மாறட்டும் கல்விமுறை - 20: நாம் சாதா மனிதர்கள்; குழந்தைகள் மெட்ரோ மனிதர்கள்

மாறட்டும் கல்விமுறை - 20: நாம் சாதா மனிதர்கள்; குழந்தைகள் மெட்ரோ மனிதர்கள்
Updated on
2 min read

என் பேரக்குழந்தைக்கு இரண்டு வயது. எனக்கு அறுபத்தியிரண்டு வயது. அவருடைய சொல்வளமும் என்னுடைய சொல்வளமும் எறும்பும் யானையும் போன்றது. இருந்தாலும் நாங்கள் பேசிக்கொள்கிறோம். எங்களுக்கு இடையே கருத்துப் பரிமாற்றம் அழகாக நடக்கிறது. எந்தப் பிரச்சினையும் இல்லை. குறைந்த எண்ணிக்கைச் சொற்களால், குறைந்த வாக்கிய அமைப்புகளால் இது நடக்கிறது. எப்படி? பார்ப்போம்.

மகள் வெளியே சென்று வரும்போது தின்பண்டம் கொண்டு வருவதுபோல் புத்தகங்களையும் வாங்கி வருவார். அப்படி வாங்கிய புத்தகத்திலுள்ள படங்களைப் பார்த்து அதன் பெயரைக் கூறுவது பேத்திக்கு மிகவும் பிடித்த செயல். முதலில் பெயர் சொல்வார். பிறகு அதைப் பற்றிய தன் அனுபவத்தைப் பகிர்ந்துகொள்வார்.

சாதாவும் மெட்ரோவும்: ஒருமுறை புத்தகத்தை எடுத்துக்கொண்டு என்னிடம் வந்தார். ஒருபுத்தகத்தில் இரண்டு ரயில் வண்டிகளின் படங்கள் இருந்தன. ஒன்று வழக்கமான ரயில். மற்றொன்று மெட்ரோ ரயில். முதலில் வழக்கமான ரயிலின் படத்தைத் தொட்டு “இது…” என்று இழுத்துக் கூறியபடி என் முகத்தைப் பார்த்தார். இது என்ற ஒற்றைச் சொல்லே கேள்வியாக மாறும் அழகான சூழல் இது.

நான் “train” என்று பதில் கூறினேன். உடனே அவர் மெட்ரோ ரயிலின் படத்தைத் தொட்டுக்காட்டியபடி இது என்றார். நான் “Metro train” என்றேன். உடனே கீழேயுள்ள படத்தை மீண்டும் தொட்டுக்காட்டி “இது?” என்றார். நான்“train” என்றேன். அவர் திருப்தியடையவில்லை. மெட்ரோ ரயிலின் படத்தைத் தொட்டுக்காட்டி “இது மெட்ரோ டிரெயின்” பிறகு வழக்கமான ரயிலின் படத்தைத் தொட்டுக்காட்டி “இது…” என்றார். நான் சுதாரித்துக்கொண்டேன். “இது சாதா டிரெயின்” என்றேன். அவர் ‘ம்’ என்று அழுத்தி முனகிக்கொண்டு அங்கிருந்து அகன்றார். அந்த ‘ம்’ என்ற முனகலுக்கு “அதுதானே பார்த்தேன்” என்று பொருள்.

ஒரு வாரத்திற்குப் பிறகு அம்மாவின்மடியில் அமர்ந்துகொண்டு புத்தகங்களிலுள்ள படங்களைப் பார்த்துக்கொண்டிருந்தார். ஒரு பக்கத்தில் இரண்டு வேறுபட்ட ice creams இருந்தன. அம்மா கேட்க குழந்தை பதில் அளித்துக்கொண்டிருந்தார். ஒன்று“சாதா ice cream” என்று சொல்லிவிட்டு மகள் கேட்காமலே இரண்டாவது படத்தைத் தொட்டுக்காட்டி இது “metro ice cream.” என்றார். கேட்டுக்கொண்டிருந்த நாங்கள் எங்களையறியாமல் கரவொலி எழுப்பிவிட்டோம்.

எத்தனை எளிது; எத்தனை அழகு: குழந்தைகள் ஒரு கருத்தை நமக்குத் தெரிவிக்க வேண்டும் என்றுநினைத்தால் எப்படியாவது தெரிவித்துவிடுவார்கள். அந்தச் சூழலுக்கும் அவர்களுடைய விருப்பத்திற்கும் மிகவும்முக்கியமான இடம் உண்டு. குறைந்தசொல்வளம் கொண்டிருந்தாலும் அவர்கள் உருவாக்கும் புதிய தொடர்களுக்கு அப்படியோர் அழகிருக்கும். சில எடுத்துக்காட்டுகளைப் பார்ப்போம்.

தெருவில் நின்றுகொண்டிருந்த இரண்டு வயதுக் குழந்தை ஜெசிபி என்ற மண் மாந்தும் வண்டியைப் பார்க்கிறது. உடனே அம்மாவிடம், விரிந்த கண்களோடு “யானை வண்டி” என்றது. அப்படியொரு தொடரை அம்மா இதுவரை கேட்டதேயில்லை. ஆனால், அவருக்குக் குழந்தை என்ன சொல்ல வருகிறது என்று புரிந்துவிட்டது.

ஒருவரைப் பற்றி அடுத்தவருக்குச் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் அவருக்குப் பொருத்தமான பெயர்களைச் சூட்டுவதில் குழந்தைகள் மிகவும் சூட்டிகையானவர்கள். எப்போதும் கையில் சாவியோடு நடப்பவரை “சாவி மாமா” என்பதும், சென்னையிலிருந்து வந்திருப்பவர் “சென்னை மாமா” என்பதும் எவ்வளவு அழகான படைப்புகள்.

குழந்தைகள் ஒருபோதும் தங்களைக் குழந்தையென்று சொல்வதில்லை. அதிகத் தின்பண்டம் வேண்டும் என்று கேட்கும் சூழலிலோ, தனிக்கவனம் பெறவிரும்பும் வேளைகளிலோ அப்படிச் சொல்வார்களே தவிர உள்ளுக்குள் அவர்கள் தங்களைச் சின்னஞ்சிறு மனிதர்களாகத்தான் நினைக்கிறார்கள். அப்படித்தான் இருக்கிறார்கள். உண்மையில் நம்மைவிட நல்ல மனிதர்கள் அவர்கள்தாம்.

அதனால் நேரம் ஒதுக்கி அவர்களிடம் பழகுவதும், அவர்கள் விரும்பும்விஷயங்களைப் பற்றிக் கலந்துரையாடுவதும்தான் பெரியவர்கள் செய்யவேண்டியவை. ஆம். நாம் சாதா மனிதர்கள்; குழந்தைகள் மெட்ரோ மனிதர்கள்.

- கட்டுரையாளர்: மூத்த கல்வியாளர், கல்வி இயக்குநர், ‘Qrius Learning Initiatives’, கோவை; தொடர்புக்கு: rajendran@qrius.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in