நானும் கதாசிரியரே! - 24: நேருவின் வாழ்க்கையை எழுதுவோம்!

நானும் கதாசிரியரே! - 24: நேருவின் வாழ்க்கையை எழுதுவோம்!
Updated on
2 min read

வரலாற்று கதை என்பது வேறு… வாழ்க்கை வரலாற்று கதை என்பது வேறு. அதாவது சோழர் காலத்தைப் பற்றியோ, பாண்டியர் காலத்தைப் பற்றியோ, நம் நாட்டுக்கு எப்படிச் சுதந்திரம் கிடைத்தது என்பது பற்றியோ எழுதினால் அது வரலாற்று கதை. ஆனால், சாதித்த ஒருவரின் வாழ்க்கையை எழுதுவது என்பது வாழ்க்கை வரலாறு ஆகும். தன் வாழ்க்கையை தானே எழுதிக்கொள்பவர்களும் உண்டு. காந்தியடிகள், அப்துல்கலாம் போன்றவர்கள் அப்படி எழுதியவர்களே. சிலர் வாழ்க்கையை பிறர் எழுதியும் உள்ளனர். அப்படி நாம் பிறர் வாழ்க்கை வரலாற்றை எழுதுவதற்கு முயன்றால் என்னென்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றிப் பார்ப்போம். உதாரணத்திற்கு இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஜவஹர்லால் நேருவின் வாழ்க்கையை எடுத்துக்கொள்வோம். வாழ்க்கை வரலாற்றை எழுதுவதில் பல வகைகள் இருக்கின்றன.

நேருவின் வாழ்க்கையை 1889ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14ஆம் தேதி பிறந்தார் என்று, அவர் பிறந்த நாள் முதல் வரிசையாக எழுதும் முறை இருக்கிறது. அப்படி எழுதும்போது, அவரின் பெற்றோர் பெயர், பிறந்த ஊர் உள்ளிட்ட விஷயங்களோடு தொடங்கி எழுதுவார்கள். அதன்பின், அவர் பள்ளி, கல்லூரியில் படித்தது, அடுத்து இங்கிலாந்து நாட்டுக்குப் படிக்கச் சென்றது பற்றி எழுதுவார்கள். அடுத்து, நம் நாட்டு விடுதலைக்காகப் போராடியதும் சிறை சென்றதும் குறித்த பகுதிகள் வரும். அதோடு அவரின் திருமண வாழ்க்கை பற்றியும் இடம்பெறும்.

அடுத்து, சுதந்திரம் கிடைத்ததும் நேரு முதல் பிரதமராக ஆற்றிய பணிகள் குறித்தும், அதற்கு அவர் எதிர்கொண்ட சவால்கள் பற்றியும் வரும். இறுதியாக அவரின் மரணம் குறித்து பகுதியோடு முடியும். இது வாழ்க்கை வரலாற்று முறையில் மிகவும் வழக்கமான முறை. இன்னும் சில முறைகளும் உள்ளன. அவற்றையும் நாம் முயன்று பார்க்கலாம்.

வேற மாதிரி எழுதலாம்! - நேரு தன் மகள் இந்திரா காந்திக்கு எழுதியகடிதங்கள் மிகவும் புகழ்பெற்றவை. அந்தக்கடிதங்கள் நலம் விசாரிப்போடு முடிந்துவிடக்கூடியவை அல்ல. அரசியல், இலக்கியம் என ஏராளமான விஷயங்களை எழுதியிருப்பார். அவற்றில் ஒரு கடிதத்தில் இருந்தும்கூட அவரின் வாழ்க்கை வரலாற்றை எழுதத் தொடங்கலாம். அங்கிருந்து முன்னும்பின்னுமாக அவரின் கதையை எழுதலாம். 1947, ஆகஸ்ட் 15 இந்தியாவுக்கு சுதந்திரம் அறிவிக்கப்பட்ட நாள். நேருவின் வாழ்க்கையில் மிக முக்கியமான நாள். இந்த நாளுக்கு முன், இந்த நாளுக்கு பின் என்று இரண்டாக அவரின் வாழ்க்கை வராற்றை எழுதலாம்.

இன்னும் சில வாழ்க்கை வரலாறுகள், ஒருவரின் மரணம் அடைந்த நாளில் இருந்து தொடங்கி பின்னோக்கி போவது போல எழுதப்படுகிறது. ஒருவேளை இந்திரா காந்தி தன் தந்தையை எப்படியெல்லாம் நினைத்துப் பார்ப்பார் என்று கற்பனையில் நேருவின் வாழ்க்கை வரலாற்றை எழுதலாம். நேருவின் நண்பர்கள் ஒவ்வொருவராக தன் நண்பரைப் பற்றி சொல்வதுபோல எழுதலாம். அதாவது பள்ளிப் பருவத்தில் உள்ள ஒரு நண்பர், நேருவின் பள்ளிக் காலத்தைப் பற்றியும் கல்லூரி நண்பர் கல்லூரிக் காலத்தைப் பற்றியும் இங்கிலாந்தில் கூட இருந்த ஒருவர் அந்தக் காலத்தைப் பற்றியும் கூறுவதைப் போலஎழுதலாம். அதேபோல, விடுதலைப் போராட்டத்தில் நேருவின் பங்கைப் பற்றி காந்தியும் திலகரும் எனத் தலைவர்கள் சொல்வதுபோல நேருவின் வாழ்க்கையைச் சொல்லலாம்.

இப்படி, நேருவின் வாழ்க்கை வரலாற்றை எழுதும் முறைகள் எதை வேண்டுமானாலும் நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். ஆனால், எந்த முறையைப் பின்பற்றினாலும் அவசியம் கடைபிடிக்க வேண்டியவை, ஒருபோதும் செய்துவிடக் கூடாதவை என்றும் சில விஷயங்கள் உள்ளன. அவை குறித்து அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.

- கட்டுரையாளர் : எழுத்தாளர், ‘ஒற்றைச் சிறகு ஓவியா’, ‘வித்தைக்காரச் சிறுமி’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்; தொடர்புக்கு: vishnupuramsaravanan@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in