முத்துக்கள் 10 - கட்டாய இலவசக் கல்விக்கு காரணமான மவுலானா ஆசாத்

முத்துக்கள் 10 - கட்டாய இலவசக் கல்விக்கு காரணமான மவுலானா ஆசாத்
Updated on
2 min read

இந்திய விடுதலை இயக்கத்தின் மூத்த தலைவரும், நவீனக் கல்வியின் சிற்பியுமான மவுலானா அபுல் கலாம் ஆசாத் (Maulana Abul Kalam Azad) பிறந்த தினம் இன்று (நவம்பர் 11). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் 10:

# புனித மெக்காவில் (1888) பிறந்தார். வங்காளத்தில் வசித்த குடும்பம் 1857 சிப்பாய் புரட்சியின்போது மெக்காவில் குடியேறியது. இவர் பிறந்த 2 ஆண்டுகளுக்குப் பிறகு குடும்பம் கொல்கத்தா திரும்பியது. 10 வயதிலேயே குரானைக் கற்றுத் தேர்ந்தார்.

# முதலில் தந்தையிடமும் பின்னர் வீட்டிலேயே ஆசிரியர்கள் மூலம் கணிதம், தத்துவம், உலக வரலாறு, அறிவியல் கற்றார். 12 வயதிலேயே இலக்கியப் பத்திரிகையில் கட்டுரைகள் எழுதினார். 16 வயதில் வாரப் பத்திரிகை, மாத இதழ் தொடங்கி நடத்தினார். 17 வயதுக்குள் இஸ்லாமிய உலகில் பயிற்சி பெற்ற ஆன்மிகவாதியானார்.

# பல மொழிகளில் புலமை பெற்றவர். வங்கப் பிரிவினையின்போது அரசியலில் நுழைந்தார். நாடு முழுவதும் சென்று உரையாற்றி, இளைஞர்களிடம் தேசபக்தியை உண்டாக்கினார். இவரது உரைகளில் இலக்கிய நயத்தோடு, புரட்சிக் கனலும் தெறித்தது.

# ஆங்கில அரசை எதிர்த்துப் போராடிய அரவிந்தருக்கு உறுதுணையாக இருந்தார். வங்கம், பிஹாரில் செயல்படுவதுபோன்ற ரகசிய இயக்கங்களின் கிளைகள் நாடு முழுவதும் பரவ வேண்டும் என வலியுறுத்தினார். இதற்காக நாடு முழுவதும் மாறுவேடத்தில் சென்று பணியாற்றினார்.

# ‘அல்ஹிலால்’ என்ற உருது வார ஏட்டைத் தொடங்கி, புரட்சிக் கட்டுரைகளை வெளியிட்டார். இந்த அச்சகத்தை அரசு 1915-ல் பறிமுதல் செய்த பிறகு, ‘அல்பலாக்’ என்ற ஏட்டைத் தொடங்கினார். இதையடுத்து, இவரை வங்காளத்தைவிட்டு வெளியேற அரசு உத்தரவிட்டது.

# பம்பாய், பஞ்சாப், டெல்லி, உத்தரப் பிரதேச மாகாண அரசுகளும் இவருக்குத் தடை விதித்தன. பிஹார் சென்றார். ஆறே மாதங்களில் கைது செய்யப்பட்டு 3 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்டு பலமுறை சிறை சென்றார்.

# திலகர், காந்தியடிகளை 1920-ல் சந்தித்தார். இந்திய தேசிய காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்தியா பிளவுபடுவதைத் தடுக்க தீவிரமாகப் பாடுபட்டார். நாடு சுதந்திரம் பெற்ற பிறகு அமைக்கப்பட்ட அரசில் கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டார். தேசியக் கொள்கைகளை வகுப்பதில் முக்கியப் பங்காற்றினார்.

# ஜாதி, மத, இனப் பாகுபாடின்றி அனைவரும் தரமான கல்வி பெற வேண்டும். 14 வயது வரை அனைத்துக் குழந்தைகளுக்கும் கட்டாய இலவசக் கல்வி அளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். ‘பிளாட்டோ, அரிஸ்டாட்டில், பிதாகரஸ் ஆகிய மூவரும் சேர்ந்த ஆளுமை இவர்’ என்று காந்தியடிகள் இவருக்குப் புகழாரம் சூட்டியுள்ளார்.

# இவரது தலைமையின் கீழ் 1951-ல் முதலாவது ஐஐடி கல்வி நிறுவனம், 1953-ல் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) பிரதமர் நேருவால் தொடங்கப்பட்டது. 20-ம் நூற்றாண்டின் தலைசிறந்த உருது எழுத்தாளராகப் போற்றப்பட்டார். கல்வித் துறைக்கு இவரது பங்களிப்பைப் போற்றும் வகையில் இவரது பிறந்த நாள், தேசியக் கல்வி தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

# இந்து - முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்திய இஸ்லாமியத் தலைவரும், சிறந்த கல்வியாளருமான அபுல் கலாம் ஆசாத் 70-வது வயதில் (1958) மறைந்தார். மறைவுக்குப் பிறகு 1992-ல் இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in