கதை கேளு கதை கேளு 48: கரடியிடம் ஒரு கதை இருக்கிறது

கட்டுரையாளர்: குழந்தை நேய செயற்பாட்டாளர், ஆசிரியர், அரசுப்பள்ளி, திருப்புட்குழி, காஞ்சிபுரம் தொடர்புக்கு: udhayalakshmir@gmail.com
கட்டுரையாளர்: குழந்தை நேய செயற்பாட்டாளர், ஆசிரியர், அரசுப்பள்ளி, திருப்புட்குழி, காஞ்சிபுரம் தொடர்புக்கு: udhayalakshmir@gmail.com
Updated on
2 min read

மூத்த சிறார் எழுத்தாளர் சுகுமாரனின் 'கரடியிடம் ஒரு கதை இருக்கிறது' புத்தகம், குழந்தைகள் படித்துவிட்டு நடித்துப்பார்க்கவும், பிறருக்குச் சொல்லி மகிழவுமான கதைகளைக் கொண்டிருக்கின்றன.

கழுதைக்காது ரிக்கி: ரிக்கி எனும் தெரு நாய்க்குட்டியை வளர்ப்பதற்கு அம்மாவிடம் அனுமதி பெறுகிறாள் இந்து. மற்ற தெரு நாய்கள் உணவுக்குத் திண்டாடும்போது, மாடி வீட்டில் வளரும் தன் நிலை குறித்து ரிக்கி யோசிக்கிறது. நன்றி உணர்வுடன் நடந்துகொள்கிறது. காலை மாலை இருவேளையும் வாக்கிங் செல்லும் ஜானகி அம்மாள் ரிக்கியையும் உடன் அழைத்துச் செல்வார். தெருநாய்களுள் கருப்பன் நாயை, ரிக்கி நண்பனாக நினைக்கிறது. ஒரு நாள் மாலை கருப்பன் மீது கார் மோதுவது போல வரவே, கருப்பனை எச்சரிக்கை செய்ய ரிக்கி பாய்கிறது, அப்போது காரின் அடியில் ரிக்கிஅடிபடுகிறது.

ரிக்கியின் காது நசுங்கிவிடுகிறது. காது போனதில் ரிக்கிக்கு கவலை ஏதுமில்லை. ஆனால் ஒத்த காது ரிக்கியை வளர்க்க இந்துவுக்கு விருப்பமில்லை. தெருவுக்கு வந்துவிட்டது ரிக்கி. கருப்பன்தான் ஆதரவு தருகிறான். இந்துவின் வெறுப்புக்கு ஆளான ரிக்கி, தன் காதினை மீட்க, மருத்துவரிடம் செல்கிறது. மருத்துவர் ரிக்கிக்கு உதவ நினைக்கிறார். ஆனால் கழுதைக் காதுரிக்கியாக, ரிக்கி எப்படி மாறியது. கதையை புத்தகத்தில் படிக்க சுவாரசியமாக இருக்கும்.

கரடியிடம் ஒரு கதை இருக்கிறது: காட்டில் உள்ள நூலகத்துக்கு கரடியார்தான் நூலகர். விலங்குகளை நூல்கள் வாசிக்க வைக்க விதவிதமாக விளம்பரம் செய்வார் கரடியார். விலங்குகள் அதைக் கேட்டு நூலகத்துக்கு வந்து, அதிகமான நூல்களை எடுத்துச் சென்று வாசித்ததால், சிறந்த நூலகர் என்ற பட்டமும் கிடைத்தது கரடியாருக்கு. இப்போது சில நாட்களாய் கரடியாருக்கு ஒரு கவலை. நூல்களை எடுத்துச்சென்ற விலங்குகள், வாசித்தபிறகு நூல்களை திருப்பவே இல்லை.

மகிழ்ச்சியான வகுப்பறை: நூலகர் கரடியார் வருடாந்திர கணக்கைச் சரிபார்த்ததில் ஏகப்பட்ட நூல்களைக் காணவில்லை. காணாமல் போன நூல்களை குறித்து வைத்துக் கொண்டு கவலையோடு இருக்கும் கரடியார்,நரியை பாதையில் சந்திக்கிறார். என்ன கவலை என்ன அக்கறை காட்டும் நரியிடம் கவலைக்கான காரணங்களை சொல்கிறார் கரடியார். நரி தான் உதவுவதாக கூறவே, காணாமல் போன புத்தகப்பட்டியலை நரியிடம் கொடுக்கிறார் கரடியார். நரி புத்தகங்களை தேடிக் கண்டுபிடித்த கதை விறுவிறுப்பான பகுதி. வகுப்பறையில் ஒவ்வொரு விலங்கின் முகமூடி அணிந்துக்கொண்டு இந்தக் கதையை நடிக்கச் செய்தால், குழந்தைகளுக்கு மகிழ்ச்சியான வகுப்பறைச் செயல்பாடாக இருக்கும்.

அம்மாவுக்கு கதை சொல்லப் போறேன்: குழந்தைப் பருவத்தில் அம்மா தாலாட்டியும், கதை சொல்லியும் வளர்கிறார்கள் குழந்தைகள். கதை சொல்லுதல் என்பது பெரியவர்கள் நடைமுறையாக நமக்கு பதிந்திருக்க, இந்தக் கதையில் குழந்தை ஒன்று தன் தாய்க்கு கதை சொல்கிறது. சின்ன வயதில் தனக்கு கதை சொல்லித் தூங்க வைத்த தாய், தற்போது மனச்சிக்கலில் அகப்பட்டு, எப்போது கதவடைத்துக் கொண்டு அறையில் தனித்திருப்பதை கவலையுடன் யோசிக்கிறது. குழந்தை பருவத்திலிருந்து வளர்ந்து வந்த சிறுமி. தாயின் கதை சொல்லலில் தான் மகிழ்ந்திருந்த காலத்தை அசைபோட்டு பார்க்கிறது.

மாறிப்போன தாலாட்டு: தன்னுடைய தாய்க்கு கதை சொல்ல லாமே, தனக்கு கதை கேட்கும்போது ஏற்பட்ட மகிழ்ச்சி, தாய்க்கும் ஏற்படும் என்ற நம்பிக்கை கொள்கிறது. அடைத்திருந்த கதவைத் திறந்து தாயைச் சந்திக்கிறாள். கதை கூறுகிறாள். இரவு உறங்கவைக்க ஒரு கதை கூறுகிறாள். உறக்கமில்லாதிருந்த தாய், அன்றைய தினம் கதையின் பாதியிலேயே உறக்கம் கொள்கிறாள். பொழுது விடிந்து பள்ளிக்குச் செல்ல தயாரான சிறுமி, தான் பள்ளி சென்று மாலை வருவதாக சொல்லித் திரும்பும்போது, அறையின் கதவை அடைக்க வேண்டாம் என்கிறாள் தாய். தாயின் மனநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தைக் கண்டு சிறுமி மகிழ்கிறாள். மாலை புதிய கதையுடன் வருவதாக துள்ளலுடன் பள்ளிக்குச் செல்கிறாள் சிறுமி. குழந்தைகளின் மனஉணர்வுகளைச் செதுக்கும் உளி கதைகள்தான்.கதை களைத் தேர்ந்தெடுத்து கூறி வருவது நல்ல சமுதாயத்தை அமைப்பதற்கான சிறந்த வழி.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in