

இன்றையக் குழந்தைகள் அலைபேசி மூலம் அதிவேகமாகத் தகவல்களைப் பரிமாறிக் கொள்கின்றனர். அதேநேரம், மொழிப் பயன்பாட்டில் வார்த்தைகள் சுருங்கி விட்டன. சகோதரர் என்பது சகோ அல்லது ப்ரோ ஆகிவிட்டது. வாக்கியங்கள் குறைந்துவிட்டன, உணர்வுகள் சின்னங்களாக மாறிவிட்டன. அன்பு போன்ற உணர்வுகளை வெளிப்படுத்த ஆர்டின் போன்ற எமோஜியை நம்பி இருக்கின்றனர். இத்தகைய கடிதப் பரிமாற்றத்தில் தகவல்கள் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. மேலும், பல நம்பகத்தன்மை அற்றவையே!?
குழந்தைகள் தினத்தைக் கொண் டாடும் வேளையில் நேருவின் கடிதங்கள் இந்தியாவிலும், அதற்கு அப்பாலும் உள்ள குழந்தைகள் மீது குறிப்பிடத்தக்கத் தாக்கத்தை ஏற்படுத்தின என்பதை கூறவேண்டிய அவசியம் உள்ளது. நேருவின் கடிதங்கள் முதன்மையாக வரலாறு, அறிவியல் மற்றும் கலாச்சாரம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளைப் பற்றி குழந்தைகளுக்குக் கற்பிப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தன. அவை குழந்தைகளின் அறிவையும், அவர்களைச் சுற்றியுள்ள உலகத்தைப் பற்றிய விழிப்புணர்வையும் விரிவுபடுத்த உதவின.
சமத்துவம், மதச்சார்பின்மை மற்றும் பன்முகத்தன்மை குறித்து பேசின. இந்த விழுமியங்கள் எல்லோரும் கண்ணியத்துடனும் மரியாதையுடனும் நடத்தப்படும் ஒரு இணக்கமான சமுதாயத்தின் கருத்தைக் குழந்தைகளிடம் ஊக்கு வித்தன. தனது கடிதத்தின் மூலம் குழந்தைகளிடையே தேசப்பற்று மற்றும் தேசஒற்றுமை உணர்வை நேரு விதைத்தார். பல குழந்தைகள் தேசத்தைக் கட்டியெழுப்பும் செயல்பாட்டில் தீவிரமாகப் பங்கேற்கவும், இந்தியாவின் வளர்ச்சிக்குப் பங்களிக்கவும் தூண்டப்பட்டனர்.
மடல்களால் உருவெடுத்த தலைமகள்: இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் கடிதங்கள் மற்றவர்களுக்கு மட்டுமல்ல, அவரது சொந்த மகள் இந்திரா காந்திக்கும் அழியாத தாக்கத்தை ஏற்படுத்தின. துல்லியமாக எழுதப்பட்ட இக்கடிதங்கள் இந்திராவுக்கும் விலைமதிப்பற்ற அறிவு, வழிகாட்டுதல் மற்றும் அன்பின் செல்வத்தை வழங்கின. நேரு தன் கடிதத்தில் தந்தைவழி பாசத்தைக் கலந்து முறையான ஞானத்தை காகிதத்தில் ஊற்றிஅனுப்பினார். ஆகவே, இக்கடிதங்கள் ஆர்வத்துடனும், நம்பத்தன்மையுடனும் விளங்கின. அவர் தனதுமகளுக்கு ஆட்சியின் நுணுக்கங்களைப் பற்றி கடிதங்கள் வழியாக கற்பிக்க முயன்றார். அவர் சிக்கலான அரசியல் சித்தாந்தங்களைத் தடையின்றி இந்திராவுடன் கதைகள் வழியாகக் கூறி, அவற்றை மனதில் ஆழமாகப் பதிய வைத்தார்.
அவரின் கடிதங்கள் இந்திராவுக்கு முக்கியமான வாழ்க்கைப் பாடங்களை கற்பிக்கும் தளமாக விளங்கின. நேரு பாலின சமத்துவத்திற்காக வாதிட்டார் மற்றும் பெண்களின் உரிமைகளுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படாத காலகட்டத்தில் முற்போக்கான விழுமியங்களுக்கு ஒருகலங்கரை விளக்கமாகத் திகழ்ந்தார். ஒவ்வொரு வார்த்தையிலும், கல்வி, அறிவு மற்றும் பச்சாதாபம் ஆகியவற்றின் சக்தியை வலியுறுத்தி, எல்லைகளை உடைத்து, எதிர்பார்ப்புகளுக்கு மேல் உயர தனது மகளைத் தூண்டினார்.
அவரது கடிதங்கள் ஒரு இணக்கமான மற்றும் உள்ளடக்கிய இந்தியா மீதான நம்பிக்கையை எதிரொலித்தன. நேருவின் கடிதங்கள் இந்திராவின் வாழ்வில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தின. கொந்தளிப்பான, சிக்கலான காலங்களில் தேசத்தை வழிநடத்தும் பணியை இந்திராகாந்தி ஏற்றுக் கொண்டார். நேருவின் கடிதங்களின் செல்வாக்கு இந்தியா-பாகிஸ்தான் போரின்போது இந்திராவின் வலுவான தலைமையில் பிரதிபலித்தது. சமூகநலத்திட்டங்களை இந்திரா வெற்றிகரமாகச் செயல்படுத்துவதில் அவரதுஅசைக்க முடியாத அர்ப்பணிப்பில் நேருவின் கடிதங்கள் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தன.
சக்திவாய்ந்த ஆயுதம்: நேருவின் கடிதங்கள் பெண்குழந்தைகளின் தன்னம்பிக்கையைத் தட்டியெழுப்பின. பாலின சமத்துவத்தை ஊக்குவித்தன. குழந்தைகள் கனவுகளைத் தொடர அவர்களைத் தூண்டின. நேருவின் பிறந்தநாளில் இந்திராவுக்கு எழுதிய கடிதங்களை வாசிப்போம். “உலகத்தை மாற்ற நீங்கள் பயன்படுத்தக் கூடிய மிக சக்திவாய்ந்த ஆயுதம் கல்வி” என்றநேருவின் கூற்றை உணர்ந்து கல்விபயில்வோம். அதற்காக, நண்பர்களுக்குக் கடிதங்களை எழுதமுயல்வோம். உங்கள் கடிதங்களை எதிர்பார்த்து…
- எழுத்தாளர், தலைமையாசிரியர், டாக்டர் டி. திருஞானம் தொடக்கப் பள்ளி, மதுரை.