

குழந்தைகள் அனைவருக்கும் இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள். நவம்பர் 14-ம் தேதி ஒவ்வொரு வருடமும் இந்தக் கொண்டாட்டம் நிகழும், பள்ளிகளில் நிச்சயம் கொண்டாட்டம் நிகழும். ஒரு விழாவைப் பள்ளி நிர்வாகம் ஏற்பாடு செய்யும். ஒவ்வொரு விழாவிலும் கணிதம் உண்டு. கணிதம் என்றால் வெறும் எண்கள் மட்டுமே அல்ல. தோராயக் கணக்கு, துல்லியக் கணக்கு, வரிசை படுத்துதல், செலவு கணக்குகள், திட்டமிடல், நேர ஆளுகை என எல்லாமே இருக்கிறது. இம்முறை மாணவர்களாகிய நீங்களும் இந்த விழா திட்டமிடலில் பங்குகொள்ளுங்கள். முதலில் விழாக் குழு ஒன்றை உருவாக்குங்கள்.
நேரம்: விழா எவ்வளவு நேரம் நடத்த அனுமதி? கடைசி இரண்டு பாடவேளைகள் எனில் சரியாக விழாவை முடிக்க வேண்டும், ஏனெனில் பேருந்து பிடிக்க வேண்டும் அல்லது குழந்தைகளை அழைத்துச்செல்லப் பெற்றோர்கள் வந்து காத்திருப்பார்கள், தனியார் வண்டிகள் காத்திருக்கும். அவர்களின் நேரத்தைத் தாமதப்படுத்தினால் மேலும் மேலும் அவர்களின் திட்டமிடலில் நெருக்கடி ஏற்படும். ஏன் ஆசிரியர்களுக்கே கூட சிக்கல்தான்.
ஆகவே எவ்வளவு நேர நிகழ்ச்சி என்று கேட்டறிந்து உள் நிகழ்வுகளைச் சரியாக திட்டமிடவேண்டும். வரவேற்புரை எவ்வளவு நேரம், யார் பேசுவது, நடனம் எவ்வளவு நேரம், தலைமை ஆசிரியர் உரை எவ்வளவு நேரம், சிறப்பு விருந்தினர் எவ்வளவு நேரம் பேச வேண்டும், சிறப்புநிகழ்வுகள், தனித்திறமைகளை வெளிப்படுத்து தல், ஒருங்கிணைப்பு நேரம் எனத் துல்லியமாகக் கணக்கிடுவது அவசியம். பள்ளி ஆசிரியர்களிடம் மொத்தம் எவ்வளவுமாணவர்கள் வருகிறார்கள் என்ற எண்ணிக் கையைப் பெறவும். எல்லோரையும் இடைஞ்சல் இன்றி அமர வைக்க வேண்டும். எல்லோருக்கும் மேடை தெரிய வேண்டும். அதுபோல அமர வைப்பது அவசியம். அதே போலச் சின்ன வகுப்பு மாணவர்களை முன்னே அமர வைக்க வேண்டும்.
எல்லோருக்கும் இருக்கை, பெஞ்ச் போட இயலுமா அல்லது எல்லோரையும் தரையில் அந்த இடத்தில் அமர வைக்க முடியுமா எனச் சின்ன கணக்கு போட வேண்டும். ஏனெனில் எல்லா வகுப்பு மாணவர்களின் எண்ணிக்கையும் நம் கைகளில் இருக்கிறது. இன்னொன்றையும் முடிந்தால் செய்யுங்கள். ஒரு வாரத்தில் மொத்தம் எத்தனை மாணவர்கள் விடுமுறை எடுத்துள்ளனர் என்ற சராசரியைக் கண்டுபிடியுங்கள். 500 மாணவர்கள் இருக்கின் றனர் எனில் ஒரு நாளைக்கு 25 மாணவர்கள் விடுமுறை எடுக்கின்றனர் எனில் எத்தனை சதவிகித மாணவர்கள் வரவில்லை? இந்தக் கணக்கு இருக்கைகளை எங்கே போடுவதற்கு என்பதற்கு உதவும்.
செலவு: ஒவ்வொரு விழாவிற்கு நிச்சயம் குறைந்த பட்சம் செலவாகும். ஆசிரியர்களுடன் சேர்ந்துஒரு குழுவாக மொத்தம் என்னென்ன செலவுகள் என முன்னரே எழுதிவிடவும். குழந்தைகளுக்கான இனிப்பு, ஆசிரியர்களுக்கான தேநீர், சிறப்பு விருந்தினருக்குப் பரிசுப்பொருள், மேடை அலங்காரம், வெளியிலிருந்து ஒலிபெருக்கி ஏற்பாடு எனில் அதற்கான வாடகை, மேடை நிகழ்வுகளுக்கு மாணவர்களுக்கு தேவையான உபகரணங்கள், இப்படி ஒன்றுவிடாமல் பட்டியலிட்டு தோராயமான செலவுகளைப் பட்டியலிட்டு, முதல்வரிடம் ஒப்புதல் பெற்றுவிடுங்கள். அவருக்கும் இது உதவியாக இருக்கும். கூடவே பட்டியலிட்டதை செயல்பாடுகளாக மாற்றி யார் யார் எந்தச் செயலைச் செய்வது, யார் அதற்குப் பொறுப்பு என்றும் எழுதிவிடுங்கள்.
என்னென்ன தினங்களை கொண்டாடுவது, அதற்கு என்னென்ன முன்னேற்பாடுகள் தேவை, ஒவ்வொரு விழாவிற்கும் எந்தெந்த வகுப்புகள் பங்கேற்பார்கள் என்பதனை முன்கூட்டியே ஒரு குழு பட்டியலிடலாம். அதற்கு ஏற்ப பயிற்சிகளைக் குழந்தைகள் மேற்கொள்ள வசதியாக இருக்கும். இன்று சொல்லி மறுநாள் அவசர அவசரமாக மேடை ஏறுவதைத் தவிர்க்கலாம். குழந்தைகள் தின மட்டுமல்ல, இனி ஒவ்வொரு விழாவிற்கு ஒரு குழு அமைத்து இப்படித் திட்டமிட்டு ஒருங்கிணைத்தால் பணம், நேரம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தலாம், எல்லோரையும் மகிழ்விக்கலாம். திட்டமிட்ட செயல்பாடுகளே வெற்றிக்கான படிக்கட்டு கள். இதற்குக் கணிதமும் கணிதத் திறன்களும் வலு சேர்க்கும். சரி, இப்போது குழந்தைகள் தினத்தைச் சிறப்பாகக் கொண்டாடுங்கள்.
- கட்டுரையாளர்: சிறார் எழுத்தாளர், ‘மலைப்பூ’, ‘1650 முன்ன ஒரு காலத்திலே’ உள்ளிட்டவை இவரது நூல்கள். தொடர்பு: umanaths@gmail.com