

ஐசக் நியூட்டன், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், சார்லஸ் டார்வின், நெப்போலியன் பொனபார்ட், மார்க் டுவெய்ன், வின்ஸ்டன் சர்ச்சில்... அரிதான அறிவியல் கண்டுபிடிப்புகள், வலிமையான போர் தொழில், திறமையான எழுத்து, நேர்மையான ஆட்சி...என இந்தப் பெயர்களை நமது பாட புத்தகங்களில் வருடங்கள்தோறும் படித்துக் கொண்டே தான் இருக்கிறோம். ஆனால், இந்தப் பெயர்களையும் இவர்களது வியக்கத்தக்க செயல்களையும் தாண்டி இவர்கள் எல்லாருக்குமிடையே ஓர் ஒற்றுமை உள்ளது. இவர்கள் அனைவரும் குறைமாதக் குழந்தைகள் என்பது தான் அது.
ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா? ஆம்!இவர்கள் அனைவரும் இவர்களது அன்னையர்க்கு, குறிக்கப்பட்ட தேதிக்கு முன்பாக, அதுவும் ஓரிரு மாதங்கள் முன்பாகவே பிரசவித்தவர்கள். அத்துடன் பிறந்தது முதலாக சவால்களை எதிர்கொண்டு பெரும்சாதனைகளைப் படைத்தவர்கள். ஆனால், இவர்கள் பிறந்தவுடன் ஏற்பட்ட பல சவால்களை இவர்கள் யாரும் தனியாக எதிர்கொள்ளவில்லை. அந்தந்தக் காலகட்டங்களில் இவர்களது பெற்றோரும், இன்னும் குறிப்பாக இவர்களது மருத்துவர்களும் செவிலியர்களும் சேர்த்தே தான் பல சவால்களைச் சந்தித்துள்ளனர்.
இந்த அறிமுகத்துடன் ஓர் வரலாற்று நிகழ்வுக்குப் போகலாமா? அது 1951 ஆம் ஆண்டு. ராஜஸ்தான் மாநிலத்தின் அரசு மருத்துவமனை மகப்பேறு மருத்துவரான டாக்டர் உஷா தனது ஆய்வு விவரங்களை ஒரு கருத்தரங்கில் சக மருத்துவர்களிடையே சமர்ப்பிக்கிறார். அந்த மாநிலத்தில் பிறந்த குறைமாதக் குழந்தைகள் மற்றும் குறைந்த எடைக் குழந்தைகளில் ஏறத்தாழ 70-80% குழந்தைகள், உயிரிழந்ததைக் குறிப்பிட்ட அந்த ஆய்வுக் கட்டுரை, அதில் குறைந்த எடை என்பதை 1500 கிராமை அளவாகக் கொண்டிருந்தது.
நுரையீரல் வளர்ச்சியின்மை, தட்பவெப்பநிலை பாதிப்புகள், தாய்ப்பால் செரிமானமின்மை, வலிப்பு நோய், நோய்த்தொற்று, சிறுநீரகங்கள் செயலிழப்பு போன்ற பல்வேறு காரணங்களால் அந்த உயிரிழப்புகள் நிகழ்ந்ததாக கூறப்பட்டிருந்தது. உண்மையிலேயே அந்த நிலை தான் அப்போது தேசமெங்கும் நிலவியும் வந்தது. ஆனால், இந்த பல்வேறு மருத்துவக் காரணங்களை எல்லாம் தங்களது சமயோசித செயல்பாடுகளால் இன்று 600 கிராம், 700 கிராம் எடைக் குழந்தைகளைக் கூட எதிர்கால நியூட்டன்களாகவும் டார்வின்களாகவும் மாற்றியமைத்து வரும் பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் நல மருத்துவர்களுக்கு வித்திட்ட ஒரு மருத்துவர்களைப் பற்றி இந்த குழந்தைகள் தினத்தன்று தெரிந்துகொள்ள இருக்கிறோம்.
தேசத்தை வழிநடத்தியவர்: டாக்டர் ஜார்ஜ் கொஹிலோ. இந்தியா முழுவதும் மொத்தம் 12 பேர் மட்டுமே குழந்தைகள் நல மருத்துவர்களாகப் பயிற்சிபெற்றிருந்த 1928 ஆம் ஆண்டு எனும் காலகட்டத்தில், இந்தியாவின் முதல் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு வித்திட்டவர் தான் டாக்டர் ஜார்ஜ் கொஹிலோ. மகாராஷ்டிர மாநிலத்தின் புகழ்மிக்க பி.ஜே. மருத்துவமனையில் குழந்தைகள் நலப் பிரிவை முதன்முதலாக நிறுவி, அதன் தலைமை மருத்துவராகவும் பணிபுரிந்த இவர், குழந்தைகள் நலன் குறித்த முடிவுகளை எடுக்க, அந்தத் துறையைச் சார்ந்த மருத்துவ வல்லுனர்களால் மட்டுமே முடியும் என தீர்க்கமாக எண்ணினார்.
எண்ணியதைச் செயல்படுத்தும் விதமாக, 1944 ஆம் ஆண்டு, குழந்தைகள் நலனுக்கான பட்ட மேற்படிப்பை, (Diploma in Child Health) தான் பணிபுரிந்த மருத்துவமனையில் முதன்முதலாகத் தொடங்கி, அடுத்த தலைமுறையினர் குழந்தைகள் நல மருத்துவர்களாக உருவெடுக்க வித்திட்டார். தொடர்ந்து, 1950 ஆம் ஆண்டு, Indian Academy of Paediatrics (IAP) எனும் இந்திய குழந்தைகள் நல மருத்துவ அமைப்பைத் தொடங்கி, ஒவ்வொரு குழந்தை நல மருத்துவரின் செயல்பாடுகளையும் திட்டங்களையும் கலந்தாலோசிக்கும் கருத்தரங்குகளை முன்னெடுத்து நடத்தினார். குழந்தை நல மருத்துவத்தில் ஒரு தேசத்தையே முன் நடத்திச் சென்றதால் தான் டாக்டர் ஜார்ஜ் கொஹிலோ, இந்தியாவின் குழந்தைகள் நல மருத்துவத்தின் தந்தை என்றே அனைவராலும் அழைக்கப்படுகிறார். குழந்தைகள் நல மருத்துவத்தின் தந்தை தொடங்கி வைத்ததை வழிநடத்திச் சென்ற பெருமை அடுத்து வந்த இரு மருத்துவர்களைச் சாரும். அவர்களை பற்றி அடுத்த வாரம் தெரிந்து கொள்வோம்.
(மகிமை தொடரும்)
- கட்டுரையாளர் : மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர்; தொடர்புக்கு: savidhasasi@gmail.com