

உலகம் முழுவதும் எல்லாத் துறைகளுக்கும் வேண்டிய ஆற்றல் புதைபடிம எரிபொருட்கள் மூலமாகவே பெரும்பாலும் கிடைக்கிறது எனப் பார்த்தோம். அதனைப் பயன்படுத்துவதன் மூலம் ஒவ்வொரு துறையும் எத்தனைச் சதவிகித பசுமைக் குடில் வாயுக்களை வெளியேற்றுகின்றன என்பதையும் கண்டோம். இத்தகைய கொடிய மாசுக்களை ஏற்படுத்தும் புதைபடிம எரிபொருளுக்கு மாற்றாக வேறு வழியில் ஆற்றலை உற்பத்தி செய்ய முடியுமா? பொதுவாக சுற்றுப்புறத்தில் உமிழப்படும் கார்பன் இயற்கையாகவே நீக்கப்படுகின்றன. இவற்றை Carbon sink என்கிறோம்.
நிலம் மற்றும் கடல் வாழ்தாவரங்கள், நுண்ணுயிர்கள் போன்றவை சுற்றுப்புறத்தில் இருந்து கார்பனை உறிஞ்சிக் கொள்வதால் இந்த நீக்கம் நடைபெறுகிறது. ஆனாலும் இன்றைய சூழலில் நாம் வெளியிடும் கார்பனின் அளவுக்கும், சுற்றுப்புறத்திலிருந்து கார்பன் நீக்கப்படும் அளவுக்கும் இடையேயான வித்தியாசம் மலைக்கும் மடுவுக்குமான அளவில் இருக்கிறது. 2021ஆம் ஆண்டு தரவுகளின்படி மனிதர்கள் வெளியிடும் கார்பன் அளவில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே இயற்கையாக நீக்கப்படுகிறது. மற்றவை வளிமண்டலத்திலேயே தங்கி மாசு ஏற்படுத்திக்கொண்டுதான் இருக்கின்றன.
இதனால் கார்பன் சமநிலையை (Carbon Neutrality) எட்டுவதே உலக நாடுகளின் இப்போதைய குறிக்கோளாக இருக்கிறது. கார்பன் சமநிலை என்பது சுற்றுச்சூழலில் கார்பனே உமிழப்படாத நிலை. ஆனால், நேரடியாக கார்பன் உமிழப்படாமலேயே இருப்பது சாத்தியமில்லை. சுற்றுப்புறத்தில் கார்பன் உமிழப்படுவதைக் குறைப்பதன் மூலமும், வெளியிடப்பட்ட கார்பனை சுற்றுப்புறத்திலிருந்து நீக்குவதன் மூலமும் கார்பன் சமநிலையை அடையலாம்.
உலக நாடுகள் 2050க்குள் கார்பன்சமநிலையை (Carbon neutrality) எட்ட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளன. இந்தியாவும் 2070 ஆண்டுக்குள் அந்த லட்சியத்தை அடைந்துவிடுவோம் என்று சொல்லியிருக்கிறது. ஆனால் யோசித்துப் பாருங்கள். உலக மக்கள் தொகைஅதிகரித்துக்கொண்டே இருக்கிறது.அப்படியென்றால் ஆற்றலுக்கான தேவையும் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கும். இத்தகைய நிலையில் கார்பன் உமிழ்வையும் கட்டுப்படுத்தி, அதேசமயம் மக்களின் தேவையையும் நிவர்த்தி செய்ய முடியுமா?
(தொடர்ந்து யோசிப்போம்)
- கட்டுரையாளர்: அறிவியல், சூழலியல், தொழில்நுட்பம் குறித்து எழுதி வரும் இளம் எழுத்தாளர். ‘மிரட்டும் மர்மங்கள்’ நூலாசிரியர்; தொடர்புக்கு: tnmaran25@gmail.com