்னு கேட்டியே...
குழலி: ஔவைங்கிற சொல், அவ்வாங்கிற சொல்லில இருந்து வந்ததாம். இன்னைக்கும் சில பகுதிகள்ல அவ்வான்னு பாட்டியக் கூப்பிடுறாங்க. தெலுங்குல கூட அவ்வான்னா பாட்டின்னு தான பொருள். அதனால ஔவைன்னா முதிய பெண். இன்னொரு செய்தியும் உண்டு. இளம் வயசுலேயே அறிவுல சிறந்திருக்கிற பெண்ணுக்கு ஔவைன்னு பட்டம் கொடுத்தாங்களாம். இப்ப கலைமாமணி, கலைஞர், டாக்டர்னு பட்டம் கொடுக்குறாங்களே. அந்த மாதிரி...
சுடர்: அப்படின்னா, நீ சொல்ற மாதிரி நிறைய ஔவைகள் இருந்திருப்பாங்கதான்.
குழலி: ஆமா சுடர். சங்க இலக்கியத்துல புறநானூறு, அகநானூறு, நற்றிணை, குறுந்தொகைன்னு ஔவை எழுதினதா 59 பாடல்கள் இருக்கு. சங்க கால ஔவை ஒரு பாடினி.
சுடர்: பாடினியா...
குழலி: பாணர் குடியில பிறந்த பெண். பாணன்னு ஆண்களச் சொல்வாங்க. பெண்களப் பாடினின்னு சொல்வாங்க. பாணர்னா யாருன்னு தான நீ கேட்கப் போற...
சுடர்: நீயே கேள்வியும் நீயே பதிலுமா...
குழலி: அந்தக் காலத்துல இசை, கூத்து, கவிதை பாடுறதுன்னு கலைகள வளர்க்குறதுக்குன்னே ஒரு சமூகத்தினர் இருந்தாங்களாம். மன்னர்கள் போருக்குப் போகும்போது இந்தக் கலைஞர்களும் கூடவே போவாங்களாம். மன்னன் வெற்றி அடையறப்ப பாடி, கூத்து நடத்தி, இசைக் கருவிகள வாசிச்சு மகிழ்விப்பாங்களாம். மன்னனையும் அவன் நாட்டையும் பாடிப் பரிசில் பெறப் போவாங்களாம். அவங்கதான் பாணர்கள், பாடினிகள்.
சுடர்: பரிசில் பெறுவதச் சொல்றதுக்கும் துறை வகுத்திருக்காங்க. பரிசில் துறைன்னு...
குழலி: சரியாச் சொல்ற...
சுடர்: ஔவை பாடின ஒரு பரிசில் துறைப் பாட்டு எனக்குத் தெரியும். அதோட ஔவை எவ்வளவு சுயமரியாதையும் தன் புலமை மேல பெரும் நம்பிக்கையும் கொண்ட புலவரா இருந்தாங்கன்னும் தெரியும்.
குழலி: அதியமான் நெடுமான் அஞ்சி பரிசில் தரக் காலம் தாழ்த்தினாங்கிற சூழல்ல பாடப்பட்ட பாட்டுதானே அது.
சுடர்: ம்... அதே பாட்டுத்தான். வாயிலோயே! வாயிலோயே!ன்னு தொடங்குற புறநானூற்றுப் பாட்டு. நெடுநேரமாகியும் தன்னைப் பார்க்காமல், அதியமான் புறக்கணிக்கிறான்னு கோபத்தோட வாயில் காக்கிற வீரன்கிட்ட, 'மன்னர்களோட காது குளிரப் பாடல்களப் பாடி உள்ளத்தில் விரும்பியதைப் பரிசாகப் பெறும் திறனுடைய புலவர்கள் பரிசிலுக்காகக் காத்திருக்காங்க. அப்படிப்பட்ட புலவர்களுக்கு எப்போதும் அடைக்காத கதவுகளை உடைய அதியமான், என்னோட தகுதியை அறியாதவனா, இல்லை தன் தகுதியை அறியாதவனா... அறிவும் புகழும் உடைய சான்றோர்கள் பிழைக்க வழியில்லாம இறந்துட்டாங்கன்னு சொல்ற அவல நிலை இன்னும் இந்த உலகத்துக்கு வரல.
நான் கிளம்புறேன், நல்ல மர வேலை தெரிந்த தச்சனின் பிள்ளைகள் காட்டில எந்தத் திசைக்குப் போனாலும், அங்க கிடைக்கிற மரத்தை வைச்சுத் தனக்கு வேண்டியதச் செய்திடும் திறன் உடையவங்க. அது போலத் திறமை இருக்கிறவங்க எந்தத் திசைக்குப் போனாலும் அவங்களுக்குத் தேவையான உணவை, வாழ்றதுக்குத் தேவையான சூழல உருவாக்கிக்க முடியும். இதை மறக்காம உன் மன்னன்கிட்ட சொல்லு'ன்னு ஔவையார் பாடின பாட்டு.
குழலி: அருமை சுடர். எவ்வளவு கம்பீரம். அறிவின் ஆளுமை அழகுதானே.
- கட்டுரையாளர்: தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர்; தொடர்புக்கு: janagapriya84@gmail.com