தயங்காமல் கேளுங்கள் - 49: மச்சங்கள் வராமல் தடுக்க முடியுமா?

தயங்காமல் கேளுங்கள் - 49: மச்சங்கள் வராமல் தடுக்க முடியுமா?
Updated on
2 min read

மச்சங்கள் தோன்ற காரணமான மெலனோசைட்ஸ் செல்களின் வளர்ச்சியை ஹார்மோன்கள், குறிப்பாக ஈஸ்ட்ரோஜன்கள் பெருமளவு கட்டுப்படுத்துகிறது. இதனால்தான் பெண்களுக்குக் கர்ப்பகாலத்திலும் ஹார்மோன் மாற்றங்களிலும், மச்சங்கள் அடர்கருப்பாகவும், பெரிதாகவும் தோன்றுகிறது.

ஆனால், சூரியக்கதிர்கள் வெளியிடும் புற ஊதாக் கதிர்கள்தான் மச்சங்களின் வளர்ச்சியைப் பெரிதும் தூண்டுகின்றன என்றும் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் சிலருக்கு கரும்புற்றுநோய் கூட ஏற்படும் அபாயம் உள்ளது. ஆக, மச்சங்கள் பெருமளவில் கேடு விளைவிப்பதில்லை என்றாலும், ஏற்கெனவே உள்ள மச்சம் திடீரென வளர்வது போலத் தெரிந்தால் அதை உடனே கவனிக்க வேண்டும்.

குறிப்பாக பரவுகின்ற மச்சம், அரிப்புடன் கூடிய மச்சம், புண்ணாகின்ற மச்சம், அடிப்பாகம் தடிக்கும் மச்சம், அதிகம் கறுத்து வரும் மச்சம், அத்துடன் கைகால்களில் 20க்கும் மேலாகவோ, மொத்தமாக 50க்கும் மேலாகவோ மச்சங்கள் இருப்பின் மருத்துவ ஆலோசனை பெறுவதும், அதற்கான பரிசோதனை மற்றும் சிகிச்சைகள் பெறுவதும் அவசியம்.

அடுத்து, மச்சங்கள் வராமல் தடுக்க முடியுமா, வந்தவற்றை நீக்க முடியுமா, அப்படி நீக்கினால் தழும்புகள் ஏற்படுமா என்று தாரா கேட்ட இன்னொரு முக்கியமான கேள்வியைப் பார்ப்போம். புதிதாக மச்சங்கள் தோன்றாமல் இருக்க அதிகளவு தண்ணீர் பருகுவதும், வெயிலில் நீண்ட நேரம் நிற்காமல் இருப்பதும், வெளியில் செல்லும்போது சன் ஸ்கிரீன் லோஷன்கள் உபயோகிப்பதும் உதவும்.

ஏற்கெனவே உள்ள மச்சங்களுக்கு வேப்பிலை, மஞ்சள், கற்றாழை, பூண்டு, வினிகர், சமையல் சோடா, வாழைப்பழத் தோல், விளக்கெண்ணெய் போன்ற எண்ணற்ற வீட்டு உபயோகப் பொருட்களும் வீட்டு வைத்திய அறிவுரைகளும் மச்சங்களுக்கு வழங்கப்படுகிறது என்றாலும் உண்மையில் மெலனோசைட்களின் வளர்ச்சியை இவை எந்தவிதத்திலும் கட்டுப்படுத்தாது என்பதுடன் இவற்றில் சில தோல் அழற்சியையும் தழும்புகளையும் ஏற்படுத்தக் கூடும் என்பதே உண்மை.

மேலும் அறுவை சிகிச்சை மூலம் மச்சங்களை அகற்ற க்ரையோ தெரபி அல்லது லேசர் தெரபி அல்லது தெர்மல் அப்லேஷன் போன்ற பல வகையான நுண்ணிய அழகு சிகிச்சை முறைகள் உள்ளன. மச்சத்தின் அளவு மற்றும் அது இருக்கும் இடத்தைப் பொறுத்து, அதற்கு எந்த சிகிச்சை உகந்தது என்பதை தோல் நோய் நிபுணர்தான் இதில் முடிவு செய்வார்.

அப்படி மேற்கொள்ளும் சிகிச்சையிலும் தழும்புகள் இல்லா அறுவை சிகிச்சை என்பது அவரவர் உடல்வாகு மற்றும் ஆரோக்கியம் பொறுத்து ஒவ்வொருவருக்கும் மாறலாம் என்பதே இன்றைய நிலை ஆகும். ஆனால், வீட்டில் உள்ள ரேசர் பிளேட் அல்லது கத்தி கொண்டு நாமே மச்சத்தை நீக்க முயன்றால் கிருமித்தொற்றும் பெரும் தழும்பும் ஏற்படும் அபாயம் உள்ளது.

யோசித்துப் பார்த்தோமேயானால் அங்க அடையாளமாகக் காணப்படும் சில மச்சங்களை அப்படியே விட்டுவிடுவது தான் சாலச்சிறந்தது. அது தாரா என்றாலும் நயன்தாரா என்றாலும். அதேசமயம் வளரும் மச்சங்களை உதாசீனப்படுத்தாமல் மருத்துவ ஆலோசனை பெறுவது இன்னும் அவசியம்.

(ஆலோசனை தொடரும்)

- கட்டுரையாளர் : மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர்; தொடர்புக்கு: savidhasasi@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in